[ad_1]
“வடகொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு. என் மேஜையில் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான நியூக்ளியர் பட்டன் எப்போதும் இருக்கும்” வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் இப்படிச் சொல்லிவிட, அமெரிக்காவின் ட்ரம்ப் மட்டும் சும்மா இருப்பாரா?
“வடகொரியாவின் அதிபர் கிம், ‘எனது மேஜையில் எப்போதும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் இருக்கும்' என்று கூறியுள்ளார். என் மேஜையிலும் அதைப் போன்றே ஒரு பட்டன் இருக்கிறது என்று அவரிடம் யாராவது எடுத்துச் சொல்லுங்கள். என் நியூக்ளியர் பட்டன் மிகவும் சக்தி வாய்ந்தது. அது வேலையும் செய்யும்” என்று அவரும் சூடாக, இந்த இரண்டு முட்டாள்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டோமே என்று உலக நாடுகள் அனைத்தும் கலக்கத்தில் உள்ளன.
இவர்களின் அச்சுறுத்தும் பேச்சுக்களை கேட்கும்போது, நமக்கு கண்முன் தோன்றும் பிம்பம் என்னவாக இருக்கிறது? ஆக்ரோஷமான முகத்துடன் உயர்திரு ட்ரம்ப் பெருந்தகையோ, கிம் பெருந்தகையோ நான்தான் பெரியவன் என்று காட்ட, தங்கள் மேஜையின் மேல் உள்ள சிகப்பு நிற நியூக்ளியர் பட்டன் ஒன்றை அழுத்திவிட, இரண்டு நாடுகளையும் அணு ஆயுதங்கள் பெரியளவில் தாக்க… சரி, அதை விடுங்கள். அந்தச் சிகப்பு நிற பட்டன், அதாவது ஜனாதிபதி மேஜையில் இருக்கும் நியூக்ளியர் பட்டன், உண்மையாகவே இருக்கிறதா? இருக்கிறது என்றால், அதை ஒருமுறை அழுத்திவிட்டால் போதுமா? அணு ஆயுதங்கள் விண்ணில் ஏவப்பட்டு விடுமா? இதுபோல புதிரான கேள்விகளுக்கு விடைகள் இதோ…
பட்டன் வரலாறு
இந்தப் பட்டன் பஞ்சாயத்தும், பஞ்ச் வசனமும் அமெரிக்காவிற்கு ஒன்றும் புதிதல்ல. “பட்டனில் நான் கை வைத்திருக்கிறேன்” என்பது பல வருடங்களாக உலக அரங்கில் பேசப்படும் ஒரு வசனம்தான். இதன் ஆரம்பப் புள்ளி, இடைப்புள்ளி எல்லாவற்றையும் பார்த்து விடுவோம்.
இரண்டாம் உலகப்போர் சமயம். மேலே போர் விமானங்களில் இருந்து கொண்டு பாம்பர்கள் (Bombers) கீழே வெடிகுண்டு வீசுவார்கள். கீழேயிருந்து எதிரி நாட்டு வீரர்கள் விமானத்தைத் தாக்குவார்கள். அப்படித் தாக்கும்போது சில சமயம் விமானம் பெரியளவில் சேதாரம் அடைந்துவிடும். சரி, வீரர்களையாவது காப்பாற்றலாமே என்று அபாய மணி ஒன்றை பைலட் அழுத்துவார். பாம்பர்கள் அனைவரும் கீழே குதித்து விடுவார்கள். அந்த அபாய மணியை அழுத்தும்முன், “பட்டனில் நான் கை வைத்திருக்கிறேன்” என்று பைலட் அலறுவார். உடனே வீரர்கள் அனைவரும் தயாராகி விடுவார்கள். பின்னாளில், இது பயமூட்டுவதற்காக கூறப்படும் வசனங்களில் ஒன்றாகிவிட்டது.
முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், சக போட்டியாளர்களைப் பயமுறுத்த, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க இதை அதிகம் பயன்படுத்த தொடங்கினர். 1964ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன், தன்னை எதிர்த்துக் களமிறங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் பேரி கோல்ட் வாட்டர் அவர்களிடம் இப்படிக் கூறினார். “ஒரு சிறந்த தலைவன், அந்த ட்ரிக்கரை இழுக்கவே கூடாது. அந்தப் பட்டனை அழுத்தினால் உலகமே அழிந்துவிடும் அபாயமுள்ளது.”
வியட்நாம் போரின்போது, அமெரிக்கா முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வடக்கு வியட்நாமை சேர்ந்தவர்கள் தன்னை ஒரு கோபக்காரனாக பார்க்க வேண்டுமென்றே விரும்பினார். “இவருக்குக் கோபம் வந்தால், பட்டனை அழுத்தி விடுவார்” என்றே அவர்களும் நம்பினர். இவ்வளவு ஏன், கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட, ஹிலாரி கிளின்டன், “ட்ரம்பின் விரல்களுக்கு அந்தப் பட்டனும், அவர் கைகளுக்கு நம் நாட்டின் பொருளாதாரமும் கிடைத்துவிடக் கூடாது” என்றே பிரச்சாரம் செய்தார்.
அது என்ன பாஸ் பட்டன்?
அணு ஆயுதம் என்றாலே ஒரு பட்டன்தான். அதைத் தட்டிவிட்டாலே போதும், எல்லா ஆயுதங்களும் உடனே தாக்க தொடங்கிவிடும். ஆயுதங்கள் அனைத்தும் முன்னரே தயார் நிலையில்தான் இருக்கின்றன. உங்கள் அனுமானம் இதுவென்றால் அந்த எண்ணத்தை முதலில் அழித்து விடுங்கள். இதில் சிறிதளவும் உண்மையில்லை. ஏனென்றால் அப்படியொரு பட்டன் எந்த அதிபரின் மேஜையிலும் கிடையாது. அப்படியென்றால் அணு ஆயுதத்தை ட்ரம்ப் எப்படிதான் ஏவுவார்? அணு ஆயுத பலம் கொண்ட எல்லா நாடுகளுக்கும், அது கடைசி ஆயுதம் போலத்தான். அதற்கு உயிர்கொடுக்க ஒரு நாட்டின் தலைவன் பல சிக்கலான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ட்ரம்பை எடுத்துக் கொண்டால், முதலில் அணு ஆயுதத்தை ஏவுமாறு கட்டளையிடுவது ட்ரம்ப்தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்புதான் மாற்றவை எல்லாம்!
இங்கே உண்மையில் பட்டன் என்று எதுவும் இல்லை. ஒரு கைப்பெட்டி வேண்டுமானால் இருக்கிறது. அந்தக் கைப்பெட்டி ட்ரம்ப் எங்கே போனாலும் கூடவே செல்லும். ட்ரம்ப் என்றல்ல, அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அவரை இந்தப் பெட்டி பின்தொடர்ந்து செல்லும். அதிபரின் நேரடி கட்டளையின் கீழிருக்கும் ஐந்து இராணுவ உதவியாளர்களில் ஒருவர் அதை எப்போதும் தன் கையில் வைத்திருப்பார். 20.5 கிலோ எடையுள்ள அந்தக் கைப்பெட்டிக்குள் இருக்கிறது அணு ஆயுதத்தை விழிக்கச் செய்யும் வித்தை.
Photo Courtesy: Mark Wilson/Getty Images
அணு ஆயுதம் எப்படி இயக்கப்படும்?
அணு ஆயுதத்தை எப்படி இயக்குவது என்ற கையேடு மற்றும் இப்போதைய தொழில்நுட்பத்தின்படி இருக்கும் ஆயிரம் அணு ஆயுதத்தையும் வைத்து எந்தெந்த இடங்களை அமெரிக்கா தாக்க முடியும் என்ற விவரம் ஆகிய இரண்டும் இந்தப் பெட்டியில் இருக்கும். இதை இயக்க, அதிபராக இருக்கும் மனிதரிடம் ஒரு ‘கோட்’ (Code) கொடுக்கப்பட்டிருக்கும். அதை அவர் பதிவு செய்தால் மட்டுமே அணு ஆயுதங்களை ஏவ முடியும். இந்த ‘கோட்’ என்பது ஒரு கார்டில் பதியப்பட்டிருக்கும். அந்த கார்டின் ரகசிய பெயர் ‘பிஸ்கட்’ என்கிறார்கள்.
அமெரிக்காவின் அலட்சியம்
எல்லாம் சரி, இதை உண்மையாகவே அமெரிக்கா தன் பெரிய பலமாக நினைத்துச் செயல்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் அதன் வரலாறு பதில் தருகிறது. அமெரிக்க இராணுவத்தில் உயர் பதவி வகித்த ஜெனரல் ஹென்றி ஷெல்டன் அவர்கள் 2010ம் ஆண்டு தன் சுயசரிதையை வெளியிட்டார். இதில் ஓர் இடத்தில், இந்த பிஸ்கட் குறித்து ஒரு ரகசியத் தகவலை அம்பலப்படுத்தினார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், தன் ஆட்சிக்காலத்தின் இறுதியில் பிஸ்கட் கார்டை தொலைத்துவிட்டதாகவும், ஆனால் அதைப் பல மாதங்கள் யாரிடமும் கூறாமல் இருந்ததாகவும் ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் அமைப்பில் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது என்றால் அது பின்வரும் விஷயம்தான். அங்கே ஜனாதிபதி எனப்படும் அதிபர் வைக்கும் கட்டளைதான் சாசனம். அவர் அணு ஆயுதத்தை தன் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏவ நினைத்தால் கூட யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ், இராணுவம், மேல் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அதிபர் செய்யும் ஒரு சிறிய தவறு கூட அங்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வடகொரியாவில் எப்படி?
அமெரிக்காதான் ஆபத்தானது என்ற முடிவிற்கு நீங்கள் வருமுன், வடகொரியாவின் நிலையையும் பார்த்து விடுவோம். அது தன்னந்தனியாக வெளியுக தொடர்பிலிருந்து விலகியே இருப்பதால் அதன் அணுசக்தி திட்டம், கொள்கைகள், அணு ஆயுதங்களின் தற்போதைய நிலையென்ன, எதுவும் யாருக்கும் தெரியாது. அதன் அதிபர் கிம் ஜோங்-உன் ஊடகங்களுக்குக் கூறுவதே வேதவாக்கு. சில மாதங்களுக்கு முன்பு, பசிபிக் தீவுகளில் ஒன்றான குவாம் என்ற அமெரிக்க பிரதேசத்தை அணு ஆயுதம் கொண்டு தாக்கப்போகிறேன் என்று எச்சரிக்கை விடுத்தார். வடகொரியாவின் ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அமெரிக்காவை அழிக்கும் சக்தியுடையது, நொடியில் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுவேன் என்றெல்லாம் பயமுறுத்தினார். ஆனால், உண்மையில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அவர் மேஜையில் நியூக்ளியர் பட்டன் இருக்கிறதா என்பதும் சந்தேகமே.
Photo Courtesy: Korean Central News Agency
அணு ஆயுதப் போர் என்ற முடிவு எடுத்தபின்பு, ஏவுகணைகளைத் தயார் படுத்தவே பல மணி நேரங்கள் தேவை. காரணம், அணு ஆயுதங்கள் அனைத்தும் திரவ ராக்கெட் எரிபொருள் கொண்டு இயங்குபவை. அந்த எரிபொருளை நிரப்பி ஏவுகணையை எப்போதும் தயார் நிலையில் எல்லாம் வைத்து கொண்டிருக்க முடியாது. வேண்டியபோது அதை நிரப்புவது மட்டுமே சாத்தியம். இதனால் கிம் கூறுவது வெறும் பயமுறுத்தும் செயல் என்றே எடுத்துக் கொள்ள முடியும்.
அணு ஆயுதங்கள் வைத்து ஒரு பிரபலமான ஜோக் உண்டு. ஏலியன்கள் கூட்டம் ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் அவர்களை விட அறிவில் சிறந்த ஜீவராசிகள் உண்டா எனத் தேடுதல் வேட்டை நடத்துகிறது. பூமியை வந்தடைந்த பின்பு, மனிதர்களின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சி, முக்கியமாக அணு ஆயுதங்களைப் பார்த்தபின்பு, “ஆஹா! நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் இவர்கள்!” என்று நினைத்துக் கொள்கின்றது. சிறிது நேரம் பூமியை வட்டமடித்து பின்னர், அதில் ஓர் ஏலியன் இப்படிச் சொல்கிறது.
“நிச்சயம் இவர்கள் புத்திசாலியாக இருக்க முடியாது. அவர்களின் அணு ஆயுதங்கள் அனைத்தும் அவர்களின் பூமியை நோக்கி செல்லும் வகையில்தான் இருக்கின்றன. அவர்களே தங்கள் கிரகத்தின் பல்வேறு இடங்களைக் குறிவைத்து காத்திருக்கிறார்கள். இவர்களை விட மடையர்கள் யாருமில்லை. நாம் கிளம்பலாம்!”
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அமெரிக்க ட்ரம்ப், வடகொரிய கிம் பிதற்றும் நியூக்ளியர் பட்டன் உண்மையில் இருக்கிறதா?
TAGS :
COMMENTS