[ad_1]



கடந்த மூன்று மாதங்களில் ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வார்த்தை என்றால் அது #Metoo தான். திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல், பணியிடத்தில் பிரச்னை என பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை #Metoo ஹேஷ்டேக்கில் கொட்டி தீர்த்தனர். இதற்கு ஃபேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் விதிவிலக்கல்ல. கோல்டன் க்ளோப் மேடையில் விருது வாங்கிய ஓப்ரா வின்ப்ரேயின் உரை பாராட்டி பதிவிட்டுள்ள ஷெரில் சான்ட்பெர்க் “இந்த உரையின் அற்புதமான வரிகளை பாராட்ட வேண்டும் என்றால் எல்லா வரிகளையும் பாராட்ட வேண்டும். இந்த உரை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஹாலிவுட் பெண்களின் குரல் உலகம் முழுக்க ஒலித்திருக்கிறது. தரான புர்கே, ஏய்ஜீன் பூ ஆகியோருடன் கரம் கோர்த்து போராட வேண்டிய தருணம் இது என்று பதிவிட்டிருந்தார்.

சில வாரங்களுக்கு முன் ஷெரில் சான்ட்பெர்க் தனது பணியிடத்தில் தனக்கு நேர்ந்த மிக நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் விவரித்த சில சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பவையாக இருந்தன. “ஒரு முக்கியமான கலந்துரையாடலின் போது மேஜைக்கு அடியிலிருந்து ஒரு கை என் காலின் மீது இருந்தது, அந்த செயலில் ஈடுபட்ட நபர் திருமணமான ஆண், என்னை விடப் பல மடங்கு வயது மூத்தவர் இப்படி ஒரு காரியம் அந்த நேரத்தில் என்னை உறைய வைப்பவையாக இருந்துள்ளது, இன்னும் சிலர் என் பணியில் நான் மேன்மேலும் உயர ‘அறிவுரை’ தருவார்கள், ‘பணியில் சிறந்து விளங்குவது எப்படி’ என்பதை இரவில் என்னுடன் தனியாகப் பகிர்ந்து கொள்வதாக அழைப்பு விடுப்பார்கள்.

ஒரு முறை கலந்துரையாடலில் ஒரு ஆணுடன் நான் இரவு உணவை உண்ண மறுத்த பின்பு, அவர் நள்ளிரவில் என் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த அகால வேளையில் நான் செக்யூரிட்டியை அழைக்கும் வரை என் அறைக்கதவைத் தொடர்ந்து பலமாகத் தட்டிக்கொண்டிருந்தார்” என தன் வாழ்வின் மோசமான அத்தியாயங்களை பதிவுகளாக சொல்கிறார்..

“நான் மேற்சொன்ன எந்த ஆண்களின் கீழும் பணிபுரியவில்லை. ஆனால், நான் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட எல்லா சூழல்களிலும் அத்துமீறிய ஆண்கள் என்னை விட அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்தனர். அது தற்செயலானது அல்ல. அவர்கள் கைகளில் இருந்த அந்த அதிகாரம் தான் அந்த எல்லையைத் தாண்டி வந்து அவர்களை அத்துமீறத் தூண்டியது. பணியிடங்களில் பெண்களை விட அதிகாரம் உள்ள ஆண்கள், அத்துமீற தங்கள் கைகளில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வது தான், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கக் காரணம் என்று சாண்ட்பெர்க் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆதாரமாக அவர் காட்டுவது, பணியில் அவர் உயர உயர, கைகளில் அதிகாரம் குவிந்த பின்பு, இது போன்ற சம்பவங்கள் அரிதாக நிகழ்வனவாக மாறிப்போன உண்மை. “அதனால் தான், எனக்கு நானே கூறிக்கொண்டேன், ‘இது தான் அதிகாரம் போல’ என்று” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



மேலும் சாண்ட்பெர்க் பல பெண்கள் இதனை வெளியில் சொல்வது தங்களின் எதிர்காலத்திற்கு உலை வைப்பது போல் ஆகிவிடும் என்ற பயத்திலேயே இருப்பதாகவும், இது போன்ற எண்ணங்கள் அச்சங்களை வலுப்படுத்தும் ‘இதனால்தான் பெண்களைப் பணியமர்த்தக் கூடாது’ போன்ற கூச்சல்களைத் தான் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், எல்லா பணியிடங்களிலும் பெண்கள் வேலை பார்ப்பது அவசியம் என்றும் அவற்றுள் பலர் அதிகாரம் உள்ள பதவிகளில் அமரும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர் நம்புகிறார்.

“அதிகாரம் பல பெண்களின் கைகளுக்குப் போனால் நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுப்பெற்றுவிடும் என்று நான் கூறவில்லை, ஆனாலும் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், நம் கண்ணுக்கு அகப்படாமல் இருக்கும் பலர் கண்டெடுக்கப்படுவார்கள், அது உண்மையில் சரியான திசையில் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான அடியாக இருக்கும்” என்றார்.

சான்ட்பெர்க் ஒரு சிஓஓவாக ஃபேஸ்புக் நிறுவனத்தில் எத்தகைய பாதுகாப்பு காரணிகளும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கும் முறையும் உள்ளது. ஒரு பெண்ணாக இதனை செய்வது என் கடமை என்றும் கூறியுள்ளார். ஹாலிவுட் மட்டுமின்றி கார்ப்பரேட்களிலும் பெண்களின் குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. ஷெரில் சான்ட்பெர்க்கும் ஒப்ரா கூயது போல இனி #Metoo என்ற வார்த்தையே விவாதிக்கப்படாத அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவோம் என்று கூறியிருக்கிறார். அதிகாரம் தான் பெண்களை நோக்கி தவறான செயல்களை அனுமதிக்கிறது என்றால் அந்த அதிகாரத்தையும் பெண்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதே ஷெரில் சான்ட்பெர்க்கின் குரல்...