[ad_1]

12 மணி நேரப் பணி... ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு... உயிரைப் பிடிக்கும் பரபர பயணம். ஆனால் குறைந்த சம்பளம். பணி நிரந்தரம் இல்லை. பாதுகாப்பு இல்லை. இயற்கை உபாதையைக் கழிப்பதற்கும் நேரமோ இடமோ இல்லாத ஒரு பணிச்சூழல். அப்பேர்பட்ட பணியில் இரவும் பகலுமாக உழைக்கும் பெண்கள்... உங்களில் சிலர், இவர்களை நேரடியாகச் சந்தித்திருக்கலாம். இல்லையென்றால், இவர்கள் செல்லும் வாகனம் தினம்தினம் நம்மைக் கடந்துசெல்வதைப் பார்த்திருப்போம். ரத்தமும் சதையுமே இவர்கள் தினமும் சந்திப்பது. ஆம், ஆம்புலன்ஸில் பிறரின் உயிர்காக்க பறக்கும் தேவதைகள். 

இரவு 12:30 மணி. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகம். ஆறேழு ஆம்புலன்ஸுகள் நின்றுகொண்டிருக்கின்றன. வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், சென்னைப் புறநகர் பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். அதில் நான்கு ஆம்புலன்ஸ்களில் EMT (EMERGENCY MEDICAL TECHNECIAN) ஆகப் பணிபுரிகிறவர்கள் பெண்கள். விபத்து மற்றும் பிரசவங்களுக்காக ஆம்புலன்ஸில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கொடுப்பதுதான் இவர்களின் முக்கியப் பணி. 


ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சை வழங்கும் அவர், ஸ்ட்ரெச்சர் ஒன்றை இழுத்துக்கொண்டு வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டதும், ''என் பேரு ப்ரியா. வேலூர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் வொர்க். ஸாரிங்க அவசர கேஸ். நேரம் ஆயிடுச்சு. வேற யார்கிட்டயாவது பேசுங்க” எனச் சொல்லிவிட்டு கடமையுடன் கடந்துவிட்டார். 



அடுத்த 10 நிமிட இடைவெளியில், எல்லா ஆம்புலன்ஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பிச்சென்றன. நிகழ்வுகளை மட்டும் உள்வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் 11 மணிக்குப் போயிருந்தோம். ஒவ்வொரு ஆம்புலன்ஸாகத் தேடி, வேலூர் ப்ரியா அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸை அடைந்தோம். பரிட்சயப் புன்னகை சிந்தியவர், கையில் வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டை நீட்டி ''எடுத்துக்கங்க'' என்றார். சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம். 

''ரெண்டு வருஷமா இந்த வேலையில் இருக்கேன். டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். என் வசதிக்கு நர்சிங்தான் படிக்க முடிஞ்சது. இந்த வேலையைக் கொடுத்தாங்க. இதுவும் உயிரைக் காப்பாத்துற வேலைதானே. அதனால், முழு ஈடுபாட்டுடன் செய்றேன். போன வருஷம் நந்தனம் பக்கத்தில் கார் ஒண்ணு தீப்பிடிச்சி எரிஞ்சிடுச்சு, 108-க்கு தகவல் வர, நான்தான் சம்பவ இடத்துக்குப் போனேன். காருல கணவன் மனைவியோடு ரெண்டு குழந்தைகள். குழந்தைகளுக்குப் பெருசா காயம் இல்லை. அந்தப் பொண்ணை ஒரு ஆட்டோவுல தூக்கி வெச்சிருந்தாங்க. அவங்க இறந்துட்டதா எல்லாரும் நினைச்சுட்டாங்க. நான் தொட்டதும் கையைப் பிடிச்சுக்கிட்டு, அந்த நிலையிலும் “என் பசங்களைக் காப்பாத்துங்க, என்னை விட்டுடுங்க. என்னைக் காப்பாத்தணும்னா என் வீட்டுக்காரர்தான் தூக்கணும்னு சொன்னாங்க. எப்படியோ ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்திட்டோம். ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் கதவைத் திறந்ததும், எல்லோரும் மூக்கை மூடிக்கிட்டாங்க. அவ்வளவு ஸ்மெல் வந்திருக்கு. ஆனா, நான் உணரலை. அவங்களைக் காப்பாத்தும் சிந்தனை மட்டும்தான் இருந்துச்சு. இத்தனைக்கும் நான் மாஸ்க் போடலை. ரெண்டு நாள் கழிச்சு அவங்க இறந்துட்ட விஷயத்தை பேப்பர்ல படிச்சதும் மனசு கனத்துப்போச்சு'' என்கிற ப்ரியா, சிறிய இடைவெளிவிடுகிறார். அவர் கண்கள் கசிகின்றன. 



செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் பல விஷயங்கள் அதிரவைக்கின்றன. தீக்குளிப்பில் இறந்துபோன அந்தப் பெண்ணுக்கு, கணவரே தீ வைத்திருக்கிறார். உயிருக்குப் போராடும்போது அவர் கூறிய “என்னைக் காப்பாத்தணும்னா என் வீட்டுக்காரர்தான் தூக்கணும்” என்கிற வார்த்தைகள், ப்ரியாவை சில நாள்களுக்குத் தூங்கவிடவில்லை. 

''என்னால் ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது'' என்றபடி பேசுகிறார் இன்னொரு பெண் ஊழியர். ''அரக்கோணத்திலிருந்து வர்றேன். வேலைக்கு வந்த புதுசுல வியாசர்பாடி ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு விபத்து. ரயிலில் சின்னச்சின்ன பொருள்களை விற்கிறவர் அவர். ரயிலில் ஏறும்போது தவறி உள்ளே விழுந்துட்டார். காலு ரெண்டும் சிதைந்துபோயிருச்சு. கட்டை மாதிரி கிடந்தார். உடம்புல அடிக்கடி வந்துபோன சின்ன அசைவுகள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தோம். ரெண்டு வருஷம் கழிச்சு அதே மனுஷனை அதே ரெயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன். அந்த நிமிஷம் இப்பவும் மனசுக்குள்ளே இருக்கு. எந்த ரெயில்வே ஸ்டேஷனில் உழைச்சு சம்பாதிச்சுட்டு இருந்தாரோ, அதே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துட்டிருந்தார். இப்பவும் அந்த நிமிஷத்தை நினைச்சா அழாம இருக்க முடியலை. கால் இழந்த இடத்திலேயே இன்னொரு வாழ்க்கையைத் தொடரும்போது, அவருக்கு மனசில் எவ்வளவு ரணத்தைக் கொடுத்திருக்கும். கொஞ்ச நேரம் அவரோடு பேசிட்டு வந்துட்டேன். எப்போ அந்தப் பக்கம் போனாலும் அவரைப் பார்த்து பேசிட்டு வருவேன்'' என்கிற அவர், ஒரு பெண் தெய்வமாகவே தெரிந்தார். 

இது, இன்னொரு வலி தரும் சம்பவம். பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தை அது. சிகிச்சைக்காக மதுரையிலிருந்து காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். காஞ்சிபுரத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பவேண்டிய சூழல். அந்தக் குழந்தையை அழைத்துவரச் சென்ற பெண் ஊழியர் அவர். குழந்தையை வாகனத்தில் ஏற்றிய இரண்டாவது நிமிடமே, குழந்தை இறந்துவிட்டது. தன் கையில் இருக்கும்போது ஒரு குழந்தையின் உயிர் போய்விட்டது அந்த ஊழியரை மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளாக்க, வெடித்துஅழுகிறார். இரண்டு மாதங்கள் பணியைவிட்டு விலகிவிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சம்பவத்திலிருந்து  மீண்டதும் பணியில் சேர்கிறார். முதல் நாள் அவர் பார்த்தது ஒரு பிரசவம். ''அந்தக் குழந்தையைக் கையில் ஏந்தியதும், அது என் விரலைப் பிடிச்சிக்கிட்டதும்தான் என் அத்தனை நாள் மன உளைச்சல் நீங்கிச்சு'' என்கிறவர் கண்ணில் அப்படி ஒரு பிரகாசம். 



வேலை என்கிற பெயரில் உயிர்ச்சேவை செய்யும் இவர்களின் இன்னொரு பக்கம் வேதனையானது. திருமணத்துக்குப் பெண் பார்க்க வருகிறவர்கள், பெண் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிகிறார் என்றதும் சொல்லாமல் கிளம்பிவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானது. ஆண், பெண் இருவர் மட்டுமே பல இடங்களுக்குப் பயணிப்பதால், தவறான கருத்தை மனதில் ஆழமாக விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் உறுதுணையாக இருந்தாலும், ஊரில் சிலர் பொல்லாத பேச்சுகள் பேசுகிறார்கள். ''நேசித்துச் செய்கிற ஒரு வேலையை மறைத்துவாழ எனக்குப் பிடிக்கவில்லை. ஆம்புலன்ஸில்தான் வேலை செய்கிறேன் என்பதைப் பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்'' என்கிறார், இன்னொரு பெண் ஊழியர் கம்பீரமாக. 


வெள்ளை உடையில் ஒவ்வொரு ஆம்புலன்சிலும் வரும் இவர்கள், உயிர்காக்கும் தேவதைகளே! 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");