[ad_1]

காஷ்மீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது, தீவிரவாதிகள், வெடிகுண்டு சம்பவம், கல்லெறியும் இளைஞர்கள், கடையடைப்பு, துப்பாக்கியுடன் சுற்றி வரும் ராணுவம், இதுதான்.....

காஷ்மீர் ஆரம்பத்தில் அப்படியல்ல அது ஒரு சொர்க்கம் என்று சொன்னால் இக்கால தலைமுறையினர் நம்பப் போவது இல்லை. அதை ஒரு கலவர பூமியாகவே பார்க்கத் தொடங்கிவிட்டோம். அரசியல், சமூக சிக்கல்களால் இதுபோன்றொரு நிலை காஷ்மீரில் இருந்தாலும், இதையெல்லாம் கடந்த கலையும் ரசனையும் மிகுந்த, சுயத்தை  மறந்துவிடாத காஷ்மீரமும் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ?. ஜம்மு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிற மாநிலத்துக்குள்ளும் பல்வகையான இனக்குழுக்களும், அவரவர்க்கு தனிப்பண்பாடும், அதன் நீட்சியான கலை வடிவங்களும் இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோமா.?  மாநிலத்துக்குள் எவ்வளவுதான் நெருக்கடியான சூழல் தொடர்ந்தாலும், இசை, நடனம், நாடகம் என்று ஒவ்வோர் இனக்குழுவும் தங்கள் கலை வடிவங்களை வளர்த்து வருகிறார்கள் என்பதை சமீபத்தில் மதுரை வந்திருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலக் கலைஞர்களைச் சந்தித்துப் பேசியபோது தெரிந்து கொண்டேன்.




நம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று நல்லுணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கலாசாரம், பாரம்பர்யம், வர்த்தகம், மொழியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான 31.10.16 ல் ஒன்றே பாரதம், ஒப்பில்லா பாரதம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. 

அந்த அடிப்படையில் தமிழக அரசு இந்தாண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களும் தங்களுடைய கலைக்குழுக்களைப் பரிமாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக கலைஞர்கள் அங்கு சென்று கலை நிகழ்த்தவுள்ளார்கள். இதன்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நிகழ்ச்சி நடத்த ஜம்மு காஷ்மீர் மாநிலக் கலைஞர்கள் மதுரை வந்திருந்தனர். இதற்கான உதவிகளை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செய்ய, மாநிலக் கலைபண்பாட்டுத்துறை உதவியுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மதுரை காந்தி மியூசியத்தில் திறந்தவெளி அரங்கில் தங்களுடைய ஒவ்வோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் மதுரை மக்களை கட்டிப்போட்டார்கள்.


 

​​​​​​ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமிக்க இனக்குழுவினர் வாழ்கிறார்கள். அதனால்தான் என்னவோ தங்களுடைய கலையின் மீது பெருமிதத்தோடு பேசினார்கள். காஷ்மீர் வட்டாரத்தில் வசிக்கும் காஷ்மீரிகள், வித்தியாசமான நடனத்தை ஆடிக்காட்டினார்கள். அதற்கு அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் ரோமானியர், கிரேக்கர்கள் அணிவது போலிருந்தன. வயதானவர்கள் கூட காஷ்மீரி நாட்டுப்புற நடனத்தை, அடி மாறாமல் மிக வேகமாக ஆடினார்கள். புத்த மதத்தை சார்ந்த லடாக்கியர்கள் செப்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக்கொண்டு தாம்பலி என்ற நடனத்தை பாட்டுப்பாடி ஆடினார்கள். உடன் சேர்ந்து ஆடும் பெண்கள், 'லலலே....லேலலே என்று,என்று முள்ளும் மலரும் படத்தில் இளையராஜா அமைத்த ஒருபாடலில் வரும் கோரஸ் போல அவ்வளவு இனிமையாக இருந்தது. அந்த ஆட்டத்துக்குப் பின்னணியாக நரம்பு சிலிர்க்க அடிக்கப்பட்ட தோல் வாத்தியத்தின் இசை, தமிழகத்தின் பாரம்பர்ய பறை இசையை ஒத்திருந்தது. அடுத்து வந்த காஷ்மீர் நாட்டுப்புற ஆடலும் பாடலும் அவ்வளவு அருமை. கடத்தை அவர்கள் பேஸ் கிடாராகவும், தபேலா போலவும், டிரம் போலவும் பயன்படுத்துகிறார்கள்.



ஜம்முவைச்சேர்ந்தவர்கள் ஆடிய  நடனமும்,பாடலும் கண்ணுக்கும், காதுக்கும் அவ்வளவு இனிமை. இவர்களின் நடனம், காஷ்மீர் இந்துக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தியது. டோக்ரி என்றொரு வகையான நடனம், இதை நிகழ்த்தியவர்கள் காஷ்மீரின் டோக்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள், சீக்கியர்கள், காஷ்மீரிகளின் கலவையாக இருந்தார்கள். அப்படியொரு கவர்ச்சி, கம்பீரம். நடனத்தில் கலக்கி விட்டார்கள். பாக் நாக்மா, பஹாரி நடனம், கோஜ்ரி நடனம், அரன், சஜ்ஜா எனப் பல நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.
நம்மிடம் பேசிய காஷ்மீர் கலைக்குழுவைச் சேர்ந்த, " தமிழகத்துக்கு வருவது இதுதான் முதல்முறை. இங்குள்ளவர்கள் கலை பண்பாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்களும் கலை பண்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்" என்றார்.



லடாக்கிய கலைக்குழுவின் சோனம், “லடாக் தனித்தன்மையுடைய பகுதி. இங்கு எப்போதும் அமைதிதான். இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம். பெரிய அளவு தொழிற்சாலைகள் இல்லாததால் எங்கள் பகுதி எப்போதும் சொர்க்கம் போலவே இருக்கும். விவசாயம் மூலமும், சுற்றுலாப்பயணிகள் மூலமும் வருமானம் ஈட்டுகிறோம். தலாய்லாமாவை ஏற்றுக்கொண்ட நாங்கள் கலைகளையும் கடவுளாகப் பார்க்கிறோம்" என்றார். அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், ' டேய், வாடா சைனீஸ்காரங்கடா, போட்டோ எடுத்துக்கலாம்' என்று சத்தமாகச் சொல்ல, நம்மிடம் பேசிய லடாக்கிய பெண் அதிர்ந்து போனார், ' ஐ ஆம் நாட் சைனீஸ். ஐ ஆம் இண்டியன்' என்று சத்தமாகச் சொன்னார். பிறகு அந்த மாணவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். மனிதர்கள் மூக்கு கொஞ்சம் சப்பையாக மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்தாலே அவர்கள் சீனாக்காரர்கள் என்று நம்மூர் மக்கள் முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.




ஒரே ஜம்மு காஷ்மீருக்குள் பலவகையான இனக்குழுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்குவதை அறிய முடிந்தது.
கலைகளின் பூமியைக் கலவர பூமியாக்கியது யார்....? நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது என் மனதுக்குள் எழுந்த கேள்வி இதுதான்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");