[ad_1]


                           

                         


‘தோட்டா கிருஷ்ணமூர்த்தி, உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றதும் அவனுக்குப் பதில் சொல்வதா, இல்லை அப்படியே தூக்கிப்போட்டு ஒரு மிதி, மிதிப்பதா என்று ஒரு நொடி குழப்பமும், அமைதியும் அங்கே நிலவியது. ரயில் புறப்பட 15 நிமிடங்கள் இருப்பதை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஒரு பெண் அறிவித்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கே கேட்கவில்லை. இன்ஸ்பெக்டர் நவீன் சாரும் ஸ்பெஷல் டீம் போலீஸாரும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியின் பதிலால் கடுகடு முகத்துடன் அவனைச் சுற்றிக் கொண்டனர். ஆந்திரப் போலீஸாரின் முகம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 'ஏதோ சிக்கல்' என்று புரிந்தவனாய் அங்கிருந்து  எழமுயன்றான்.  எழுந்திருக்க நாங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை.



கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்த துணி மூட்டையை அவன் கண்கள் வேகமாகத் தேடின. அதில்தான் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும். அவனை ரவுண்ட் செய்ததுமே அந்தத் துணி மூட்டையைத்தான் டீம் போலீஸ் ஒருவர் காலால் உதைத்து எங்கள் பக்கம் தள்ளிவிட்டார். துணிமூட்டை அங்கு இல்லாததே அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் நேரம் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த இன்ஸ்பெக்டர், கண்ணைக் காட்ட ஸ்பெஷல் டீம் போலீஸார், தோட்டா கிருஷ்ணமூர்த்தியின் தோளில் அழுத்தமாகக்  கை போட்டனர். 'யாரு நீங்க, என்ன வேணும்?' என்ற ஒற்றை வார்த்தைதான் அவனிடமிருந்து வெளிப்பட்டது. அடுத்த நொடி, அவன் கன்னத்தில் பதில் இறங்கியது. அந்த ஒரே அறையில், 'அடித்தது ஆந்திர போலீஸ் அல்ல' என்று அவன் புரிந்து கொண்டான்.

'சார், என்னால் அடி-உதையைத் தாங்க முடியாது சார், உங்கள்  கேள்விக்கெல்லாம் நான் பதிலைச் சொல்லி விடுகிறேன். நான் இப்போது கொக்கு வேட்டைக்குப் போவதையே நிறுத்தி விட்டேன் சார். தண்ணியில் மேயும் தவிட்டுக் கோழிகளை மட்டும்தான் அடிக்கிறேன். அதுவும் வியாபாரத்துக்காகச் செய்யவில்லை, வீட்டுக்காக, பிள்ளைகளுக்காக மட்டும்தான் செய்கிறேன்.

கொக்குகளை அடிக்க மாட்டேன் என்று  ஸ்டேசனில் நானே கைப்பட எழுதியும் கொடுத்து விட்டேனே சார்' என்றான். சென்னை ஸ்பெஷல் டீம்  தலைமைக் காவலர்கள் கோபாலும், கன்னையனும் அக்யூஸ்ட்டுகளை அலற விடுவதில் செம 'கில்லி'கள்.  'முண்டேல்பாஜூ போல இவனும் நிறையக் கதைகளைக் கையில் வைத்திருப்பான் போலிருக்கிறது, நாமும் வந்ததிலிருந்து, ரிலாக்ஸ் இல்லாமல் இருக்கிறோம். இவன் கொக்குக்கு வெண்ணெய் வைத்த  கதையைச் சொல்லி முடித்ததும், நாமும்  நம்மிடமுள்ள கதையைச் சொல்லலாம். அப்போது கதை கேட்க அவனுக்கு காது இருக்குமா?' என்று கமென்ட் அடித்தனர்.

தோட்டா கிருஷ்ணமூர்த்தியை நாங்கள் எதிர் கொண்ட விதம் பார்த்து ஆந்திரப் போலீஸார் வாய் விட்டுச் சிரித்தனர்.  தோட்டா கிருஷ்ணமூர்த்தியை எந்த நெருக்கத்துடன்  ரயில்வே ஸ்டேசனில் இறுக்கினோமோ, அதே பொசிஷனில், ஆளைக் கொண்டு வந்து  ஜீப்பில் ஏற்றினோம். அதே ஜீப்பில்தான் முண்டேல்பாஜூ குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். தோட்டா கிருஷ்ணமூர்த்தி ஜீப்பில் ஏறியதும் ஜீப் அசையும் சத்தம், முண்டேல்பாஜூவின் தூக்கத்தைக் கலைத்தது. தோட்டா கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் மிரண்டு போய்விட்டான். ஒருவரையொருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டனர். ஆனால் பேசவில்லை.

அப்போது எஸ்.ஐ. ராஜ்குமார், 'நீ அடிச்ச கொக்குகளை அவனுக்குக் கொடு, காட்டில் அவன் பறித்த மூலிகைகளை உனக்குக் கொடுக்கட்டும். இரண்டு பேரும் மாறி, மாறி  கொடுத்துக் கொள்ளுங்கள், இறங்க வேண்டிய இடம் வந்து விடும். கீழே இறங்கியதும்  நாங்கள் கொடுப்பதையும் வாங்கிக் கொள்ளுங்கள். அதற்குப் பின்னால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்தத் தேவையும் இருக்காது' என்று சொல்ல, இருவர் முகத்திலும் திகில் பரவியது.

இறங்க வேண்டிய விசாரணை ஏரியா வரவே இருவரையும் கீழே இறக்கினோம்.எஸ்.ஐ. ராஜ்குமாரின் பதிலால், 'இனி நம்மைக் காப்பாற்றக் கூடியவர், இன்ஸ்பெக்டர் நவீன் தான்'  என்ற தவறான முடிவுக்கு தோட்டா கிருஷ்ணமூர்த்தி வந்து விட்டான். 'சார், இவர் (ராஜ்குமார் எஸ்.ஐ) சொல்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, என்னைக் காப்பாற்றுங்கள் சார்' என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினான். இன்ஸ்பெக்டர் நவீன் சாரைத் தவிர நாங்கள் அனைவரும் சிரித்தோம்.

'மாரேடிபூடி நாகபூஷணம் பற்றி இதுவரையில் ஒன்றும் தெரியவில்லை, நீங்கள் இரண்டு பேருமே இதுவரை  உண்மையைச் சொல்லவில்லை. நீங்கள் இறந்து விட்ட தகவல் கிடைத்தால்,  எவ்வளவு ஆபத்து இருந்தாலும் மாரேடிபூடி நாகபூஷணம் வந்து விடுவான் என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள். எங்களுக்கும் வேறுவழி தெரியவில்லை. கடைசியாக மாரேடிபூடி நாகபூஷணத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்லி விடுங்கள். பேப்பரில் எழுதிக் கொடுத்தாலும் சரி, அவனிடம் அதைக் கொடுத்து விடுகிறோம்' என்றபடி, இன்ஸ்பெக்டர் லுங்கியைச் சரி செய்தார். அவர் இடுப்பிலிருந்து வெளேர் நிறத்தில் கைத்துப்பாக்கி கீழே விழுந்தது. அப்போது....  (தொடரும்)   

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");