[ad_1]
போலீஸ் குடியிருப்புகளை மட்டுமே குறிவைத்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தவறாமல் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமா என்ன? தலைநகர் சென்னையில்தான் இந்தத் துணிச்சலானக் கொள்ளையை, கடந்த 2003-ம் ஆண்டில் நடத்திக்காட்டினர் ஆந்திர மாநிலக் கொள்ளையர்கள்.'போலீஸ் குடியிருப்பிலேயே தொடர்கொள்ளை என்றால், பொதுமக்களின் கதி என்ன?' என்ற கேள்வியுடன், இந்த விவகாரம், அப்போது தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடரில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. விவாதம் போய்க்கொண்டிருந்த அதேநாளில், சென்னை திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், ஈ.சி.ஆர் பகுதியில் தொடங்கி வடமாவட்டங்கள்வரை சிறப்புப் போலீஸ் படையினருடன் குற்றவாளிகளைத் தேடிச் சுற்றிக்கொண்டிருந்தார்.
சென்னை வடக்குப் புறநகர்ப்பகுதியான மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ராஜாராம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஸ்பெஷல் டீமோடு குற்றவாளிகளைத் தேடிப் பயணம் மேற்கொண்டிருந்தார். தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் சந்திரா நாகேஷ், ஆந்திராவின் விஜயவாடா பக்கம் தன்னுடைய ஸ்பெஷல் டீமோடு இதேபோன்ற மார்கழி மாதத்தில் ஒருநாளில் தலையில் கம்பளிக் குல்லாவுடன் குற்றவாளிகளைத் தேடிச் சுற்றிக்கொண்டிருந்தார். மணலி, தண்டையார்பேட்டை, திருவான்மியூர் ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் மட்டும் ஏன் இப்படிச் சுற்றுகிறார்கள்? அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் எப்படி இதற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்? மணலி, தண்டையார்பேட்டை, திருவான்மியூர் ஆகிய காவலர் குடியிருப்புகளில்தான் கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியிருந்தனர். ஆகவேதான், அந்த லிமிட்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட வேண்டியதாயிற்று! அப்படிச் சுற்றிக்கொண்டிருந்த ஒருநாளில், சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டருக்கு லைனில் வந்த ஒரு காவலர், 'அய்யா, நாளைக்கு வெள்ளிக்கிழமை. அதான், தகவலை அய்யா காதுல போட்டு வெச்சிடலாம்னு' என்று மெதுவான குரலில் சொல்ல..., "ஓஹோ, நன்றி தம்பி, சரியான நேரத்தில ஞாபகப்படுத்தினீங்க. நான் இப்பவே போலீஸ் குவாட்டர்ஸ் இன்சார்ஜ்-களுக்குத் தகவலைச் சொல்லிடறேன்." என்றார் இன்ஸ்பெக்டர். 'நல்லதுங்கய்யா... நான் போனை வெச்சிடறேன்யா' என்று நினைவூட்டிய பின், போன் இணைப்பைத் துண்டித்தார் அந்தக் கான்ஸ்டபிள். போலீஸாரின் குடியிருப்புகளைக் காப்பாற்ற இப்படிப்பட்ட பாதுகாப்பு குறித்த உரையாடல்கள் ஒருபக்கம் போய்க் கொண்டிருந்தன.இந்தச் சூழல், போலீஸார் மீதான பொதுமக்கள் பார்வையில் கேலியைக் கூட்டியது, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளின் கிண்டலும் சேர்ந்துகொண்டது. 'கொள்ளையடித்தவர்களை உடனே பிடித்தாக வேண்டும்' என்ற நெருக்கடியைச் சட்டசபை மேஜையைத் தட்டி எதிர்க்கட்சிகள் அதிகமாக்கின.
அதன் தொடர்ச்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் கே.விஜயகுமார், வடக்கு போலீஸ் இணை கமிஷனர் எஸ்.சைலேந்திர பாபு ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.மௌர்யா, உதவி கமிஷனர் கே.ஆர்.விட்டல் ராமன் மேற்பார்வையில் ஸ்பெஷல் டீம் ஏற்படுத்தப்பட்டது. கொள்ளையர்களைப் பிடிக்கத் தனித்தனியாக 'ஸ்பெஷல் டீம்' களும் அமைக்கப்பட்டது. டீம் குறித்தத் தகவலை ரகசியமாக வைக்கவும் முடிவானது. "கொள்ளையர்கள் பற்றிய தகவல் கிடைத்தாலோ, டீமில் உள்ளவர்களுக்கு வேறு உதவிகள் தேவை என்றாலோ, என்னையோ, இணை கமிஷனர் சைலேந்திர பாபுவையோ எந்தநேரத்திலும் தொடர்புகொண்டு பேசலாம்" என்று கமிஷனர் விஜயகுமார் சொல்ல, அதன்படி 'ஸ்பெஷல் டீம்' இயங்க ஆரம்பித்தது. அப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 'ஆபரேஷன் ஆந்திரா' எனப்படும் ஸ்பெஷல் டீம் தாக்குதல். அப்போதைய சென்னை 'க்ரைம் பீட்' செய்தியாளர்களும், போலீஸாரும் 'ஆபஷன் ஆந்திரா' குறித்து இன்றளவும் சிலாகித்துப் பேசுவதுண்டு.
கொள்ளையர்களில் ஒருவரைக்கூட ஆந்திராவில் விட்டு வைக்காமல் அவர்களைப் போலீஸார் சென்னைக்குக் கொண்டுவந்தனர். அதேபோல் குற்றவாளிகள் என அவர்களை நிரூபித்து, அவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு 'டாகுமென்ட் எவிடென்ஸ்' களையும் கூடவே அள்ளிக்கொண்டு வந்தனர். போலீஸ் குடியிருப்புகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் குன்றிமணி அளவுக்குக்கூட குறையாமல் மீட்டுக்கொடுத்த முக்கிய வழக்காக இது அமைந்தது. இதை சாதித்துக் காட்டிய போலீஸாருக்கு இன்றைய நவீனத்தின் முக்கிய அடையாளமான செல்போன் வசதிகூட அப்போது இல்லை. 'பேஜர்' கருவிகள் மட்டுமே அவர்களிடமிருந்தது. இது எப்படிச் சாத்தியப்பட்டது ?
(தொடரும்)
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
போலீஸை நடுங்கவைத்த வெள்ளிக்கிழமை கொள்ளையர்கள் ! - வேட்டையாடு, விளையாடு பகுதி - 1
TAGS :
COMMENTS