[ad_1]
கேரள மாநிலத்தின் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை ஜேக்கப் விமர்சித்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒரு மாநிலத்தின் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் உயர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதுவும், ‘ஒகி புயல் பாதிப்புகளில் இருந்து கேரளாவை மீட்ட மீட்பர்’ என முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாராட்டுகள் குவிந்துவரும் வேளையில், அந்த ஒகி புயல் விவகாரத்தை வைத்தே அவரது அரசை விமர்சித்த காரணத்தால், டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதில் இருக்கும் முதல் ட்விஸ்ட்… முதல்வரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ், “ஊழலுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கை எடுத்தவர்.” எனப் பெயர் வாங்கியவர். இரண்டாவது ட்விஸ்ட், நாம் எடுத்துக்காட்டாகக் கூறி சிலாகிக்கும் பினராயி விஜயன் அரசை, “கேரளாவை ஆளும் ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறார்கள்” எனக் கூறி ஷாக் கொடுத்திருக்கிறார் தாமஸ். பினராயி விஜயன் அரசின்மீது குற்றச்சாட்டு வந்திருப்பதைவிட, அது டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ் போன்ற ஓர் அதிகாரியிடம் இருந்து வந்ததுதான் தலைப்புச் செய்தியானது. கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் பினராயி விஜயன்.
யார் இந்த ஜேக்கப் தாமஸ் ஐ.பி.எஸ்?
கேரளாவின் கோட்டயத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக்கப் தாமஸ். கேரள மாநிலத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவர். ஊழல்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். கேரள அரசாங்கத்தின் உச்ச பதவிகளில் இருந்துகொண்டு, சர்வ வல்லமையுடன் ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் குறிவைத்து களை எடுத்தவர் தாமஸ். கேரளாவில், 2014 காங்கிரஸ் ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏ.டி.ஜி.பி பொறுப்புக்கு வந்தார் இவர். சில பெரிய தலைகள் ஈடுபட்ட ஊழல் வழக்குகளை கவனிக்கத் தொடங்கினார். இவரது உத்தரவின் கீழ் அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. கேரள காங்கிரஸின் முன்னணி தலைவரும், அப்போதைய அமைச்சருமான கே.பாபு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. பாபுவின் மகள்களும் விசாரணை வளையத்தில் வந்து சிக்கினர். கேரள முன்னாள் நிதி அமைச்சர் கே.எம்.மானி குறிவைக்கப்பட்டார். அவரது வீடு, அலுவலகங்களிலும் விசாரணை தீவிரமானது. மானியின் வங்கி அக்கவுன்ட் விவரங்கள் திகில் கிளப்ப, கோடிக்கணக்கான முறைகேடுகள் வெளியில் வந்தது. மானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும், வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கி மலபார் சிமென்ட்ஸ் எம்.டி பத்மகுமார் கைதுசெய்யப்பட்டார். கே.எம்.மானியால் அரசுக்கு 200 கோடி வரை நஷ்டம் எனத் தெரியவந்தது.
மானியின் ஊழல், அதற்கு ஏ.டி.ஜி.பி ஜேக்கப் தாமஸின் நடவடிக்கைகள் என ஆடு-புலி ஆட்டம் தொடர்ந்த வேளையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கே செக் வைத்தார் தாமஸ். அதிர்ந்து நின்றது கேரளா. பார் ஊழல் விவகாரத்தை தூசித்தட்டி கிளர ஆரம்பித்தார் ஜேக்கப் தாமஸ். உடனடியாக காங்கிரஸ் அரசால் தீயணைப்புத்துறை தலைவராக தூக்கியடிக்கப்பட்டார். அங்கு பொறுப்பேற்றும் சும்மா இருக்கமுடியாமல், தீ தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத தனியார் குடியிருப்புகள், அதன் உரிமையாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்களை குறிவைத்தார். கை மேல் பலனாக அடுத்த நான்கு மாதங்களில் அந்தப் பதவியில் இருந்தும் மாற்றப்பட்டார் தாமஸ். இறுதிவரை கேரள காங்கிரஸ் தலைவர்களுக்கும் இவருக்கும் ஏழாம் பொறுத்தமாகவேப் போனது.
பினராயி விஜயன் vs டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்:
2016-ல் காங்கிரஸ் வீழ்ந்து கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். பினராயி விஜயன் முதல்வரானார். மீண்டும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புப் பிரிவுத் தலைவர் என்ற உயர் பதவியில் வந்து அமர்ந்தார் ஜேக்கப் தாமஸ் ஐ.பி.எஸ். இப்போது அவர் டி.ஜி.பி அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார். முதல்வர் பினராயி விஜயன் அளித்த சுதந்திரத்தில் ஊழல் கண்காணிப்புகளில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சிறப்பாக செயல்படத் தொடங்கினார். மீண்டும் இவரது கண்காணிப்பின் கீழ் பலர் வரத்துவங்கினர். இது சில உரசல்களையும் ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் நீண்ட விடுப்பில் சென்றார் தாமஸ். பின்னர், கேரள காவல்துறைக்கு சம்பந்தமில்லாத ஐ.எம்.ஜி எனும் அரசு நிர்வாகவியல் துறைக்கு மாற்றப்பட்டார். இது பெரும் சர்ச்சையானது. பின்னர், ‘சுறாக்களுடன் நீந்தும்போது’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் தாமஸ். இதில், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரைப் பற்றியும், கேரள அரசு பற்றியும் சர்ச்சை கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த கேரள தலைமைச் செயலாளருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இறுதியாக அந்த சுயசரிதை புத்தகத்தில் அரசை விமர்சிக்கும் ரீதியிலான கருத்துகளும், அரசு ரகசியங்கள் சிலவும் இடம்பெற்றது தெரியவரவே, ஜேக்கப் தாமஸ் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும், துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
இதுபோன்ற ஒரு சூழலில்தான் கடந்த 9-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒகி புயல் பாதிப்பு மீட்பு விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்து பேசியிருந்தார் ஜேக்கப் தாமஸ். அதில், “ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்களாக இல்லாமல், பணக்காரர்களாக இருந்திருந்தால் கேரள அரசுக்கு உடனடியான பதில் கிடைத்திருக்கும். இங்கு ஆட்சி நடத்துபவர்கள் ஊழல்வாதிகளுடன் கூட்டு வைத்து அதிகாரம் செய்கிறார்கள். இவர்கள் சாதாரண மக்களின் நம்பிக்கையை எப்படி பெறுவார்கள்”, எனக் குறிப்பிட்டிருந்தார். கேரள அரசுக்கு பெரும் அவமரியாதையாக போய்விடவே கடந்த இரண்டு வாரங்களாக டி.ஜி.பி ஜேக்கப் தாமஸிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி மலையாள தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தாமஸ், “நான் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன் என்பது தெரியவில்லை. சுயசரிதை புத்தகம் எழுதியதற்காகவா அல்லது அரசை விமர்சித்து பேசியதற்கா என்பது பற்றியும் விவரம் தெரியவில்லை”, எனச் சொல்லியிருக்கிறார்.
மக்களுக்குப் பிடித்த அரசாகவும், குறிப்பாக தமிழக மக்கள் பொறாமைப்படும் விதமாக ஆட்சி நடத்திவரும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூட்டில் ஒரு விரிசல் இந்த விவகாரம். டி.ஜி.பி தாமஸ் தெரிவித்த கருத்துகளை ஆராய்ந்து அதில் கவனம் குவித்தாக வேண்டிய அவசியம் முதல்வர் பினராயி விஜயனுக்கு இருக்கிறது!
பினராயி விஜயன் vs டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்… சர்ச்சையைக் கிளப்பிய சஸ்பெண்ட்!
TAGS :
COMMENTS