[ad_1]



திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கியமானதொரு பேருந்துநிலையம் ஆகும். ஆனால், சுகாதார அடிப்படையில் பார்த்தால் இது, மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு பேருந்து நிலையமாகவே இருக்கிறது. திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்தால் பெயரளவுக்கு அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தற்காலிகத் தீர்வாகவே இருக்கிறது. அதனால் இரண்டொருநாளில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும் அவலம்தான் இங்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான உண்மை நிலையை அறிய அங்கு விசிட் அடித்தோம்...


ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. கரூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு அருகேயுள்ள பொதுக் கழிப்பறையினுள் செல்ல முடியாத அளவுக்குக் குளம்போலச் சிறுநீர் தேங்கியிருக்கிறது. அப்பகுதியைக் கடக்கும்போது கழிப்பறை துர்நாற்றத்தின் தாக்கத்தால், அனிச்சையாக நமது கைகள் மூக்கை மூடத்தான் முனைகின்றன. காலைநேரத்தில் அங்கு குவிந்திருக்கும் காலி மது பாட்டில்களைச் சேகரிப்பதற்காகவே சிலர் வாடிக்கையாக வந்துபோகும் அளவுக்குப் பேருந்து நிலையத்தின் தரம் "மிகத் தரமாகவே" இருக்கிறது. குடிமகன்கள் சிலர் இன்னும் ஒருபடி மேலபோய் மதுபாட்டில்களைச் சிதறு தேங்காய் போன்று உடைத்திருக்கின்றனர்.



'சரி...இங்குதான் இப்படி மற்ற இடங்களையும் பார்த்துவிடலாம்' என நடக்க ஆரம்பித்தோம். இடம் விசாலமாக இருந்தாலும் அங்கிருக்கும் சாலையின் நிலையோ அடிமட்டமாக இருந்தது. அப்படியே சிறிது தூரம் நடந்துவந்து திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வந்தோம். அவ்விடத்திற்குப் பின்புறம் பல நாள்களாக தேங்கியிருந்த பழக்கழிவுகள் மற்றும் குப்பைகளைச் சுகாதாரப் பணியாளர்கள் சிலர் அள்ளிக் கொண்டிருந்தனர். அங்கு சமீபத்தில் பெய்த மழையால் சேறும், சகதியும் தேங்கியிருக்க, குப்பைகள் மலைபோலக் காணப்பட்டன. அந்தக் குப்பைகளைக் கைகளால் அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியவில்லை. அங்கே கடை வைத்திருப்பவர்களின் நிலை இன்னும் மோசம். துர்நாற்றத்திற்கு இடையே மூக்கைப் பிடித்துக்கொண்டு சேறு, சகதியில் கவனமாக அந்த இடத்தை மக்கள் கடப்பதால், அருகில் உள்ள கடைகளை அவர்கள் கவனிப்பதில்லை. இதனால், சாலையோர வியாபாரிகளின் பிழைப்பு மோசமாகியிருக்கிறது. பயணிகளின் நிலைமையோ இன்னும் மோசம். சிறு தூறலுக்கே தண்ணீர் தேங்கக்கூடிய இப்பகுதியில்தான் பயணிகள் நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக மழைநேரத்தில் அங்கு வழிந்தோடும் சாக்கடை நீரின் எல்லை பேருந்து நிலையத்தின் உட்புறம்வரை நீள்வது அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?

இதுகுறித்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் ஆனந்த் என்பவரிடம் பேசினோம். "இப்போ பார்க்கிறீங்கள்ள, இதே நிலைமைலதான் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா வாழ்க்கைய ஓட்டுறோம். இந்த வழியாப் போறவங்களாம் மூக்கைப் பிடிச்சுகிட்டுதான் நடந்து போறாங்க. அதுபோக, இந்தவழியா பள்ளிக்கூடத்து பிள்ளைங்க, காலேஜ்ல படிக்கிறவங்க, ஆபீஸுக்கு வேலைக்குப் போறவங்க எல்லாருமே போறாங்க. ஆனால், எல்லோருமே பார்த்துட்டு சும்மாதான் போயிட்டு இருக்காங்க. இங்க இருக்கற நகராட்சி அதிகாரிங்க எல்லாம் ஊருக்குள்ள எங்கெங்கயோ போய் சுத்தமில்ல; சுகாதாரமில்லைன்னு ஃபைன் போடுறாங்க... அவங்க கண்ணுக்கு இந்த இடமெல்லாம் தெரிய மாட்டேங்குது. நடவடிக்கை எடுக்குற மாதிரி மேக்கப் மட்டும் நடந்துரும். அதுவும் மழை வந்துச்சுனா, இந்தச் சேறு அப்படியே பஸ் ஸ்டாண்டு உள்ளதான் போவுதுப்பா" என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டின் நிலை படுமோசம். சகதிக்குவியலில் காய்கறி வியாபாரம் நடக்கிறது. சேற்றில் புதைந்த கால்களுடன் வியாபாரிகளும், மக்களும் படும் இன்னல்கள் சொல்லமுடியவில்லை. காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்களும் அதில்தான் சென்றுவருகின்றன.



பயணிகள் இளைப்பாறும் இடங்கள் அனைத்திலுமே சிகரெட், பீடி, குட்கா, புகையிலை போன்றவற்றின் காலி பாக்கெட்கள் மற்றும் காலி தண்ணீர் பாக்கெட்டுகள் நிறைந்து அசுத்தமாகவே காணப்படுகிறது. எச்சில் துப்பிய கறைகளில் மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களுக்கு நடுவேதான் பெண்களும், குழந்தைகளும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சுகாதாரமற்றநிலை தமிழகத்தின் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் பொதுவாகக் காணப்பட்டாலும், இங்கு கொஞ்சம் தூக்கல் அதிகம். இந்தப் பேருந்து நிலையத்திலுள்ள பொதுக்கழிப்பிடங்களின்  நிலையோ சொல்லி மாளாது. தினமும் இங்கு வந்துபோகும் பயணிகள் அனுபவிக்கும் அவசரக் கொடுமைகள் பற்றி கேட்டால் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். தினமும் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் நிறுவன ஊழியர் விஜயகுமாரிடம் இதுபற்றிக் கேட்டோம். "என்னத்தங்க சொல்றது.., தினமும் இங்கதான் பஸ் ஏறுகிறேன். இப்பக்கூட பாருங்க மூக்கைப் பிடிச்சுகிட்டேதான் உள்ளேபோக முடியுது. அதுவும் மலம் கழிக்கிற வசதி சுத்தமா இல்ல. இருக்குறதையும் இப்படிச் சுத்தம்பண்ணாம வெச்சிருக்காங்க. நைட் நேரத்துல பார்த்தீங்கன்னா சுகாதாரமே இல்லாத இந்த பாத்ரூம்-லதான் குடிச்சிட்டு பாட்டில்கள குப்பையா போடுறானுங்க. அதுவும் மழைக் காலத்துல ரொம்ப சிரமம். நடந்து போகக்கூட முடியாது. பஸ் ஸ்டாண்டுக்குள்ள சாக்கடைதான் ஓடும். நகராட்சி நிர்வாகம் உடனடியா நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்" என்றார் ஆதங்கத்துடன். சற்றுதூரம் தள்ளி காரைக்குடி, நத்தம் பேருந்துகள் நிற்கும் இடத்திலும் இதே துர்நாற்றம்தான்.



பேருந்து நிலையத்தின் கடைசி ஓரத்தில் மதுரை செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியின் நிலை அநியாயத்திற்கு மோசம். அதே இடத்தில் பல ரூபாய் செலவில் கட்டப்பட்ட மதில்சுவர் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. மதில் சுவரை சீர்செய்ய நகராட்சிக்குப் பெரும் நிதிப்பிரச்னையா என்ன? பசுமையான சிறு தாவரங்களுடன் அழகாக அமைக்கப்பட்ட சுவர் இன்று சிதிலமடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச் சுவரைக் கவனிக்கத் தவறிவிட்டார்களா? இல்லை, கட்டுமானத்திற்கு தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா? எனப் பல்வேறு கேள்விகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தைச் சுற்றி எழுவதை தவிர்க்க இயலவில்லை.



'பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்' என அரசு சார்பில் படுஜோராக விளம்பரம் மட்டும் செய்துள்ளனர். ஆனால், அரசு அதனை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் கிடப்பதும், சாக்கடை நீரும், மழைநீரும் குளம்போன்று தேங்கிக்கிடப்பதும், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் பயணிகள் தர்மசங்கடத்தில் தவிப்பதும் என திண்டுக்கல் பேருந்து நிலையில் காணப்படுகிறது. பேருந்து நிலைய சுகாதாரச் சீர்கேடுகளைப் போக்குவதற்கு


மாவட்ட ஆட்சியரோ, நகராட்சி அதிகாரிகளோ விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் நலன் காக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்...!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");