[ad_1]

பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக இருக்கும் திருவண்ணாமலைக்குச் சிறப்புச் சேர்ப்பது திருக்கார்த்திகை தீபத்திருவிழாதான். சைவர்களின் முக்கியத் திருவிழாவான தீபத் திருவிழா சென்ற நவம்பர் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


 


அதையடுத்து நவம்பர் மாதம் 28-ம் தேதி இரவு வெள்ளித்தேர் உலாவும், அடுத்த நாள் 29-ம் தேதி தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றன. பதினேழு நாள் உற்சவத்தின் சிறப்பான விழாவான திருக்கார்த்திகை தீபவிழா டிசம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் மலைமீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.


 

தகதகத்து எழுந்த அந்த மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள் எழுப்பிய 'அரோகரா' கோஷம் விண்ணை முட்டியது. தீபம் எழுந்த கணத்தில் வானமே வாணவேடிக்கைகளால் அழகு பெற்றது.


 

தெருவெங்கும் தீபவரிசைகளும், பாமாலை பஜனைகளும் நிரம்பியிருந்தன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு யாத்ரீகர்களும் திருவண்ணாமலைக்கு வந்து இந்தத் தீபவிழாவினைக் கண்டு ரசித்தார்கள்.



கார்த்திகை தீபத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்குமிருந்து 20 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். 8,000-க்கும் மேலான காவல்துறையினர் காவல் பணியை மேற்கொண்டனர். 250 வனத்துறைக் காவலர்களும் மலையின் மீது பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டார்கள். தென்னகம் முழுக்க மூவாயிரத்துக்கும் மேலான சிறப்புப் பேருந்துகள் தீபத்திருவிழாக்காக இயக்கப்பட்டன.


 

வாகனங்கள் யாவும் நகரத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு நெரிசல் உண்டாகாமல் தடுக்கப்பட்டது. நகரின் எல்லா விடுதிகளும் நிரம்பி, பக்தர்கள் கோயிலின் வெளிமண்டபங்களிலும் தங்கியிருந்தார்கள். மருத்துவ வசதிகளும், குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தன. பெருகிக்கொண்டே வந்த மக்கள் நெருக்கத்தால் நகரமே திணறிக்கொண்டிருந்தது.


 

பக்தர்களின் பாதுகாப்புக்காக, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மலை மீது ஏறத் தடை, கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்யத் தடை, பரணி தீபம், மகா தீபம் காண பொதுமக்களுக்குத் தடை என்று பல கட்டுப்பாடுகளை இந்த ஆண்டு விதித்திருந்தது. இது பக்தர்கள் பலருக்கு ஆதங்கத்தை உண்டாக்கியது.


 

தீபத்தை தரிசித்த பல்லாயிரம் பக்தர்கள் அன்றே திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலமும் வந்தார்கள். இதனால் ஆதி அண்ணாமலையார், அஷ்டலிங்கங்கள் உள்ளிட்ட கிரிவலப்பாதை சந்நிதிகளில் பெருந்திரளான பக்தர்கள் கூட்டம் இருந்தது.



தீபத்திருவிழாவுக்குப் பிறகு, டிசம்பர் மாதம் 3-ம் தேதி சந்திரசேகரர் தெப்பத்தில் உலா சென்ற விழா நடைபெற்றது. அடுத்த நாள் 4-ம் தேதி சக்தி தெப்பத்தில் உலா சென்றார். டிசம்பர் 5ம் தேதி சுப்பிரமணியர் உலாவோடு தெப்பவிழா நிறைவுற்றது.


 

டிசம்பர் 6-ம் தேதி ஈசனின் அணுக்கத் தொண்டரான சண்டிகேஸ்வரர் உலாவோடு பதினேழு நாள் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுற்றது. அதையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன.


 

விழா நிறைவு பெற்றதும், விழாவில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கியது. உண்டியலில் சேர்ந்த காணிக்கைகளை எண்ணும் பணி திருக்கோயிலின் இணை ஆணையாளர் ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. கோயில் ஊழியர்களும், பக்தர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். காணிக்கைகள் எண்ணப்பட்டு நேற்று மொத்த வசூல் காணிக்கை (10.12.17) அறிவிக்கப்பட்டது.


 

2,09,85,443 ரூபாய் பணமாக காணிக்கை வந்தது என்றும், கடந்த ஆண்டைவிட இது சுமார் 35 லட்ச ரூபாய் அதிகம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

மேலும் இந்த ஆண்டு 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளி போன்றவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த ஆண்டு 375 கிராம் தங்கம், 1,170 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மோட்சம் அளிக்கும் இந்தத் தீபத் திருவிழா, பல சவால்களுக்கு இடையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற உறுதுணையாக இருந்த பல்வேறு அமைப்புகளுக்கு ஆலயத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து நன்றி கூறப்பட்டது.

 


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");