[ad_1]



காட்சி 1


ஆர்.கே.நகர்த்தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க, வாக்குச் சாவடிக்கு அதிகாலையே வாக்காளர்கள் வரத் தொடங்கிவிட்டனர். பலரது கையில் மூன்றிலக்க சீரியல் எண் இருந்தது. 'இது, நேற்று கொடுத்த இருபது ரூபாய் சீரியல் நம்பர்தானே?' என்றதும் சங்கடத்துடன் நெளிந்தனர். "ஓட்டுப் போட்டுட்டுப் போயி நம்பரைச் சொன்னால், பணம் கொடுத்துடுவாங்கள்லே?" என்று ஒருவருக்கொருவர் வெள்ளேந்தியாக விசாரித்துக்கொண்டிருந்தனர். அந்த மூன்றிலக்க எண்ணில் சத்தியமும், வாய்மையும் சத்தம் போடாமல் அமைதி காத்தன.

காட்சி 2

பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் என்று தொகுதியில் அடிக்கடி கலவரப்படும் பவர் ஹவுஸ் ஸ்கூல்பூத், இந்தத் தேர்தலில் கலவரச் சுவடே இல்லாமல் இருந்தது.  பவர்ஹவுஸ் பூத்தில் மொத்தம் 12 வாக்குச்சாவடிகள். பெரிய சிறிய என்ற அளவுகோல் ஏதுமில்லாமல்  எல்லா பூத்துகளுக்கும் ஒரே அளவில்தான் பாதுகாப்பு இருந்தது.

பெரும்பாலான பூத்துகளில் மீடியாக்களை  அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதில் போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு விதமாய் அறிவுறுத்தல் இருந்ததால், அவர்கள் மீடியாக்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தனர். பல இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டது.  இன்னொரு பக்கம், 'இனி இன்னொரு இடைத்தேர்தல், ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரக்கூடாது' என்று மக்களே ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துவிட்டு வாக்குச் சாவடிக்கு வந்தது, அப்பட்டமாகத் தெரிந்தது. அவ்வளவு அமைதி, அவ்வளவு ஒழுக்கம்... பொதுமக்கள் சத்தமாகக் கூட தும்மல் போடவில்லை, அதிகாரிகள் சொல்லாமலே அனைவரும் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தனர்.

காட்சி 3

 ஆண்கள் பத்துபேர் என்றால் பெண்கள் முப்பது பேர் என்றளவில் வாக்குச்சாவடிகள் பெண்களால் நிரம்பி வழிந்தது. முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பல இடங்களில் போலீஸாரும், மீடியாக்களும் கைகொடுத்து தூக்கி வந்து வாக்களிக்க உதவியது உருக்கமான காட்சிகள்.

அதேவேளையில், பிரசாரம் முடிந்த பின்னர் அவரவர் ஊருக்குத் திரும்பப் போய்விட்டதாக அறியப்பட்ட கட்சிகளின் வெளியூர் நிர்வாகிகள், தொகுதி முழுவதும் சாதாரணமாகச் சுற்றிக்கொண்டிருந்தனர். அதைப்பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. 

வாக்குப் பதிவின்போது, சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், முக்கியமான வாக்குச் சாவடிகளுக்கு 'விசிட்' அடித்தார். சில பூத்களில் வேட்பாளர்களின் படங்கள், தலைகீழாக ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறி தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், 'கூல்' ஆன தினகரன், 'டூ-ஜீ தீர்ப்பு முதல் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வரை' யிலான அரசியல் நிலவரங்களை பேட்டியில் தெரிவித்தார்.



காட்சி 4

டூ-ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடி, ஆர்.கே.நகர்- திருவொற்றியூர் சந்திப்பில் ரவிச்சந்திரன் என்ற இளைஞர் தலைமையில் பட்டாசு வெடித்து, தி.மு.க.வினர் கொண்டாடினர். பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள், 'இவங்க பட்டாசு வெடிக்கலாமா,  வெடிக்கக் கூடாதா?' என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்க, அவரோ, "தம்பீ, நான் வேற லிமிட். நீங்க இந்த லிமிட் அதிகாரியைக் கேட்டுத்தான் முடிவெடுக்கணும்" என்று நகர்ந்து விட்டார்.... இப்படிப் பல 'நகரல்கள்'  தொகுதி முழுவதுமே இருந்தது. 

காட்சி 5

வாக்குப்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, தேர்தல் அதிகாரிகளான ராஜேஷ் லக்கானி, விக்ரம்பத்ரா, பிரவீன் பி.நாயர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோருக்கு மீடியாக்கள் தரப்பிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் 'உதவி கோரும் போன்' கள் போனபடி இருந்தது. ஒரு கட்டத்தில்  அந்த போன்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போயின. 

சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருப்பவருமான கார்த்திகேயன், காலை முதலே, வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டபடி தொகுதியில் இருந்தார். அவரைப் பார்த்த செய்தியாளர்கள், "சார், சென்னை மாநகராட்சி மூலம், எங்களுக்கு தேர்தல் ஆணையத்தின்  போட்டோ ஒட்டப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து இருக்கிறீர்கள். போலீஸாரோ, அனுமதி மறுக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒரு ஆர்டரைக் காட்டி, 'உங்களுக்கு இந்த காம்பவுண்ட்டில் நுழையவே அதிகாரம் இல்லை' என்கிறார்கள். அங்கிருக்கும் தேர்தல் பணியாளர்களும் அதையேதான் சொல்கிறார்கள். பயனே இல்லாத, இந்த அடையாள அட்டையை ஏன் எங்களுக்குக் கொடுத்தீர்கள் சார்?" என்று கேள்வி எழுப்பினர். 

"எந்த பூத் என்று சொல்லுங்கள், உடனே சொல்லுங்கள்?" என்று வேக வேகமாகத் தகவலைப் பெற்று அங்குள்ளவர்களிடம் கார்த்திகேயன் போனில் பேசினார். பின்னர், "நான் சொல்லிவிட்டேன், இனி அப்படி ஏதும் இடையூறு ஏற்படாது" என்று தெரிவித்தார். அப்போது காலை 11.30 மணி. 

காட்சி 6

பிற்பகல் 2.40-  மணிக்கு காசிமேடு வாக்குச் சாவடியைப் பார்வையிட்டு ஆய்வுசெய்ய அதே கார்த்திகேயன் வந்தபோது அங்கே செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் இருந்தனர். வாக்குச் சாவடிக்குள்  நுழைந்த அதே கார்த்திகேயன், "மீடியாக்களை ஏன் உள்ளே விடறீங்க, முதலில் அவர்களை வெளியே போகச் சொல்லுங்க" என்று அங்கிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார். சாதாரணமாகவே செய்தியாளர்களை விரட்டியடித்த போலீஸாரும், தேர்தல் பணியாளர்களும், இதற்குப் பின்னால் சும்மா இருப்பார்களா... உயரதிகாரி உத்தரவிட்டதால், போலீஸாரும், தேர்தல் பணியாளர்களும் இரையை விரட்டும் பருந்து போல, மீடியாக்களை நோக்கிப் பறந்துவந்தனர். கேமரா தப்பித்தால் போதும் என்று மீடியாவினர் அங்கிருந்து சாதுர்யமாக தப்பித்தனர். 'இதை யாரிடம் போய் நாம் புகார் சொல்வது...  இன்று காலை 11.30-க்கு நமக்காக போனில் பரிந்து பேசியது, இதே கார்த்திகேயன் தானா?' என்ற கேள்வியை ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.



காட்சி 7

தண்டையார்பேட்டை அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளி மேற்கு வாக்குச் சாவடி பதற்றமான வாக்குச் சாவடி என்பது கடந்த தேர்தல்களில் நிரூபணமாகி இருந்ததால், அங்கிருந்த  நீண்ட வரிசையை மீடியாவினர் கேமராவுக்குள் சுருட்டிக் கொண்டிருந்தனர். அங்கு சட்டம்- ஒழுங்கைக் காக்கும் பாதுகாப்புப் பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.  அந்த இடத்தில் மீடியாக்களை பார்த்துவிட்ட இன்ஸ்பெக்டர் ரங்கசாமி திடீரென்று ஆவேசம் வந்தவராய், "உங்களை இங்கனயிருந்து அடிச்சுக் கொண்டு வெளியே போய் போட்ருவேன், இப்பவே போலீஸ் வண்டியில ஏத்திருவேன், என்ன என்ன முறைச்சுப் பாக்கறீங்க, இங்கன வந்து என்ன என்ட்ரிபாஸ் காட்டறீங்க?" என்று தாக்குவதுபோல் பாய்ந்து வந்தார். அங்கிருந்த சக போலீஸார், 'அய்யா, அவங்களுக்கு அனுமதி பாஸ் இருக்குங்கய்யா' என்று விளக்கினர். இன்ஸ்பெக்டர் ரங்கசாமியோ, "அது எனக்குத் தெரியாதா?" என்று அவர்களையும் முறைத்தார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரவீன் பி.நாயரை தொடர்புகொண்டு செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், 'உடனே இதை சரி செய்கிறேன்' என்று பூத் எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டார். அடுத்த அரைமணி நேரம் கழித்து அதே வாக்குச் சாவடியில் அதேபோல் மீண்டும், அதேபோல் பிரச்னை ஏற்பட மீண்டும்,  பிரவீன் பி.நாயரை செய்தியாளர்கள் தொடர்புகொண்டனர். இந்தமுறை நாயர் போனை எடுக்கவில்லை.

காட்சி 8

டூ-ஜி தீர்ப்பு வெளியான தகவல் வாக்குச்சாவடிகளில் இருந்த பூத் ஏஜெண்ட்களுக்குத் தெரியவந்த பின்னர் பல இடங்களில் சூழ்நிலை மாறியது. உள்ளேயே ஒருவருக்கொருவர் தீர்ப்புக் குறித்து வாதிக்க ஆரம்பித்துவிட்டனர். நேரம் கூடக் கூட, அவர்களுக்குள் வாதம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் கண்காணிப்புக் கேமராக்களுடன் வந்தவர்களை அங்கிருந்த பூத் ஏஜெண்ட்டுகள் தரக்குறைவாகப் பேச ஆரம்பித்தனர். "நீங்க, மீடியா இல்லையா, நாங்க அவங்கன்னு நினைச்சு  உங்களைத் திட்டிட்டோம், அவனுங்கதான் இந்த டூ-ஜி கேஸ் ரிலீசைப் பத்திப் போட்டுப் போட்டுக் காட்டுறானுங்களாம், வரட்டும் கேமராக்களை உடைச்சு அனுப்பறோம்" என்று அவர்களிடம் தங்கள் கோபத்துக்கான காரணத்தை (?) விளக்கினர். 'வட்டம், கொஞ்சம் சும்மா இருங்க' என்று அங்கிருந்த உள்ளூர் ஏட்டயா அவர்களை 'கூல்' செய்தார்.

காட்சி 9

 இன்ஸ்பெக்டர் லெவலில் இப்படி என்றால், வாக்குச்சாவடி வாசலில் நின்ற கான்ஸ்டபிள்கள் லெவலும் வித்தியாசம்தான். " உள்ளே விடச் சொல்லி உங்ககிட்ட ஒரு என்ட்ரி ஆர்டர் இருக்கிறது என்றால், உங்களை உள்ளே விடக் கூடாது என்று வெளியே தள்ள எங்களிடமும் ஒரு ஆர்டர் இருக்கிறது, போங்க சார், போயி யாரையாவது பெரியவங்களைக் கூட்டிட்டு வாங்க" என்று செய்தியாளர்களைக் கான்ஸ்டபிள்கள் கலாய்த்தனர். 


இப்படியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");