[ad_1]



ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. தெருவெங்கும் ஓட்டு கேட்கும் படலம் ஜரூராகத் தொடங்கிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த இடைத்தேர்தல், பணபட்டுவாடாப் புகாரையடுத்து ரத்தானது. 'இந்தமுறை எவ்விதத் தவறும் நடந்துவிடக்கூடாது' என தேர்தல் அதிகாரிகள் அதி தீவிரக் கவனத்துடன் தொகுதிக்குள் கண்காணித்து வருகிறார்கள். இதில், முதற்கட்டமாக போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து தூக்கிவிட்டதாகச் சொல்கின்றனர்.


'போலி வாக்காளர்கள்' என்று அதிகாரிகளால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் உண்மையான வாக்காளர்களே. "நாங்கள் சொந்த வீடு வைத்திருக்கிறோம். 40, 50 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்துவருகிறோம். எங்களை எப்படி வாக்காளர் பட்டியலிலிருந்து தூக்கலாம்..." என்று நியாயம் கேட்டு தினம் தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்.கே நகர் தேர்தல் அலுவலகத்தில் முறையிட்டவண்ணம் உள்ளனர். மேலும், 'சம்பந்தப்பட்ட வாக்காளர் இறந்துவிட்டார்' எனக்கூறி பலரது பெயர்களையும்  பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால், 'நான் உயிரோடு இருக்கும்போதே என்னை இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்' என்ற புகாரோடும் பலர் தேர்தல் அலுவலகத்தில் வந்து முறையிடுகின்றனர். ஆனால், தேர்தல் அதிகாரிகள் இவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் காதில் வாங்கிக் கொள்வதற்கே தயாராக இல்லை. 'அனைவரையும் வெளியே அனுப்புங்கள்' என்று ஒற்றை வார்த்தையில் காவலர்களுக்கு கட்டளை இடுகிறார்கள். நீங்கள் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல தேர்தல் அலுவகத்துக்குச் சென்றால், இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். அதில் ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்...



கடந்த 7 ஆம் தேதி காலையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வாக்காளர் ஆர்.கே நகர் தேர்தல் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கே நின்றுகொண்டிருந்த காவல்துறை உயர் அதிகாரியிடம் ''நான் தேர்தல் அதிகாரியைச் சந்திக்க வேண்டும். என்னை உள்ளே அனுப்புங்கள்'' என்றார் அந்த மனிதர்.

"எதற்காக..." என்று கேள்வி கேட்டார் அந்த காவல்துறை உயரதிகாரி.

"அம்மா இறந்துட்டாங்க சார்... அதான்." என்று பதிலளித்தார் அந்த நபர்.



கண்ணம்மாள் இறந்துவிட்டதாகச்  சொல்லும் புதிய வாக்காளர் பட்டியல்.

"அச்சச்சோ... வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா பெயரை நீக்கணுமா? இப்போ பாக்கமுடியாது..." என மறுத்த காவல்துறை உயரதிகாரி சில அறிவுறுத்தல்களையும் அந்த நபரிடம் கூறினார். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட வாக்காளர், "எனக்கு இந்த தகவல்கள் எல்லாம் வேண்டாம் சார். எனக்குத் தேவை வேறு தகவல்கள்..." என்றார் விடாப்பிடியாக.

"என்ன வேண்டும்?" இது காவல்துறை உயரதிகாரி.

"என் அம்மா இறந்துட்டாங்கன்னு தேர்தல் ஆணையத்துல அறிவிச்சதோட, வாக்காளர் பட்டியலில் இருந்தும் பெயரைத் தூக்கிவிட்டார்கள். இறந்துவிட்டதாக அவர்கள் சொல்லிய என் அம்மா இவர்தான்...!" என தான் கையோடு அழைத்துவந்திருந்த தன் அம்மாவைக் கை காட்டுகிறார்.

அதிர்ச்சியடைந்த காவல்துறை உயரதிகாரி, "நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை இருக்குங்க. ஆனா இப்போ தேர்தல் அதிகாரியைச் சந்திக்க முடியாது" எனக் கறாராகச் சொல்லிவிட்டார்.

"என் அம்மா உயிரோட இருக்காங்க. ஆனா வாக்காளர் பட்டியல்ல இறந்துட்டாங்கன்னு காமிச்சிருக்காங்க. என் அம்மாவையே நான் கூட்டிட்டு வந்து உங்க கண்ணு முன்னால நிறுத்தியிருக்கேன். இருந்தாலும் வேலைக்கு ஆவாதுன்னு தெரியும். எங்க அம்மா இறந்தது இறந்ததாகவே இருந்துட்டுப் போகட்டும். எனக்கு இப்போ தேவை... எங்க அம்மா எந்த தேதி, எந்த மாசம், எந்த வருஷம் இறந்தாங்கன்னு மட்டும் நான் தெரிஞ்சிக்கணும். அதுக்காக நான் ஆர்.டி.ஐ(R.T.I) விண்ணப்பிச்சிருக்கேன். இருந்தாலும் இத பத்தி அதிகாரிகிட்ட பேசணும்னு, என் அம்மாவையும் கூட்டிட்டு வந்துருக்கேன். எனக்குத் தகவல் தர வேண்டியது தேர்தல் அதிகாரியின் கடமை. எனக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால் கோர்ட்ல கேஸ் போடுவேன்." எனச் சொல்ல... பதறிவிட்டார் அந்தக் காவல்துறை உயரதிகாரி. பின் தேர்தல் அலுவலகம் உள்ளே செல்ல அவரை அனுமதித்தும்விட்டார். இதையடுத்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, அந்த வாக்காளரை உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைக்குப் பின் வெளியே வந்த அந்த வாக்காளரைச் சந்தித்துப் பேசியபோது...

"என் பேரு கன்னியப்பன். என் அம்மா பேரு கண்ணம்மாள். நாங்க புது வண்ணாரப்பேட்டையில்தான் வசிக்கிறோம். இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியானது. அதை செக் செய்தபோது என் அம்மா இறந்துவிட்டதாக இருந்தது. 'உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டார் என மாற்றியுள்ளார்களே...' என குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே பதறிப்போனோம். இதுபோன்ற பிரச்னைகள் பலருக்கும் இருப்பதாகத் தெரியவந்தது. இதைப்பற்றி தேர்தல் அலுவலகத்தில் கேட்டால், சரியான பதில் சொல்ல மாட்டார்கள் என்று தெரியும். அதனால்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக எனது அம்மா இறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை வாங்க விண்ணப்பித்திருக்கிறேன். மேலும் இந்த ஆவணத்தில், என் அம்மாவின் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் நகல், இறந்ததாகச் சொல்லி நீக்கப்பட்டுள்ள பட்டியல் அனைத்தையும் இணைத்திருக்கிறேன். இருந்தாலும் இவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்க இங்க வந்தேன். இதுபற்றி தேர்தல் அதிகாரி என்னை அழைத்துப் பேசியபோது, 'தெரியாமல் நடந்த தவறு இது. விரைவில் சரி செய்யச் சொல்கிறேன்' என்று சொன்னார். அவங்கவங்க வேலையை சரியா செஞ்சா நாம ஏன் சார் இப்படி அலையப்போறோம்?'' என்றவர்  தொடர்ந்து, ''இதை நான் விடமாட்டேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தத் தவறை சரி செய்யும் வரை தினமும் இங்கே வருவேன்'' என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

"எத்தனை அதிகாரிங்க வேலைய விட்டுப் போனாலும் பரவால்ல... காணாமப்போனக் கிணற திரும்ப வாங்காம நான் விடமாட்டேன். என்கிட்ட கிணறு வெட்டுனதுக்கான ரசீது இருக்கு. லஞ்சமா வாங்குறீங்க லஞ்சம். நான் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்" என்ற வடிவேலுவின் சாமர்த்தியத்துக்கு சற்றும் குறைந்ததல்ல.... கண்ணம்மாள் விவகாரம். தேர்தல் அதிகாரியும் இதனைப் புரிந்திருப்பார்போல....


(குறிப்பு : இன்று மதியம், தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டுவிட்டார். அவருக்குப் பதிலாக பிரவீன் நாயர் என்பவர் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.)

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");