[ad_1]
மருத்துவம், கல்வி போன்ற மக்களின் அடிப்படையான சேவைப்பணிகளில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு அத்துறைகளை தனியார் கையில் தரத் துடிக்கிறது மத்திய அரசு. அதன் தொடர்ச்சியாக, தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டுவந்த இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, 'தேசிய மருத்துவ ஆணையம்' என்ற புதிய அமைப்பைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன.
இந்தியன் மெடிக்கல் கவுன்சில் சட்டம், 1933 - ன் படி, 1934 -ல் உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவக் கவுன்சில். அனைவருக்கும் சமமான தரமான சிகிச்சை வழங்குவதையும், மருத்துவத் துறையை மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொண்டது இந்த நிறுவனம்.
மருத்துவப் படிப்புகளின் தரத்தை நிர்வகிப்பது. மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை சோதனையிட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வது, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது, வெளிநாடுகளில் வழங்கும் மருத்துவப் பட்டங்களின் தரத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகளையும் இந்நிறுவனமே செய்து வந்தது. மருத்துவர்களுக்கான பதிவையும் இந்த நிறுவனமே மேற்கொள்கிறது.
2010 - ல், குஜராத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இந்த கவுன்சிலின் தலைவர் கேசன் தேசாய் கைது செய்யப்பட்டார். அதோடு மருத்துவ கவுன்சிலின் நிர்வாகமும் கலைக்கப்பட்டது. பிறகு, 2013-ல் ஜெயஶ்ரீபென் மேத்தா தலைமையில் மீண்டும் அமைக்கப்பட்டது. தற்போது வரை அவர்தான் அதன் தலைவராக உள்ளார்.
இந்தநிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக 'தேசிய மருத்துவ ஆணையம்' ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்ட அனைத்து பணிகளையும், இந்த ஆணையத்தின் கீழ் உருவாகப்படவுள்ள 4 தன்னாட்சி அமைப்புகளே இனி கவனிக்கும் என்றும் நட்டா அறிவித்திருக்கிறார்.
‘மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளையும் மருத்துவக் கல்லூரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்காகவும், சுகாதாரத் துறையில் சீர்திருத்தம் செய்வதற்காகவுமே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுகிறது என்றும் நட்டா தெரிவித்துள்ளார். தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி, இனி, மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய படிப்புகளைத் தொடங்கவும் இனி அனுமதி பெறத்தேவையில்லை. அதேபோல் மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்கள், தொழில் புரிய புதிய தகுதித் தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சிபெற வேண்டும்.
'தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு தேர்வு செய்யும். மத்திய மந்திரி சபை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு, தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும். அவற்றில் ஐந்து உறுப்பினர்களும், 12 அலுவல் நிலை உறுப்பினர்களும் இருப்பார்கள்' என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவும் அறிவிப்பும் மருத்துவச் செயற்பாட்டாளர்கள் இடையே கொதிப்பை உருவாக்கியிருக்கிறது.
“இந்திய மருத்துவக் கவுன்சிலில் தற்போது கிட்டத்தட்ட 110 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்கள். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில், அனைத்து உறுப்பினர்களையும் நேரடியாக மத்திய அரசே நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மூலமாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டபோது கூட பல தவறுகள் நடந்தது உண்மைதான். அதற்காக அனைவரையுமே நேரடியாக நியமனம் செய்வோம் என்று கூறுவது சரியல்ல. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர், தவறுகள் நடக்கும்போது எதிர்த்துக் கேள்வி கேட்டனர். இனி அதற்கான வாய்ப்பு இல்லை.
யாரும் தங்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. தங்களுக்கு ஆதரவானவர்களை மட்டும் வைத்துக்கொண்டு விருப்பத்துக்கு ஏற்றார் போல் செயல்படலாம் என்பதற்கான திட்டமே இது. நீட் போன்ற தேர்வுகளைத் திணிக்கவும் , தரமற்ற பல சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கவும் இது வாய்ப்பாக அமையும் " என்கிறார், 'மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவ அரங்க'த்தின் தலைவர் ரெக்ஸ் சற்குணம்.
“சுகாதாரத்துறையை பிஜேபி மயமாக்கும் முயற்சியே, இந்த 'தேசிய மருத்துவ ஆணையம்' "என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
“தேர்தலில் முறைகேடுகள் நடக்கிறது என்பதற்காக தேர்தல் ஆணையத்தைக் கலைக்க முடியாது. நீதித்துறையில் ஊழல் இருப்பதற்காக நீதித்துறையையே கலைக்க முடியுமா? இந்திய மருத்துவக் கவுன்சிலில் ஊழல், முறைகேடுகள் இருந்தால் அதைக் களைவதற்கான வேலையைத்தான் செய்யவேண்டும். கலைப்பது சரியாக இருக்காது.
இதற்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில், மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்கவும், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கவும்தான் இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள். மருத்துவக் கவுன்சிலில் சில தவறுகள் நடந்தது உண்மைதான். ஆனால் தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் அப்படி அல்ல... நேரடியாக சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும். ஏற்கனவே இருந்த சிறிதளவு சுதந்திரமும் இனி இருக்காது.
கல்வித்துறையில் தங்கள் கொள்கைகளைப் புகுத்தியதைப் போல மருத்துவத்துறையில் புகுத்த துடிக்கிறது மத்திய அரசு. மத்திய பிரதேசத்தில் 'ஜோதிட மருத்துவம்' கொண்டு வந்தார்கள். பலத்த எதிர்ப்பு வரவே அதைக் கைவிட்டார்கள். இனி அதைத் தீவிரமாக செய்வார்கள். ஒருபுறம் மருத்துவத்தின் தரத்தை குலைத்துக்கொண்டு இன்னொருபுறம் தரத்தை மேம்படுத்துகிறோம் என்று நாடகமாடுகிறார்கள்..." என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கலைக்கப்படுகிறது இந்திய மருத்துவ கவுன்சில்... இனி மருத்துவக் கல்லூரிகள் விருப்பம் போல் செயல்படலாம்! #NationalMedicalCommission
TAGS :
COMMENTS