[ad_1]

இந்த நாட்டில் ஒடுக்கப்பட்டவனாகவோ, ஒடுக்குபவனாகவோ வாழலாம்; ஆனால், நேர்மையாக வாழ முடியாது. வாழ்வை இழக்கும் தறுவாயில் ரெசாவின் நிலை இப்படியானதுதான். உலகின் எந்தவொரு நாட்டில் வாழ்ந்தாலும் சாமானிய மக்களின் மனம் இந்த அநீதியை ஜீரணிக்க முடியாமலிருப்பது நிதர்சனம். அந்த மனக்குமுறலைக் காட்சிப்படிவமாகப்  பதிவுசெய்திருக்கிறது `A Man Of Integrity' என்ற ஈரான் நாட்டுத் திரைப்படம். கேன்ஸில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளது இந்தப் படம். சென்னையில் நடந்துகொண்டிருக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம், திரைப்பட ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

ஈரான் இயக்குநர் முகமது ரசூல்ஃப், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை எடுத்ததற்காக, அவருக்குச் சிறைதண்டனை அளித்தது ஈரான் அரசு. உலகில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் ஈரான் நாட்டுத் திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஈரான் திரைப்படங்களில் உள்ள நிலவியல்தன்மையுடன்கூடிய யதார்த்தம் பலராலும் சிலாகிக்கப்படும். போர்களும் கட்டுப்பாடுகளும் நிறைந்த ஈரான் தேசத்தின் வாழ்வியல் நெருக்கடிகளை குழந்தை மற்றும் பெண்களின் உளவியல் காரணத்திலிருந்து சொல்லிய படங்கள் ஈரானிலிருந்தே அதிகம் வந்துள்ளன.


இந்தப் படம், சாமானியன் ஒருவன், அதிகாரத்தால் படும் பிரச்னைகளை தேசத்தில் நிலவும் பல்வேறு ஒடுக்குமுறைக் காரணிகளோடு இணைத்துப் பேசுவதன் மூலம் தனித்துவமடைகிறது. வெறுமனே வலுவான கதையை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதை சினிமாவாகக் காட்சிப்படுத்தியதிலும் தனித்து நிற்கிறது.

இனி, படத்தைப் பற்றிப் பார்ப்போம்...

ஈரானின் மேற்கு பிராந்தியந்தில் தங்கமீன் பண்ணை மற்றும் விவசாயம் செய்துவரும் ரெசா, நேர்மையான முறையில் வாழ்கிறான். வங்கியில் வாங்கிய கடனின் தவணைத்தொகையைத் திருப்பிச் செலுத்த தாமதமாகிவிடுகிறது. தனக்கு லஞ்சம் கொடுத்தால் அந்தத் தவணைப் பணத்தை சரிசெய்துவிடலாம் என அதிகாரி ஒருவர் சொல்கிறார். அவ்வாறு வேண்டாம். தன் மீன்களை விற்றுப் பணத்தைச் செலுத்துவிடுவதாகக் கூறுகிறான் ரெசா.

தன் மீன் பண்ணைக்கு வரவேண்டிய நீரை, திடீரென ஒருநாள் அந்தப் பகுதியில் உள்ள தொழிலதிபர் தடுத்துவிடுகிறார். ரெசா, தடுப்பை நீக்கி தண்ணீரைத் திறக்கும்போது, தொழிற்சாலையின் அடியாள் அப்பாஸ், ரெசாவைத் தாக்க வர, ரெசா தன் கையை உடைத்துவிட்டதாக அப்பாஸ் அளித்த பொய்யான குற்றச்சாட்டால், சிறைக்குச் செல்கிறார் ரெசா. இவரை விடுதலை செய்ய, பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் அவன் மனைவி ஹேடிஸ், லஞ்சம் கொடுத்து ரெசாவை விடுவிக்கிறார். சிறையிலிருந்து வெளிவந்த ரெசாவின் பண்ணையையும் நிலத்தையும் கைப்பற்ற நினைக்கும் தொழிற்சாலையினருக்கும், அவர்களை எதிர்த்துப் போராடும் ரெசாவின் அக, புறப் பிரச்னைகளுமே `A Man Of Integrity' படம். 

மேலோட்டமாகப் பார்த்தால் ஹீரோ-வில்லன் பழிவாங்கல் படலமாகத் தெரியும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்துக்கு என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகுமோ அதையே காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சிறையிலிருந்து வெளிவரும் ரெசாவின் மீன் பண்ணையில் உள்ள நீரில் விஷம் கலந்துவிடுகிறது தொழிற்சாலை முதலாளிக் கும்பல். பண்ணையில் செத்துக்கிடக்கும் ஆயிரமாயிரம் மீன்களைக் கொத்தித் தின்ன, வானில் காக்கைகள் கூட்டமாகக்  கரைந்து ஓலமிட, ரெசாவும் ஹேடிஸும் தகர டின்களை அடித்து ஒலியெழுப்பி காக்கைகளை விரட்டுகின்றனர். நீரில் மிதந்துகிடக்கும் உயிரற்ற மீன்களை வாரி அணைத்து நிற்கும் ரெசாவின் துயர், வீடுகளை, நிலங்களை தனியார்களுக்குப் பலிகொடுத்த பல கோடி விவசாயிகளின் துயர். பின்னணி இசையே இல்லாத இந்தப் படத்தில் காட்சியின் வீரியத்தை கேமரா கோணங்களின் மூலமும், சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலமும் கடத்தியிருக்கிறார்கள். 

குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த பெண், பள்ளியில் படிக்கவிடாமல் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறாள். அவளது தாய், பள்ளித் தலைமை ஆசிரியையான ஹேடிஸியிடம், தன் மகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டாள் என அழுது புலம்புகிறாள். பிறகான ஒரு காட்சியில், அந்தப் பெண்ணின் பிணத்தை சமாதியில் அடக்கம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது. தன் மகளின் பிணத்தைப் புதைக்க இடமின்றி, அந்தத் தாய் கதறி அழுதுகொண்டிருக்கிறார். கல்லறைக்கு வௌியே போலீஸ் அதிகாரியிடம் `இங்கு புதைக்க அனுமதித்தால் அவர் சொர்க்கம் சென்றுவிடுவார் என அஞ்சுகிறீர்களா' என ரெசா பேசும் வசனம் மறுக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலித்தது. இப்படி படம் முழுவதும் சிறு சிறு காட்சிகளிலும் அறம் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொருமுறை தனக்கு அநீதி நிகழும்போதும், குன்றில் இருக்கும் நீரில் குளித்து, தான் தயாரித்த பழரசத்தைப் பருகியபடியே தன் மனதை ஆசவாசப்படுத்திக்கொள்கிறான் ரெசா. தன்னிடம் வந்து சேராமல் தடுக்கபட்ட நீரிடம், காதலியிடம் சமாதானம் கோருவது அவன் சென்று ஆறுதலடையும் காட்சிகள், மனித மனதின் அக உணர்வைப் பேசுகின்றன.

தன் கணவனின் நிலைக்குக் காரணமான அப்பாஸின் மகளை அழைத்து ``ஆண்கள் பெருமையில் செய்யும் தவறுகளை, பெண் தன் புத்திசாலித்தனத்தால்தான் சரி செய்ய வேண்டும்'' என ஹேடிஸ் கூறும் காட்சி, பெண்களின் மன வெளிப்பாடாக இருந்தது.

தன் தோழியைச் சந்திக்க ரெசா செல்லும்போது, அவள் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். ஈரான் சினிமாவில் இதுபோன்ற காட்சி இருப்பது அரிதான ஒன்று. அப்பாஸைக் கொன்றுவிட ரெசாவை வைத்து திட்டமிடும் கும்பல், இறுதியில் அதை நிறைவேற்றிவிடும். படத்தின் இறுதியில் அப்பாஸைக் கொன்று அப்பாஸின் இடத்துக்கு ரெசா சென்றிருப்பான். இந்த அதிகாரக் கும்பலின் வலைப்பின்னலில் நீ வந்து மாட்டிக்கொண்டாய் என ரெசாவிடம் அதிகாரி கூறும் இடம், படத்தின் மொத்தக் கருத்தையும் கடத்துகிறது.

கல்லூரியில் நேர்மையானவனாக இருந்ததால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, நேர்மையின் காரணமாகவே தன் பண்ணை வீட்டை காவுகொடுத்து இறுதியில் நேர்மையற்றவர்களின் கும்பலோடு அவர்களுக்கான ஆளாகவே மாற்றப்படுகிறான் ரெசா. ``இந்த நாட்டில் நீ ஒடுக்கப்படுபவனாக இருக்க முடியும். இல்லாவிட்டால் ஒடுக்குபவனாக வாழ முடியும். ஆனால், ஒருபோதும் நேர்மையாக வாழ முடியாது" என்பதாக படம் முடிகிறது. 

பின்னணி இசையே இல்லாத படத்தில் ரெசாவின் மன வெறுமையை, ஹேடிஸின் ஆற்றாமையை, கேமராவின் கோணங்களிலேயே கடத்தியிருக்கிறார்கள். மேற்கு ஈரானின் லேண்ட்ஸ்கேப் காட்சிகள், ரெசாவின் வெறுமையை காட்சி வழியே கடத்துகின்றன. குழப்பமான மனதுடன் நீரில் ஆறுதல் தேடும் ரெசாவின் மீது விழும் `மஞ்சள் ஒளி' ரெசாவுக்கு இயற்கை கூறிய ஆறுதல். ஜெயிலில் இருக்கும் ரெசாவை விடுவிக்க, பணம் கொடுக்கும் காட்சியில் ஹேடிஸ் காருக்குள் அமர்ந்திருப்பார். அவள் அண்ணன் சென்று பணம் கொடுக்கும் காட்சியில் அதன் தன்மை குறையாமல் பார்த்துக்கொண்டது படத்துக்கான சிறப்புகளில் ஒன்று.



பல்வேறு கிளைகளாக விரியும் காட்சியில் எடிட்டிங்கின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. இடையில் சிறு அயர்ச்சி ஏற்பட்டாலும், நிச்சயம் இது ஈரானின் வேறுவிதமான படம் என்பதில் சந்தேகமில்லை. உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தும் படைப்பாக இருப்பது இந்தப் படத்தின் தனித்தன்மையைக் காட்டுகிறது. மனித மனம் தனக்கான பிரச்னையை எதிர்கொள்ள அடையும் சிக்கல், மனைவிக்கும் கணவனுக்குமிடையேயான கருத்து மோதல்கள், கையறுநிலையில் மனைவியின் ஆறுதல், பாதிக்கப்பட்டவனைப் பகடையாக்கி தங்கள் காரியம் சாதிக்கும் கும்பல், அனைத்து நாடுகளிலும் நிலவும் இனம் சார்ந்த பாகுபாடு, அகதி மக்களின் புறக்கணிப்பு இவற்றையெல்லாம் தங்களுக்குச் சாதகமாக வைத்திருக்கும் முதலாளிவர்க்கம் இவற்றை திரை விலக்கிக் காட்டியுள்ளது இந்தப் படம்.


கருத்தியல் சார்ந்த படைப்புகளில் கலைவடிவ ரீதியாகவும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அது காலம் கடந்து நிற்கும். `A Man Of Integrity' அப்படியான ஒரு படைப்பு!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");