[ad_1]

அண்மைக் காலங்களில் ஏதாவதொரு காரணத்தைவைத்து மதச் சிறுபான்மையினர்மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள்மீது, தாக்குதல்கள் நடைபெறுவது இயல்பாக ஆகிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த அளவுக்குக்கூடச் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.




பிரிட்டிஷ் ஆட்சியில் அரசாங்க வேலைகளில் 35 சதவிகித முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால், இப்போது சுதந்திர இந்தியாவில் அந்தச் சதவிகிதம் 3.5 ஆகக் குறைந்துள்ளது; அதேபோல, 15 சதவிகிதமாக இருந்த கிறித்தவர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 6 - 14 வயதுக்குட்பட்ட  25 சதவிகித முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூடமே செல்வதில்லை அல்லது இடையிலேயே பள்ளியைவிட்டு நின்றுவிடுகின்றனர். பட்டதாரிகளில் 25 பேரில் ஒருவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை செல்கின்றனர். உயர்படிப்புக்குச் செல்வோர் 50-ல் ஒருவரே. இன்றைய இந்தியாவில் 31 சதவிகித முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர்.

சிறுபான்மையினர் உணவுப் பழக்கத்துக்காகக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள்மீது தீவிரவாத முத்திரை குத்தி வெறுப்பு உமிழப்படுகிறது; சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவோரின்மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது; தேர்தல் நலனுக்காகப் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம்கள்மீது வெறுப்பு விதைக்கப்பட்டு கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில், 2014-ல் உ.பி. தேர்தலின்போது முசாபர் நகரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்... பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரச் செய்யப்பட்டனர். இதேபோல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள்மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துவருகிறது. மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றச் சூழலில் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18-ம் நாளை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று 1992-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதை உலகின் ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

எந்த ஒரு நாட்டிலும் மதம், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் அந்த நாட்டின் பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டுச் சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் சாரமாகும்.

சிறுபான்மையினர் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளை மதித்து நடக்க வேண்டும்; அவற்றைப் பரப்புவதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்; சமூகங்களுடனான அவர்களுடைய பரஸ்பர நட்பும், மரியாதையும் பேணப்பட வேண்டும்; இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பவை அந்த அறிவிப்பின் அடிப்படை அம்சங்களாகும். இவை ஐ.நா. உடன்படிக்கை தொடர்பான அனைத்து நாடுகளின் விதிமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, அவற்றால் எந்த ஒரு நாட்டின் எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பிரிவாவது பாதிக்கப்படுமானால், அதுகுறித்து அந்தப் பிரிவினர் சர்வதேச அமைப்புகளில் முறையிடவும், அந்த அமைப்புகள் அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐ.நா. அமைப்பின் அறிவிப்பு வழிவகை செய்துள்ளது. இவற்றை நேர்மையாக  நடைமுறைப்படுத்தும் அரசுகளே நிஜமான ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.  

இந்தப் பிரகடனத்துக்கு முன்பே சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டே இந்திய அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள் மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், கலாசாரச் சிறுபான்மையினர் மற்றும் தங்களுக்கென்று சொந்த வாழ்நெறி நூலை வைத்திருப்போர் ஆகியோரைச் சிறுபான்மையினராக அங்கீகரிக்கின்றன.

இந்திய அரசியல் சட்டத்தின் பாகம் IV-A குடிமக்கள் அனைவரின் அடிப்படைக் கடமையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் பிரிவு 51-A, சிறுபான்மையினர் குறித்த சிறப்புப் பிரிவாகும்; மதம், மொழி மற்றும் பிராந்திய, பிரிவு வேற்றுமைகள் கடந்து இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும் ஒத்திசைவு மற்றும் பொதுவான சகோதரத்துவ உணர்வை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் நமது கலவையான கலாசாரத்தின் செழுமையான பாரம்பர்யத்தை தித்துப் பாதுகாக்க வேண்டும் என்று அந்தப் பிரிவு கூறுகிறது.

அரசியல் சட்டத்தின் ஆசான் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையிடம் கூறியதாவது, ‘‘சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு எதிராக ஒருவகையான வெறித்தனத்தை வளர்த்துக்கொண்டுள்ள கடும்போக்கினருக்கு நான் இரண்டு விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒன்று, சிறுபான்மையினர் ஒரு வெடித்தெழும் சக்தியாக இருக்கிறார்கள்; அந்தச் சக்தி வெடித்தெழுமானால், அரசின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் வெடித்துச் சிதறடித்து விடலாம். இதற்கு ஐரோப்பிய வரலாறு போதுமான சாட்சியங்களைக் கொண்டுள்ளது.

மற்றொன்று, இந்தியாவில் சிறுபான்மையினர் தமது இருத்தலை பெரும்பான்மையின் கரங்களில் ஒப்படைத்துள்ளனர். அயர்லாந்துப் பிரிவினையைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் வரலாற்றில் ரெட்மான்ட் கர்சனிடம், ‘பிராடஸ்டன்ட் சிறுபான்மையினருக்கு நீங்கள் விரும்பும் எந்தப் பாதுகாப்பையும் கேளுங்கள். ஆனால், நமக்கு ஓர் ஒன்றுபட்ட அயர்லாந்து இருக்கட்டும்' என்று கூறினார். அதற்கு கர்சன், ‘உங்கள் பாதுகாப்பு யாருக்கு வேண்டும்? நீங்கள் எங்களை ஆள்வதை நாங்கள் விரும்பவில்லை'.

இந்தியாவில் எந்தச் சிறுபான்மையும் இந்த நிலைப்பாட்டைஎடுக்கவில்லை. அவர்கள் விசுவாசத்துடன் பெரும்பான்மையின் ஆட்சியை, அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை அல்ல ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியது பெரும்பான்மையின் கடமையாகும். சிறுபான்மையினர் தொடர்வார்களா அல்லது மறைந்து போவார்களா என்பது பெரும்பான்மை இதைப் பழகிக்கொள்வதைச் சார்ந்ததாகும். சிறுபான்மைக்கு எதிராகப் பாகுபடுத்திக் காண்பதை பெரும்பான்மை கைவிடும் அந்தக் கணமே சிறுபான்மையினராக இருந்துவருவதற்கு எந்த அடித்தளமும் இல்லாமல் போகும், அவர்கள் சிறுபான்மையாக இருப்பதிலிருந்து மறைந்துவிடுவார்கள். 

பெரும்பான்மை இதை மெய்யாக உணருமா? 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");