[ad_1]

‘ஒரு காலத்தில் நமக்கெல்லாம் `முதியோர் வாக்கு வேதவாக்கு.’ அவர்களை தெய்வமாக நினைத்தோம். பிறகு மரியாதையோடு நடத்த ஆரம்பித்தோம். அதன் பிறகு சக மனிதர்களாக நினைத்து நேசித்தோம். இப்போதோ கைகளில் இருக்கும் ஆறாவது விரலைப்போல தேவையில்லாத ஒன்றாக, ஒருவராகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் முதியோர் பார்க்கப்படுகின்றனர். தங்கள் வருத்தத்தை வெளியே சொல்ல முடியாமல், அடக்கி அடக்கி, மௌனமாகவே பல முதியவர்கள் மாண்டு போகிறார்கள். குழந்தைகள் வன்கொடுமைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் முதியவர்கள் மீதான வன்கொடுமையைப் (Elder abuse) பற்றி யாருக்கும் அவ்வளவாகத் தெரிவதில்லை. அது குறித்து அக்கறைப்படுவதும் இல்லை’’ வருத்தத்தோடு பேசுகிறார் முதியோர் நல மருத்துவர் வி.எஸ் நடராஜன்.




2011- ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8.6 சதவிகிதம் முதியவர்கள் இருக்கிறார்கள். அதாவது 121 கோடி மக்களில் 10.39 கோடி பேர் முதியோர். ஹெல்பேஜ் (Helpage) என்ற தொண்டு நிறுவனம், 2014-ம் ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் உள்ள முதியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.

அவர்களில், தங்கள் மகன்களால் 56 சதவிகிதம் பேரும், மருமகளால் 23 சதவிகிதம் பேரும், மற்றவர்களால் 21 சதவிகிதம் பேரும் அவமதிக்கப்படுகிறார்கள் (இதில் மகள்களும் அடக்கம்). தன் அறக்கட்டளையின் மூலமாக முதியோர் அவமதிப்புக்கு எதிராகப் பல்வேறு முகாம்களை நடத்திவருபவரும், மாணவர்களுக்கு மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருபவருமான முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் இது குறித்து விரிவாக விளக்குகிறார்,

“குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராகப் பலர் போராடி வருகிறார்கள். ஆனால் முதியோர் அவமதிக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரிவதில்லை. `அப்யூஸ்’ (Abuse) என்றாலே பாலியல்ரீதியான துன்புறுத்தல் என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். அவமதித்தல், அவமானப்படுத்துதல் போன்றவையும் வன்கொடுமைதான்.

குழந்தைகள் வன்கொடுமையைப் பொறுத்தவரை, குழந்தைகள் விவரம் அறியாதவர்கள். அதனால் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே துன்பத்துக்கு ஆளாகின்றனர். இது, மிகவும் கொடுமையான ஒன்று.

ஆனால், முதியோர் வன்கொடுமையைப் பொறுத்தவரை, தாங்கள் துன்புறுத்தப்படுவது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களால் வெளியே யாரிடமும் அதைச் சொல்ல முடியாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமோ, மருத்துவரிடமோ தங்களுக்கு நிகழும் துயரங்கள் குறித்துச் சொல்லி, ஒருவேளை அது குடும்பத்தில உள்ளவர்களுக்குத் தெரிந்துபோனால் அவர்களுக்கு நிகழும் கொடுமைகள் இன்னும் அதிகமாகும் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கிறது. அதனாலேயே யாரிடமும் சொல்லாமல், உள்ளுக்குள்ளே புழுங்கித் தவித்துவருகிறார்கள்.

முதியோரை அவமதிப்பது நான்கு வகைகளில் நடக்கிறது...

மனதளவில் துன்புறுத்துதல் (Psychological abuse):

வீட்டில் உள்ள முதியவர்களிடம் வேண்டுமென்றே பேசாமல் இருப்பது; அவர்கள் கேட்கும் பொருள்களை வாங்கித் தராமல் இருப்பது; அவர்களுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு தராமல் இருப்பது... இவையெல்லாம் மனதளவில் அவர்களைத் துன்பப்படுத்தும். உதாரணமாக, ஒரு பெண்ணின் மாமியாருக்குத் தேங்காய் சட்னி பிடிக்காது என்று வைத்துக்கொள்வோம். வேண்டுமென்றே அதையே தினமும் செய்து கொடுத்து மாமியாரைச் சாப்பிடச் செய்வார் அந்தப் பெண். `சர்க்கரை வேண்டாம்’ என்றால், சர்க்கரை போட்டு காபி கொடுப்பது... இப்படி ஏராளமான கொடுமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற செயல்களால் அவர்கள் மனதளவில் மிகவும் துன்பப்படுவார்கள். `இதை முதியவர்களைப் புறக்கணித்தல்’ (Elder neglect) என்றும் சொல்லலாம்.

வார்த்தைகளால் துன்புறுத்துதல் (Verbal abuse):

நேரடியாகத் திட்டுவது, அன்பாக எதையும் பேசாமல், மிரட்டும் தொனியிலிலேயே பேசுவது... என வார்த்தைகளால் துன்புறுத்துவதுதான் 'வெர்பல் அப்யூஸ்.'



பணத்துக்காகத் துன்புறுத்துதல் (Finanacial abuse):

வீட்டில் சொத்து பிரிக்கும்போது, இதுபோன்ற துன்புறுத்தல்கள் அதிகமாக நடைபெறும். அதேபோல தனியாக வசிக்கும் முதியவர்களை பொருள்கள் விற்பனை செய்ய வருபவர்கள், வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் போன்றோர் பொருளாதாரரீதியாக ஏமாற்றுவார்கள். இதுவும் ஒருவிதத் துன்புறுத்துதல்தான்.

உடல்ரீதியான துன்புறுத்துதல்கள் (Physical abuse):

அடிப்பது, தள்ளிவிடுவது, கிள்ளுவது போன்ற வகையில் துன்புறுத்துவது. இது பெரும்பாலும் 'டிமென்ஷியா' போன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகமாக நிகழும். சில முதியோர் இல்லங்களில் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வதுண்டு. சில வீடுகளிலும் இது நடக்கும். முதியவர்களை அடித்துத் துன்புறுத்துவதைக் காட்சிப்படுத்தி வெளியாகியிருக்கும் பல வீடியோக்களே இதற்குச் சாட்சியாக இருக்கின்றன.

யார் யார் துன்புறுத்தப்படுகிறார்கள்?

வசதி இல்லாமல் தங்கள் பிள்ளைகளை நம்பி இருக்கும் முதியவர்கள்.

ஒரே பிள்ளைகளைப் பெற்றவர்கள்.

நோயுற்ற முதியவர்கள்.

படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள்.

தேவைக்கு அதிகமாகச் சொத்துசேர்த்து வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

எப்படிக் கண்டுபிடிப்பது, சரி செய்வது?

முதியவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பெரும்பாலும் வெளியில் சொல்ல மாட்டார்கள். சிகிச்சைக்கு வரும்போது மருத்துவர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்களிடம் பேச வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருப்பது தெரியவந்தால், குடும்பத்தினரிடம் நேரடியாகச் சொல்லாமல் இலை மறை காயாகச் சொல்ல வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு முதியோர்களை மதிப்பது பற்றி பல்வேறு விழிப்புஉணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களுக்கும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். `நீங்கள் வயதானவர்களாக ஆகும்போது உங்கள் நிலைமையும் இதுதான்’ என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.

சிறப்பாக முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் குடும்பங்களை, அவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைப் பாராட்டி விழா நடத்தலாம். அப்போது மற்றவர்களும் அதைப் பார்த்துத் திருந்த வாய்ப்புள்ளது.

சில முதியவர்கள் தனிமையில் இருப்பதாக தாங்களாகவே நினைத்துக்கொள்வார்கள். அதனால் முதியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுடன் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செலவிட வேண்டும். பக்கத்தில் உள்ள கோயில்களுக்குக் கூட்டிச் செல்லலாம். அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள குழந்தைகளை அவர்களுடன் இருக்க, பேச, விளையாட அனுமதிக்கலாம்.



முதியவர்களும் தனிமையில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். தனிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனிமையைக் காதலிக்கப் பழகிக் (Love Lonelyness) கொள்ள வேண்டும்’’ என்கிறார் நடராஜன்.

(முதியவர்களுக்காக உதவி எண் (Help line):

சென்னை மாநகராட்சி : 1253,


தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு : 1800 180 1253 )
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");