[ad_1]



வெடிகுண்டுகள் அலற, கண்ணாடி உடைய, சுமோ பறக்க, ரத்தம் தெறிக்க வழக்கமான மசாலாக்களுடன் தமிழில் கமர்ஷியல் படங்கள் ரிலீஸாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படங்களையெல்லாம் பார்க்கும்போது குறிப்பிட்ட அந்தச் சண்டைக் காட்சிகளை ரசித்து விட்டு கடந்து செல்லும் நாம், அந்தக் காட்சிகளுக்காக உழைத்தவர்களை என்றாவது ஒரு நொடி நினைத்துப் பார்த்திருக்கிறோமா?.. அப்படி 'பாம்' ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கும் சுந்தரத்தைச் சந்தித்தோம். அவரிடத்தில் 500 படங்களுக்கு மேல் உழைத்திருக்கும் களைப்பும் தெரியவில்லை, களிப்பும் தெரியவில்லை. அந்த வெள்ளந்தியான மனிதர் தன் பக்கங்களைப் புரட்டிக் காண்பித்தபோது.... 


“1993-ல் இருந்து சினிமாவில் இருக்கேன். படங்களிலெல்லாம் நீங்க பார்க்குற கத்தியால குத்தினா ரத்தம் வரும் காட்சி, கார் வெடித்து சிதறுவது, கண்ணாடி உடைவது இந்த மாதிரி காட்சிகளையெல்லாம் செஞ்சு கொடுப்பதுதான் என்னோட வேலை. சின்ன வயசுல இருந்தே எனக்கு எலக்ட்ரிக் வேலையெல்லாம் செய்யத் தெரியும். எனக்கு ராமச்சந்திரன்னு ஒரு நண்பர் இருந்தார். அவர் மூலமாக நிறைய சினிமா நண்பர்கள் அறிமுகம் கிடைக்க அப்படியே தமிழ் சினிமாக்குள்ள நுழைந்தேன். ராமச்சந்திரன்கிட்டதான் முதல்ல அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேலைகள் செஞ்சுட்டு அவர்கூடவே இருந்தேன். அப்படியே படிப்படியாக முன்னேறி இப்போ 500 படங்கள் வரைக்கும் வேலை செஞ்சிருக்கேன்." 

"பாம்.. வெடிச்சத்தம் என சினிமாவில் பார்க்கும்போதே பதறுகிறோம்.. நேரில் அதைச் செயல்படுத்துவது பற்றி சொல்லுங்கள் ?”

பாம் வெடிக்க வைக்கிறது எங்களுக்குப் பட்டாசு மாதிரிதான். பட்டாசுல இருக்கும் மருந்தையெல்லாம் எடுத்திடுவோம். ரெண்டு ஒயர் மோதினா ஸ்பார்க் அடிக்கும்ல.. அதுதான் ஃபார்முலா. இதை வெச்சுதான் படத்தில பாம் மாதிரி காட்டுறோம். ஒரு காரை வெடிக்க வச்சு பறக்க வைக்கணும்னா.. அதுக்கு முன்ன அந்த கார்ல இருக்குற இன்ஜினை எடுத்துடுவோம். டம்மியான காரை செட் பண்ணி, அதுக்குள்ள நான்கு லிட்டர் பெட்ரோல் நிரப்பிடுவோம். அந்த காரை ஒயர் மூலம் மினி ஜெனரேட்டருக்கு கனெக்ட் பண்ணிடுவோம். பக்கத்தில் இருக்கவங்கள ஒரு 100 அடிக்கு அப்புறப்படுத்திடுவோம்.

ஷுட் பண்றப்போ சுவிட்ச் போட்டா ஒயர் ஸ்பார்க் ஆகி பெட்ரோல் இருக்க டம்மி கார் உடனே மேலே போய் வெடிக்கும். பிறகு, கண்ணாடி உடையுற சீன் எடுக்குறப்போ பயன்படுத்துவது எல்லாமே ஃபைபர் கிளாஸ்தான். பெரிய கிளாஸ் உடையுற மாதிரி காட்டணும்னா, ரெண்டு பக்கமும் போல்டு போட்டுடுவோம். நாங்க ரெண்டு பக்கமும் கண்ணாடிக்குப் பக்கவாட்டுல உட்காருவோம். கண்ணாடியை ஹீரோ உடைக்கும்போது நாங்க அவர் தொடுறதுக்கு நூலிழையில பட்டன் அழுத்துவோம். உடனே, ஹீரோ உடைச்ச மாதிரி கண்ணாடி கீழே விழும். இதுமாதிரி நிறைய ட்ரிக்ஸ் இருக்கு. ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கு ஏத்தமாதிரி வடிவமைச்சு பண்ணுவோம். இதில் நிறைய ரிஸ்க் இருக்கு. காரை வெடிக்க வைக்கும்போது மருந்து ரெடி பண்றதுல ரொம்ப கவனமாக இருக்கணும். கொஞ்சம் அசந்தாக்கூட உயிரே போயிடும். "கரணம் தப்புனா மரணம் " பழமொழி எங்களுக்கும் பல சமயங்களில் பொருந்தும்.



“இந்தத் தொழிலில் வருமானம், வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?”

நிலையான வருமானம் கொஞ்சம் கஷ்டம். பெரிய நடிகர்கள் நடிக்கிற படம்னாலும், அதே நல்ல ஆக்ஷன் படமாக இருந்தால் ஒருமாசத்துக்கு வேலை கிடைக்கும். எங்க தொழிலே ஆக்ஷன் படங்களை மட்டும்தான் நம்பி இருக்கு. சில சமயங்களில் ஒருமாசம் வரைக்கும் வேலை இல்லாம இருக்கும். அப்போதைக்கு, சின்னச் சின்ன வேலைகளுக்குப் போயிடுவோம். இப்போ வயசாயிடுச்சு. முன்னமாதிரி வேலைக்குப் போறதில்ல. தொடக்கத்தில் ஒரு படம் ஷூட்டிங்னா எங்க சீன் எல்லாம் எடுத்து முடிச்சிட்டாலும், படம் முடியுற வரைக்கும் கூடவே வச்சிருப்பாங்க. ஏதாவது சின்னச் சின்ன வேலைகள் செஞ்சு கொடுத்துட்டு அவங்ககூடவே இருப்போம். ஆனால், இப்போலாம் வேலை நாள்கள்ல மட்டும்தான் கூப்பிடுறாங்க. வேலை முடிந்ததும் உடனே பேக்அப் பண்ணி அனுப்பி வெச்சிடுறாங்க. இதனாலயே வருமானம் நிறைய குறைஞ்சு போச்சு. அதுமட்டுமில்லாம, வெளிமாநிலத்துல இருந்து புதுபுது டெக்னிக்கல் விஷயங்கள் அதிகமா வந்துடுச்சு. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மோகம் அதிகமாயிட்டு இருக்கு. இதெல்லாம் எங்க வேலைவாய்ப்புகளை பறிச்சுடுச்சுன்னுதான் சொல்லணும்.

“நீங்கள் பணியாற்றிய திரைப்படங்கள், சவால் நிறைந்த காட்சிகள் பற்றி சொல்லுங்கள்?”

நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 500 படங்களும், இந்தியில் இரண்டு படங்களும் வேலை பார்த்திருக்கிறேன். நடிகர் அர்ஜுன் கூட நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். 'ஜெய்ஹிந்த்', 'சுறா', 'ஆயிரத்தில் ஒருவன்', 'திருமலை', 'பரமசிவன்', 'ஜனா', 'சிவாஜி', 'தசாவதாரம்' இதெல்லாம் எடுத்துக்காட்டா சொல்லலாம். எனக்கு ரொம்ப சவாலாக இருந்த படம் 'ஜெய்ஹிந்த்'. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சியில் செட் மொத்தமும் வெடிக்கும். அதுக்கு நிறைய மெனக்கெட்டோம். அந்த மொத்தப் படத்துக்கும் 'பாம் எஃபெக்ட்ஸ்'ல 3 பேர்தான் வேலை செஞ்சோம். 'சிவாஜி' படத்தையும் மறக்க முடியாது. அந்தப் படத்துல வர்ற 'தீ.. தீ..' பாட்டுக்கு நடுவுல ரஜினி சார், மேல போயிக்கிட்டே வில்லனுங்களை சுடுவாரு. அப்போ, வில்லனுங்க எல்லாரும் கண்ணாடியை உடைச்சுட்டு கீழே விழுவாங்க. இதுமாதிரி அந்த ஒரு பாட்டுலயே நிறைய சாகசக் காட்சிகள் இருக்கும். அதுக்கு மட்டும் ஒரு மாசம் பின்னி மில்லுல வேலை பார்த்தோம். கார்த்தி நடிச்ச 'ஆயிரத்தில் ஒருவன்' படமும் அதிக வேலை வச்சுது. காலையில் ஆறு மணிக்கு ஷுட்டிங் போனா அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்குத்தான் திரும்புவோம். அந்தப் படத்துலயே மாதக்கணக்கில் வேலை பார்த்தோம். 

“உங்களை யாராவது பாராட்டியிருக்காங்களா?”

‘வார் அண்டு லவ்’னு ஒரு மலையாளப் படம். அதுல, 'பாம் எஃபெக்ட்ஸ் நல்லா பண்ணியிருக்கீங்க சுந்தரம்',னு சொல்லி பிரபு சார் ரொம்பவே பாராட்டுனாரு. 'பேரரசு' பட சமயத்தில் சில காட்சிகளைச் சொல்லி விஜயகாந்த் சார் பாராட்டுனாரு. ரிஸ்க் இல்லாம பாதுகாப்பா பண்ணிக் கொடுத்தா ஒரு சில நடிகர்கள் கை கொடுத்து 'நல்லா பண்ணப்பா'னு  பாராட்டுவாங்க. ஆனால், இவங்க எல்லாரையும் தாண்டி அடிக்கடி என்னை பாராட்டினது ரஜினிகாந்த் சார்தான். எந்த பந்தாவும் இல்லாம கிட்ட வந்து, 'எப்படி கண்ணா இருக்க'ன்னு கேட்பாரு. அவர்கிட்ட நான் நிறைய தடவை பாராட்டு வாங்கியிருக்கேன். அவர் பாராட்டுனதை எப்பவுமே மறக்க மாட்டேன். 



“இத்தனை நடிகர்களுடன் வேலை செய்த உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?”

‘வாத்தியார்' எம்.ஜி.ஆர் ரசிகன் சார். நடிகர் ரஜினிகாந்த் கூடவும் அஜீத் கூடவும் விரும்பிப் புகைப்படம் எடுத்திருக்கேன். ஷூட்டிங் முடிந்ததும் எப்போடா வீட்டுக்குப் போலாம்னுதான் இருக்குமே தவிர, மத்தவங்க கூட போட்டோ எடுக்கலாம்னு தோணாது.

“நீங்கள் வாங்கியிருக்கும் விருதுகள் பற்றி...?”


அதெல்லாம் எங்களுக்குக் கிடையாது சார். எங்க தொழில்ல யாருக்கும் கொடுக்கவும் மாட்டாங்க. ஸ்டன்ட் நடிகர்களுக்கும், எங்களுக்கும் அவார்டு கிடையாது. எங்களுக்கு அந்தந்த நேரங்கள்ல நடிகர்கள் பாராட்டுறதுதான் சந்தோஷம். அதுதான் சார் எங்களுக்கு மிகப்பெரிய அவார்டு", எனக் கூறி விடைபெற்றார் சுந்தரம்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");