[ad_1]



“மாயோன் மேய காடுறை உலகமும்


சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமதில் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”. 

- இது, நமது தமிழகத்தின் நிலங்களையும் அது சார்ந்து இயங்கும் மக்களின் தன்மையைப் பற்றியும் தொல்காப்பியம் தரும் விளக்கம். ஆனால், அதிகாரமும் கார்ப்பரேட்களும் ஒன்றிணைந்து இயங்கும் சூழலில் நிலங்கள் மக்களுடையதாக இருப்பதில்லை. கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், எண்ணூர் ஆக்கிரமிப்புகள் ஆகியன அதற்கான சிறந்த உதாரணம். இதுகுறித்த விழிப்புஉணர்வுகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற நிலையில், கலையே அதற்கான சிறந்த ஊடகமாகிறது. அந்த வகையில், இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் ‘வாடகை சைக்கிள் ரைடு’ இசைக்குழு மக்களுக்கான செய்தியை அவர்களிடம் எடுத்துச் செல்லும் களமாகத் தொடர்ந்து இயங்கிவருகிறது.



“அது என்ன, ‘வாடகை சைக்கிள் ரைடு’ என்கிற வித்தியாசமான பெயர்” என்று அவர்களிடம் கேட்டபோது... “வாடகைக்குச் சைக்கிள் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுபவனுக்குத் தனது ஊரின் ஒவ்வொரு சந்துபொந்துகளும் அத்துப்படியாக இருக்கும். அதுபோலத்தான் இயக்குநர் ராம், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், முகநூல் மற்றும் பிற நண்பர்கள் என அத்தனை பேரும் முன்னின்று உதவியதில் மக்களின் அத்தனை பிரச்னைகளையும் கூறும் தளமாக இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறோம். கவிதை, கதை, இசை எனக் கலையின் அத்தனை பரிணாமங்களிலும் இது மக்களுக்காகப் பேசும். அதனால்தான் எங்கள் குழுவுக்கு இந்தப் பெயர்” என்கிறார், குழுவைச் சேர்ந்த கவிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை முன்னாள் மாணவருமான முத்துராசா. கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பிரச்னை, பணமதிப்பு நீக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றைப் பாடலாகப் பதிவுசெய்த இவர்களது ‘டிஜிட்டல் மூஞ்சி’ படைப்பு, அந்தச் சமயம் மக்கள் போராட்டக் களங்களில் ஒலிக்கச் செய்யப்பட்டது.



வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு ரைடு சுற்றும் இந்தக் குழுவினரின் தற்போதைய படைப்பு, ‘செதில் பய’.  மீனவர்களின்மீது திணிக்கப்படும் கடல் எல்லை அரசியல் குறித்தான வலிய பார்வையை இந்தப் பாடல் பேசுகிறது. சென்னைப் பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாயக்கூடத்தில் நடந்த இந்தப் பாடலின் வெளியீட்டு நிகழ்வில், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கவிஞர் உமாதேவி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, சென்னைப் பல்கலைக்கழகத் இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரவீந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் மீனவர்களும் கலந்துகொண்டார்கள்.



மக்களிசையான பறையாட்டத்துடன் நிகழ்வு தொடங்கியது. கூடவே, கன்னியாகுமரியில் தற்போது மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களைப் புகைப்படங்களாக விழாவில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பேசிய ரவீந்திரன், “கன்னியாகுமரியில் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கும் மீனவர்களின் ஓலம் இந்த ஆண்டின் இறுதியை முற்றிலும் சோகமானதாக்கியுள்ளது. ‘செதில் பய’ பாடல் வெளியீட்டுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் மீன் முள்மீது மைக் பொறுத்தப்பட்டிருக்கும் உருவம்,ஒகி புயலால் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடலையும் அது கேட்கும் நீதியையும் உணர்த்துவதுபோல இருக்கிறது” என்றார்.



ராமேஸ்வரம் பாலத்தின் கீழிருந்து பெருங்கடலைப் பார்த்தபடி விரிகிறது பாடல். 

“கட்டிவெச்ச வீட்டைக் காட்ட அப்பன் வரல

வந்திடிக்கும் அலைகள்கூட ஒண்ணும் செய்யல

கால்கடுக்கும் கலங்கரைக்கும் சேதி தெரியல

உள்ளங்கை கடல் தண்ணியும் ஒண்ணும் பேசல

இந்தியப் படத்தில் நாங்கள் இல்லையே

நாங்கள் இல்லாமல் இந்தியா இல்லையே...”



என ஏக்கமும் கண்ணீருமாகக் கேள்வி எழுப்புகிறது பாடல் வரிகள். எக்காலத்துக்கும் இருக்கும் மீனவர்கள் அரசியல் குறித்துப் பாடல் பேசினாலும் தற்போதைய கன்னியாகுமரி மீனவர்களுக்கும் வரிகள் பொருந்திப் போகின்றன. பாடல் உருவான விதம் குறித்துப் பேசிய கவிஞர் முத்துராசா, “சென்னைப் பல்கலைக்கழகத்தின், ‘பீப்பிள் ஃபார் ஜர்னலிசம்’ வழியாக ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் குடிமக்களைச் சந்தித்தோம். சென்னையின் பழவேற்காடு மற்றும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதி மீனவ மக்களிடம் களத்துக்குச் சென்று உரையாடினோம். அங்கு நிலவும் அரசியல் பற்றித் தெரிந்துகொண்டோம். அதன் விளைவுதான், இந்தச் ‘செதில் பய’ ” என்றார்.

“அப்படி என்ன அரசியல்” என்றோம். “தமிழக மீனவர்களுக்கு என வரையறுக்கப்படும் எல்லைகளில்தான் அரசியல் உள்ளது. இந்திய அரசின்  அந்நியச் செலாவணிக்குப் பெரிதும் கைகொடுக்கும் மீனவர்களுக்கு என்று இன்றுவரை மத்தியில் தனியே துறை ஒதுக்கீடு இல்லை. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் சென்றால் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு என்று குழுக்களோ அல்லது அமைப்புகளோ அரசால் நிறுவப்படவில்லை.

நாங்கள் கள ஆய்வுக்குச் சென்ற ஒருவாரத்துக்கு முன்புகூட மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தார்கள். ஒருவேளை, அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பிரிட்ஜோவுக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை தடுக்கப்பட்டிருக்கும். நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவது என்னவோ மீனவப் பழங்குடிகள்தான். ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் இப்படியான அரசியல் என்றால், பழவேற்காட்டில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்காக நமது அரசாங்கமே மீனவர்களின் நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டுள்ளது. கரைக்கு அந்தப் புறம் துப்பாக்கிகள் ஏந்தியவர்கள் என்றால், இந்தப் புறம் கரையில் இருப்பவர்களோ துரோகம் இழைப்பவர்களாக இருக்கிறார்கள்” என்றார் முத்துராசா.

 

 



 

தொல்காப்பியம் சொன்னதை, ‘ஐவகை நிலத்தில் நாங்கள் நெய்தல்’ எனத் தன் பாடல் வரிகளால் நினைவூட்டி நீதி கேட்கிறான் இந்தச் ‘செதில் பய’. இந்தக் குழுவினர் அடுத்தகட்டமாக அனைத்து மீனவப் பகுதிகளுக்கும் சென்று இந்தப் பாடலைத் திரையிட இருக்கிறார்கள். 


சைக்கிள் பயணம் தொடரட்டும்...!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");