[ad_1]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று டெல்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். ராகுல் பதவியேற்பு விழாவையொட்டி அங்கு பட்டாசுகள் வெடித்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ஒன்றுசேர்ந்து ஆரத்தி காட்டினர். இந்நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா தொடங்கியதும் காங்கிரஸ் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டதற்கான சான்றிதழ் ராகுலிடம் வழங்கப்பட்டது. மகன் ராகுலிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளை ஒப்படைத்த சோனியா காந்தி, வாழ்த்து கூறி ஆசீர்வாதம்செய்தார்.
பின்னர் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவராகக் கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறேன். ராகுல் காந்திக்கு ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். என் மாமியார் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, என் தாய் கொலை செய்யப்பட்டதுபோல உணர்ந்தேன். அவர் கொல்லப்பட்டதால், என் கணவர் ராஜீவ் காந்தியை அரசியலிலிருந்து விலக்கிவைக்க நினைத்தேன். ஆனால், அவர் தன் பொறுப்பை உணர்ந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவரும் கொல்லப்பட்டார். எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னிடமிருந்துப் பிரிக்கப்பட்டார்கள். அந்த இழப்பிலிருந்து தேறிவர வெகு நாள்களாகின.
கணவர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் என் குழந்தைகளுக்கு அரசியல் வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு கட்டத்தில் கட்சியை வழிநடத்த நாங்கள் தேவை என்பதை உணர்ந்தேன். 2014-ம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறோம். தேர்தலில் பல முறை தோற்றிருக்கிறோம். ஆனால், யாருக்கும் தலை வணங்கவில்லை. தற்போது ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய திசையில் பயணிக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் புதிய தலைமைமீது நம்பிக்கைகொள்ள வேண்டும்” என்றார் உருக்கமாக. அவர் பேசிக் கொண்டிருந்தபோது தொண்டர்கள் பட்டாசு வெடித்ததால், அவரின் பேச்சு தடைப்பட்டதால் கோபப்பட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
`என்னிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள்!’ - ராகுல் பதவியேற்பு விழாவில் சோனியா உருக்கம்
TAGS :
COMMENTS