[ad_1]
அருவியின் பிரச்னை நோய் மட்டுமல்ல; புறக்கணிப்பும்தான். ஒரு வேளை வீட்டில் உள்ளவர்களின் அன்பு கிடைத்திருந்தால் அருவியின் வாழ்கை நன்றாக இருந்திருக்கும். இதேபோல் தீராத மற்றும் விநோத நோயால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ பேர். பெண்கள் மட்டும் இன்றி ஏராளமான ஆண்களும்கூட தன் வீட்டில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு , வெளியேறி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மை.
வெவ்வேறு சூழ்நிலையில் வாழும் மூன்று பேர் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தன் வீட்டில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கக் கூடாது என நினைத்து வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். வாழ்கையில் பல கஷ்டங்கள் படுகிறார்கள். முடியாத பட்சத்தில் ஃபேஸ்புக்கில் அவர்கள் படும் துயரங்களைச் சொல்லி உதவி கேட்கிறார்கள். ஃபேஸ்புக் நண்பர்கள் அவர்கள் நிலை உணர்ந்து உதவி செய்வதோடு அவர்களைப் பராமரித்தும் வருகிறார்கள். அவர்கள் வாழ்கை மெல்ல மாறத் தொடங்குகிறது. இப்போது வாழ்கையின் அடுத்தக் கட்டத்துக்கான முயற்சியும் செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது கும்பகோணத்தில் நண்பரின் பராமரிப்பில் இருக்கும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அந்த மூன்று பேரை சந்தித்தேன்.
”பத்து மாத குழந்தை தட்டுத் தடுமாறி நடை பழகி நடக்கும்போது கீழே விழுந்தால் கைத் தட்டி ரசிப்போம். அதுவே 30 வயது இளைஞர் நடக்கும்போதே, அதுவும் ரோட்டில் அப்படியே கிழே விழுந்தால் எப்படி இருக்கும்? பார்ப்பவர்கள் பதற்றம் அடைவார்கள். அந்தச் சமயத்தில் விழுந்தவரைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கத் தோன்றும்? தசைச் சிதைவு நோய் பாதிக்கபட்டவனின் ஆரம்ப நிலை இதுதான்” என பேசுகிறார் அந்த நோயால் பாதிக்கப்பட்ட அப்பாஸ் என்ற இளைஞர்.
”எனக்கு ரெண்டு அண்ணன், ரெண்டு அக்கா. நாங்க எல்லாம் மதுரையில் வசித்துவந்தோம். எட்டாவது வரை படித்த நான் எல்லோரையும் போலவே நன்றாக நடப்பேன். ஓடி ஆடி விளையாடுவேன். என் அப்பா சின்ன வயசுலேயே இறந்துவிட குடும்பம் வறுமையால் வாடியது. என்ன செய்வதென தெரியவில்லை. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். இரண்டு வருடம் எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் என் ஒரு கையை தூக்க முடியவில்லை.
மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். பரிசோதித்த டாக்டர்கள் மயோபதி எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்டுள்ளதாகச் சொன்னார்கள். மேலும், இந்த நோய்க்கு சிகிச்சையே கிடையாது. உலகத்தில் எங்கு சென்றாலும் குணமாக்க முடியாது என கைவிரித்தனர். எனக்கு உலகமே இருண்டு சுருங்கியதுபோல் ஆனது. குணமாகாத நோய்க்கு எதுக்கு மருந்துகள் சாப்பிட வேண்டும் என நினைத்து சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. வருடங்கள் ஓடியது. இந்த நோயின் தாக்கமும் அதிகரித்தது. எனக்கு 25 வயது ஆன நிலையில், சாலையில் செல்லும்போது அப்படியே சரிந்து விழுந்து விடுவேன். அப்புறம் ரொம்பவே கஷ்டப்பட்டு எழ வேண்டியிருக்கும். நடக்கும்போது கிழே விழுந்துவிட்டால் எந்திரிக்ககூட முடியாமல் போனது. யாராவது தூக்கி விட்டால்தான் எழ முடியும்.
2010-ம் வருடம் இருக்கும். நான் மாடியில் தான் வசித்துவந்தேன். ஒரு முறை தட்டுத் தடுமாறி கீழே இறங்க முயன்றேன். அப்போது நிலைத் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துவிட கழுத்துப் பகுதியில் பலமான அடிபட்டது. இதனால் இடுப்புக்குக் கீழே செயல் இழந்து விட ரொம்பவே துடித்தேன். இயற்கை உபாதைகளைக் கழிக்ககூட சிரமப்பட்டேன். எப்போதும் யாராவது துணை இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் என்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போட ஆரம்பித்தேன். அவர்கள் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு ’எப்படியாவது இதிலிருந்து மீண்டு விட மாட்டோமா’ என நினைத்து திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள மயோபதிக்கான சிறப்பு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் என்னை வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார்கள். ஏன் நாம் எல்லோருக்கும் பாரமாக இருக்கணும்? என்னால் எல்லோருக்கும் சிரமம் என தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூட நினைத்தேன். ஆனால், அதைக்கூட என்னால் தனியாக செய்ய முடியாமல் போனதுதான் வேதனை. தற்கொலைக்குகூட யாராவது துணை இருந்தால்தான் செய்ய முடியும் என்ற நிலையில்தான் என் உடல் இருந்தது.
என் சின்ன அண்ணன் என்னை விடாமல் ரொம்பவே கவனித்துக்கொண்டார். என்னை தூக்குவது, உட்கார வைப்பது என எல்லா வேலைகளையும் செய்வார். அதனால் அவருக்கும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் குடும்பத்தை வேறு பார்க்க வேண்டி இருந்தது. வாழ்கையில் வெறுமை விடாமல் என்னைத் துரத்திய காலக்கட்டம் அது.
அந்தச் சமயத்தில் எனக்கு ஃபேஸ்புக் அறிமுகமானது. அதன்மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். என்னைப் போலவே மயோபதி நோயால் பாதிக்கபட்ட ஹசன், மற்றும் அல்சுஹைம் மூன்று பேரும் நண்பர்களானோம். நானும் அவர்களும் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லையாக இனிமேலும் இருக்கக் கூடாது என வீட்டை விட்டு வெளியேறி தனியாக ரூமில் தங்க ஆரம்பித்தோம்.
அப்போது சென்னையில் பெருமழை தாக்கி ஊரே வெள்ளத்தில் மிதந்தது. எங்களுக்கு என்ன செய்வதென புரியாமல் வெளியே தண்ணீரிலும் உள்ளே கண்ணீரிலும் தவித்தோம். எங்களோட நிலமையை எடுத்துக் கூறி ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஏராளமானவர்கள் எங்களுக்கு உதவி செய்தனர். இதன் மூலம் வரும் உதவிகளை வைத்துதான் சாப்பாடு மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகளைப் பார்த்துக்கொள்கிறோம்.
ஃபேஸ்புக் மூலம் நட்பாகி என்னோட நிலையை நன்கு உணர்ந்து என்னைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் ஒரு பெண். அந்தப் பெண் விவாகரத்து பெற்று கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தவர். எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டாகவே திருமணம் செய்துகொண்டோம் நண்பர்கள் சேர்ந்துதான் செய்துவைத்தார்கள். நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட ஏகப்பட்ட எதிர்ப்புகள். என்னைப் போல் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்வது அவசியமும்கூட. ஏன் என்றால் பாதுகாப்பாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள். அந்த அன்பு நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்; வாழ்க்கையை மாற்றும் என்கிறார்.
”இப்போது ஆன்லைன் மூலம் வேலை பார்த்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இருக்கிறோம். எதாவது நல்ல வாய்ப்பாக இருந்தா சொல்லுங்க சார்” என்றார்.
இதே நோயால் பாதிக்கப்பட்டவர் அல் சுஹைம்.
”எனக்கு ஆறாவது படிக்கும்போதே காலில் பாதிப்பு ஏற்பட்டுச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் அதிகமானது. வீட்டில் எனக்கு நல்ல உதவி செய்தார்கள். அதனால் கல்லூரி படிப்பு வரை படித்துவிட்டேன். ஃபேஸ்புக் மூலம் இவர்களின் நட்பு கிடைத்தது. இதற்கு மேலும் வீட்டுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி இவர்களுடன் இருக்கிறேன். இப்போது தபால் மூலம் எம்.பி.ஏ படித்து வருகிறேன். அது முடிந்ததும் நன்றாக சம்பாதித்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்'' என்கிறார்.
ஹசன் என்பவரும் இவர்களுடன் தங்கியிருக்கிறார். அவர் கூறும்போது, “சேலம் ஆத்தூர்தான் என் சொந்த ஊர். எனக்கு இப்ப 30 வயசு ஆகுது. நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க அக்காவும் மயோபதியால் பாதிக்கப்பட்டிருந்தாங்க . அவங்கள அந்த நேரத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காண்பித்தார்கள். எங்க வீட்டிலேயே மத்தவங்களுக்கும் மயோபதி வருவதற்கு வாய்ப்பிருக்கு. எல்லோரையும் அழைத்து வாருங்கள்; டெஸ்ட் செய்து பார்ப்போம் என்றனர். நாங்கள் சென்றோம். அப்போதே எதிர்காலத்தில் எனக்கும் மயோபதி வரும் என சொன்னார்கள்.
மருத்துவர்கள் சொன்னது போலவே நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் 5-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார்கள். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நான் படிக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். சிகிச்சையும் படிப்பும் ஒரே இடத்துல கிடைக்கிற மாதிரி ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டாங்க. இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க எந்த ஒரு உடல் செயல்பாட்டையும் செய்யாமல் இருக்கக் கூடாது. அப்படி இருந்து விட்டால் மீண்டும் நாம் அதைச் செய்ய முடியாது. இதே நோயால் பாதிகப்பட்ட என் அக்கா 25 வயதில் இறந்துட்டாங்க. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதாவது செய்ய வேண்டும். நாங்கள் ஒன்றாக இருப்பதுபோல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் சேர்த்து ஒரு ஹோம் அமைத்து தங்க வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கயிருக்கிறோம். ஒரே இடம் என நிலையாக நாங்கள் இருப்பதில்லை. யார் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கிறார்களோ அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களைப் பார்த்து பராமரித்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு தங்குவதற்கு ஒரு நிலையான இடம் வேண்டும். நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அது சீக்கிரமே நடக்கும்” என்கிறார்.
இவர்களது முயற்சிகள் ஜெயிப்பதோடு இவர்களுக்குத் தேவையான பெரும் உதவியும் பேரன்பும் கிடைக்கட்டும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
”ஒரு வகையில் நாங்களும் அருவிதான்!” - தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் கதை
TAGS :
COMMENTS