[ad_1]

2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஐந்து பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் நிர்பயா. இந்தச் சம்பவத்தால், பலத்த காயமுற்ற நிர்பயா, அதே மாதம் 29-ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்திய மனசாட்சியை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், நீதி கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கிறார் நிர்பயாவின் தாய் அஷா தேவி.



இது குறித்து அவர் பேசுகையில், `நிர்பயா இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவள் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். உரிய நேரத்தில் நீதி வழங்கப்படவில்லை என்றால், சட்டத்தின்மீது மக்களுக்கு அச்சம் வரும். இதுகுறித்து, மிகவும் கடுமையான சட்டத்தை எழுதிட வேண்டும். நிர்பயாவின் இறப்புக்குப் பிறகு, பல விஷயங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், நாட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. யாரும் அது குறித்துப் பேசுவதில்லை. நிர்பயாவின் இறப்புக்குப் பிறகு, நான் யாரிடமும் எதற்காகவும் கெஞ்சியதில்லை. என் கணவருக்கோ என் உறவினர்களுக்கோ வேலை வாங்கிக்கொடுங்கள் என்று கேட்கவில்லை. நீதியை மட்டும்தான் கோருகிறேன். உச்ச நீதிமன்றத்தில் மட்டும் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்திய அளவில், பெண்களுக்குப் போதுமான கவனம் கொடுக்கப்படுவதில்லை. யாரும் பெண்களின் பாதுகாப்புக் குறித்து கவலைப்படவில்லை. அடிமட்டத்தில், எந்த விஷயமும் இன்னும் மாறவில்லை. சமூகத்தில், அரசின், போலீஸின் மனநிலை கண்டிப்பாக மாற வேண்டும்' என்று கொதித்துள்ளார்.