[ad_1]



சுதந்திர நாட்டில் நாம் அடிமைகள் அல்ல என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் 'இறைஞ்சுகிறேன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்றும் குடியரசுத் துணைத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடையும்தருவாயில், வெங்கய்ய நாயுடு மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மாநிலங்களைவையில் சில எம்.பி.-க்கள் தீர்மானங்கள் மற்றும் தனிநகர் மசோதாக்களைத் தாக்கல் செய்து, 'இறைஞ்சுகிறேன்' என்று தெரிவித்தனர்.

அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, ";தீர்மானங்கள் மற்றும் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 'இறைஞ்சுகிறேன்' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தேவையில்லை; சுதந்திர நாட்டில் நாம் வாழ்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து, இப்போதுவரை பின்பற்றப்படும் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். நாம் அடிமை இந்தியாவில் வாழவில்லை. சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்.

நம்மை ஆண்ட வெள்ளையர்களிடம், பயன்படுத்தியது போல, இனிமேல் உறுப்பினர்கள் யாரும் 'இறைஞ்சுகிறேன்' எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் தேவையில்லை. 'தீர்மானத்தை தாக்கல் செய்ய எழுகிறேன்' என்று குறிப்பிட்டால் போதுமானது. எனினும் இது அரசு உத்தரவல்ல; என் சொந்த அபிப்பிராயம்"; என்றார். இதேபோல், மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை, வெங்கய்ய நாயுடு எழுந்து நின்று வாசித்தார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் எழுந்து நின்றே, இரங்கல் செய்தியை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.