[ad_1]

கடல் என்பது கண்களுக்குமுன் விரிந்துகிடக்கும் நீர்த்தேக்கம். கடற்கரை என்பது நமது கால்களுக்கும், கடலுக்குமான இணைப்புப் பாலம் என நினைத்து, ஒவ்வொருவரும் கடந்து சென்றுவிட முடியாது. கடலைப் பார்க்கும்போது நேராக நிற்காமல் கொஞ்சம் கடலைநோக்கி காதுகளைத் தீட்டிக் கேட்டால் அதற்குள் இருந்து எழும் அழுகை, மகிழ்ச்சி, கண்ணீர், அலறல், கூக்குரல் அனைத்தும் எதிரொலியாகக் கேட்கும். மீனவனுக்குக் கடல்தான் தாய்மடி. கடலுக்கும் மீனவனுக்குமான உறவை யாராலும் அவ்வளவு எளிதாகப் பிரித்து விடமுடியாது. 

கடந்த நவம்பர் மாதம் இறுதியில் 'ஒகி' புயல், தமிழக - கேரள கடலோரப் பகுதிகளைச் சிதைத்துவிட்டுச் சென்றது. நிலப்பரப்பில் அதிக சேதத்தை கொடுத்த புயல், கடலுக்குள் வாழ்வாதாரத்திற்காகச் சென்ற பல மீனவர்களை அவர்களின் தாய்மடியிலேயே காவு வாங்கியது. வேறு சிலரைத் தத்தளிக்க வைத்தது. இதுவரை தமிழக மீனவர்களின் அழுகுரலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நாம், கேரளாவின் மீனவ கிராமங்களை நோக்கிப் பயணம் செய்தோம். 


 



பொதுவாக சாதனையாளர்களை அவர்களின் வீடுகளில் சந்தித்துப் பேசும்போது, உரையாடல்களும், சிரிப்பும் அதிகமாக வரும். ஆனால், பரிதவிக்கின்ற வீடுகளில் மௌனமும், நிசப்தமும் அழுகையுமே வார்த்தைகளாக வெளிப்படும். மீனவர்களைப் பொறுத்தவரை, மொழி மட்டும் வித்தியாசமே தவிர, அவர்கள் செய்யும் தொழில் ஒன்றுதான். கொல்லங்கோட்டை அடுத்த பருத்தியூர் கிராமத்துக்குச் சென்றோம். அந்த கிராமத்தில் புயலில் சிக்கி இதுவரை 14 பேர் கரை திரும்பவில்லை. இறந்து போனதாகத்தான் நம்புகிறார்கள். 

 

கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களைப் போலவே கடலில் காணாமல் போன தந்தையைத் தேடிய பிள்ளைகளும், மகனை இழந்த அம்மாக்களும், கணவனை இழந்த மனைவிகளும் அழுதுகொண்டிருந்த அழுகை இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பருத்தியூரில் திருமணமாகி 20 மாதமான 21 வயதுப் பெண் ஜாஸ்பினை சந்தித்துப் பேசினோம். கையில் பத்து மாத பெண் குழந்தையோடு கண்களில் நீர் வடியப் பேசத் தொடங்கினார்.

 

"நவம்பர் 28-ம் தேதி நீண்டக்கரையிலிருந்து லூர்துமாதா வல்லம் மூலம் 28 வயதான என் கணவர் அலெக்ஸாண்டர் கடலுக்கு மீன் பிடிக்கப் போனார். அவருடன் மேலும் ஐந்து பேரும் சென்றனர். பொதுவாக 5 நாள்கள்வரை கடலில் தங்கி மீன் பிடிச்சுட்டு வருவாங்க. சின்ன வல்லத்துல போறவங்க 50 நாட்டிக்கல் மைல்வரை போவாங்க. பெரிய வல்லத்துல போறவங்களோ, 150 நாட்டிகல் மைல்வரை போய் மீன் பிடிப்பாங்க. என் கணவர்கூடப் போனவங்க யாருமே புயல் அடிச்சப் பிறகு கரைக்குத் திரும்பி வரல. புயல்வரப் போவதாக முன்கூட்டியே கேரள அரசு சொல்லல. புயல் வந்தபிறகு சொல்லி என்ன பிரயோஜனம். இதுக்கு முன்னாடி இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததில்லைன்னு சொல்றாங்க. என் கணவர் போன வல்லம் மூழ்கிட்டதாவும் சொல்றாங்க. கேரள அரசு இதுவரை எந்த உதவிகளையும் எனக்குச் செய்யலை. கலெக்டரும், மீன்வளத் துறை அமைச்சர் மெர்சி குட்டியும் வந்துட்டு போனாங்க. அவர்கள் வந்தும் ஒண்ணும் பண்ணல. என்.ஜி.ஓ-க்கள்ல இருந்து அரிசி கொடுத்தாங்க. இறந்தவங்களுக்கு மட்டும் உதவினா போதுமா, காணாமல் போனவங்களுக்கு யார் உதவி செய்வாங்க. முதல்வர் பினராயி விஜயன், இங்க வரவே இல்லை. என் கணவர் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

 



 

நெய்யாற்றின் கரை, உச்சக்கடை, திருவனந்தபுரத்துல நடந்த போராட்டங்களுக்கும் நான் போனேன். இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கல. எனக்கு எந்தப் பணமும் வேண்டாம். என் கணவனை மீட்டாப் போதும். அவரு கடலுக்குப்போய் கொண்டு வருவதை வெச்சுதான் நான் குடும்பத்தை நடத்தினேன். கடன்வேற  இருக்கு. பத்து மாச பெண் குழந்தையை வளர்க்கணும். அதற்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியல. காணாமல் போனவங்களை ஏழு வருஷம் கழிச்சுதான் இறந்துட்டதா அறிவிப்பாங்களாம். என் கணவர் உயிரோடு இருப்பாரான்னு தெரியலை. என் வாழ்க்கையே போச்சே" என்றுகூறி கதறியழுதார் ஜாஸ்பின். தாய் அழுவதைப் பார்த்து, அவரின் குழந்தை வாயில் கையை வைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

 

கணவனையும், மகனையும் இழந்த மேபிளைச் சந்தித்துப் பேசினோம். "என் கணவர் சிலோடுமாவும், மகன் மனோஜூம் வல்லத்துலதான் கடலுக்குப் போனாங்க. மகனுக்கு 18 வயசுதான் ஆகுது. பத்தாம் வகுப்புல ஒரு பாடத்துல பெயிலாயிட்டான். அதுக்குப் பிறகு படிக்கல. எங்க குடும்பத்திற்கு கடன் இருந்ததால, அவனும் கடலுக்குப் போய்ட்டான். இவங்ககூட போன யாருமே புயல் அடித்த பிறகு கரை திரும்பல. பொதுவா மூணு நாள்ல திரும்பி வந்துருவாங்க. 20 நாள்கள் ஆன பிறகும் இன்னும் வரல. என்னோட மகள் பிரின்சி 10-வது படிக்கிறாள். கடல் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைச்சுதான் எங்கள் குடும்பம் நடந்துச்சு. வேறு வருமானம் ஏதுமில்லை. முன்னாடி அரசாங்கத்துல வீடுகட்ட இடமும், இரண்டு லட்சம் ரூபாய் பணமும் கொடுத்தாங்க. ஆனா, வீடுகட்ட ஆறு லட்சமாகி விட்டது. அதனால நாலு லட்சம் கடன் வாங்கிக் கட்டினோம். இப்போ கடனை எப்படி அடைக்கப்போறேன்னு தெரியல. மகளைப் படிக்கவைக்க வழியில்லை. அரசு எங்களுக்கு ஏதாவது உதவி பண்ணனும். கலெக்டர், எம்.எல்.ஏ., பிரதமர்னு எல்லோரையும் பார்த்துட்டோம் ஒண்ணும் நடந்தபாடில்லை. அரசு உதவித் தொகையாக மீனவர் சங்கங்கள் மூலம் 2000 ரூபாய் கொடுத்தாங்க. அதுவும் எனக்குக் கிடைக்கல. எனக்கு தைராய்டு நோய் இருக்கு. எப்படிக் கடனை அடைக்கப் போறேன்? மகளை எப்படிப் படிக்கவைக்கப் போறேன்னு தெரியலை. ஆம்பளங்க இல்லாத வீடா இருண்டு போச்சே என் வாழக்கை" என்று கதறினார்.

 



அடுத்ததா ஏசுதாசன் குடும்பத்தைச் சந்தித்தோம். "15 வயசுல இருந்தே கடல் தொழிலுக்குப் போறாரு என் கணவர். கடைசியா 28-ம் தேதி நீண்டக்கரையில இருந்து கடலுக்குப் போனாரு. இன்னும் திரும்பிவரல. அவர்கூடப் போன யாருமே திரும்பிவரல. எங்களுக்குச் சோறுபோட்ட கடலே, என் கணவரை எடுத்துக் கொண்டது. 11 வயசுல ஒரு பொம்பளப் பிள்ளையும், 7 வயசு, 2 வயசுல ஆம்பள பிள்ளைகளும் இருக்காங்க. அவங்க அம்மா குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் அவர்தான் உழைச்சாரு. புயல் வருவதை அரசாங்கம் முன்கூட்டி சொல்லியிருந்தா என் கணவர் உயிரோடு இருந்திருப்பார். எந்தத் தகவலும் கொடுக்காத அரசாங்கம் புயல் வந்துபோன பிறகு வந்தது. கடல்ல காணாமல் போனவங்களை ஒருவாரம் கழிச்சு தேடப்போனா எப்படிக் கிடைப்பாங்க? மீனவ மக்கள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் செய்தோம். தேசிய நெடுஞ்சாலையில போராட்டம் செய்தோம். ஆனாலும், இன்னும் எந்த உதவியும் கிடைக்கல. அரசின் அறிவிப்பு டி.வி-யிலதான் போகுது. எங்களுக்கு வந்து சேரவில்லை. பிள்ளைங்கள படிக்க வைக்கவாவது அரசு உதவணும். நிவாரணம் கொடுக்கல. தமிழக அரசு கொடுத்ததுபோல 5000 ருபாய்கூட கேரள அரசு தரல. எல்லோரும் விழிஞ்ஞம் வர வந்துட்டுப் போறாங்க. இங்க வரமாட்டேங்கிறாங்க. பணத்தையும், சொத்தையும் கேட்கல. என் கணவர் உயிரோடு இருக்கிறாரா என்பதை சரியாகச் சொல்ல வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். மீனவர்களைத் தேடிப்போன கப்பல், ஒழுங்காகத் தேடல. மீனவர்களைக் காப்பற்ற அரசு எந்த வேகமும் காட்டல. புயல் வந்ததுமே போய் தேடியிருந்தா, எந்த உயிரும் போயிருக்காது. எங்களுக்கு அறிவித்த 20 லட்சம் ரூபாயை கடற்படைக்குக் கொடுத்து, என் கணவனைத் தேடச் சொல்லுங்க" என்று கண்ணீர் வடிக்கிறார்.


கிறுஸ்துமஸ் தினமென்றாலே கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்தப் பகுதிகள் தற்போது சோகத்தில் கிடக்கிறது. அந்த மண்ணின் ஒட்டுமொத்த கோரிக்கையும் ஒன்றுதான். "எங்க மீனவர்களைக் காப்பாற்றிக் கொண்டுவாங்க" என்கிறார்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");