[ad_1]

வழக்கத்தை விட ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் என்று மூன்று பேருமே வெற்றி தங்களுக்குத்தான் என்று சொல்லி வருகிறார்கள். இரு அணிகளும் இணைந்த பிறகு நடக்கும் தேர்தல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் தங்களது செல்வாக்கை நிரூபிக்க மதுசூதனன் டீம் முழுவீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது. திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் தேர்தல்; வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தடவை திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் வெற்றியைப் பறிக்க வேண்டிய நிலையில் திமுக தொண்டர்களும் சுழன்று வந்தார்கள். ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் டி.டி.வி.தினகரன், இந்தத் தேர்தலில் பெறும் வாக்குகள்தாம் தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது என்று முழுபலத்தையும் பயன்படுத்தி தேர்தல் வேலைகளைச் செய்துள்ளார். இவர்களில் யார் வெற்றி பெறப்போகிறார் என்பது நாளை 12 மணிக்குள் தெரிந்துவிடும்.




ஆர்.கே.நகர் தொகுதி 1977 ஆம் ஆண்டு உருவானது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஐசரி வேலன் வெற்றிபெற்றார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் வி.ராஜசேகரன் (காங்கிரஸ்), 1984 ஆம் ஆண்டு தேர்தலில் வேணுகோபால் (காங்கிரஸ்) வெற்றி பெற்றனர். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.பி.சற்குணபாண்டியன் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 ஆம் ஆண்டு மதுசூதனன் (அ.தி.மு.க) வெற்றி பெற்றார். பின்னர், 1996 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.பி.சற்குணப்பாண்டியன் (தி.மு.க) வெற்றி பெற்றார். 2001, 2006 ஆம் ஆண்டு சேகர்பாபு (அ.தி.மு.க) வெற்றி பெற்றார். அதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிவேல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவுடன், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வெற்றிவேல் (இவர் தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளார்).

அனைத்து அ.தி.மு.க அமைச்சர்களும் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். தி.மு.க அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் போட்டியிட்டார். 1,60,432 ஓட்டுகள் ஜெயலலிதா வாங்கினார். அது 88.43 சதவிகிதம். சி.மகேந்திரன் 9,710 ஓட்டுகள் பெற்றார். அது 5.35 சதவிகிதம். அதன்பின்னர், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகரில் மீண்டும் ஜெயலலிதா போட்டியிட்டார். இந்தத் தடவை ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். இவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் உறவினர். மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன்னாள்  துணை வேந்தர் வசந்திதேவி போட்டியிட்டார். இடைத்தேர்தலில் 1,50,722 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, பொதுத்தேர்தலில் 39,545 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வென்றார். ஜெயலலிதா வாங்கிய ஓட்டுகள்  55.87 சதவிகிதம்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலையும் அ.தி.மு.க கட்சியும் முடக்கப்பட்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையில் அமைச்சர்கள் டீம் வேலை செய்தது. மதுசூதனனை நிறுத்தியிருந்தது ஓ.பன்னீர்செல்வம் அணி. தி.மு.க சார்பில் மருதுகணேஷ் நின்றார். ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகாரில் அந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்தனர். அதிமுகவும் இரட்டை இலையும் அவர்கள் வசம் போனது. டி.டி.வி.தினகரன் தனி அணி ஆனார். 



அ.தி.மு.க சார்பில் இந்த டிசம்பர் 21-ம் தேதி தேர்தலில் போட்டியிட்ட மதுசூதனன், தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். ஆனாலும் அவர் மீது தொகுதி மக்களுக்குப் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்றாலும் ஆளும்கட்சி என்ற அதிகார பலம் அவரை உற்சாகத்தோடு வலம் வர வைத்தது. அமைச்சர்கள் காட்டிய ஆர்வம், மதுசூதனனை ஒவ்வொரு வீடாகக் கொண்டு சென்றிருக்கிறது. ஆனால், டி.டி.வி.தினகரனுக்குக் கடந்த முறை அமச்சர்கள் செய்த செலவுகளை இப்போதும் ஆர்.கே.நகர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். டி.டி.வி.தினகரனின் குக்கர் சின்னம் தொகுதிக்குள் பிரபலமாகி விட்டது. அவருக்குக் கூடிய கூட்டமும் உற்சாகமும் பிறகட்சிகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. தீவிர பிரசாரம் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று பேசும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது.

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த மதுசூதனன், பல ஆண்டுகளாகக் கட்சியின் அவைத்தலைவாரக இருக்கிறார். இரட்டை இலைச் சின்னத்தில் அவர் போட்டியிடுவது உற்சாகத்தை கொடுத்துள்ளது. பணப்பட்டுவாடா ஒரு புறம் இருக்க, ஸ்கூட்டி, அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏழை எளிய மக்களைக் குறிவைத்து அரசின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பிரசாரங்களில் டி.டி.வி.தினகரன் பெயரை நேரடியாக எடப்பாடி சொல்லாவிட்டாலும் அவரை திட்டுவதில் குறியாகவே இருந்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் தி.மு.க-வை நேரடியாகவே சாடினார் எடப்பாடி. எட்டு மாதத்திற்கு முன்பு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தி.மு.க சார்பில் மருதுகணேஷ் நின்றார். தொகுதி முழுக்க வலம் வரும் மருதுகணேஷ், நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.  அதிமுக மீது உள்ள அதிருப்தி, கோஷ்டி பூசல்கள், தினகரன் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆதரவும் கூடுதல் பலம். ஆனால், இந்தத் தொகுதி, கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே அ.தி.மு.க வசம் இருப்பது மதுசூதனனுக்குக் கூடுதல் பலம்.



ஆனால், தி.மு.க இந்தத் தேர்தலில் உற்சாகத்துடன் வேலை செய்தது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, தா.மோ.அன்பரசன் என்று மாஜிக்கள் அனைவரும் களத்திலிருந்தனர். மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என்று பெரும் படையே ஆர்.கே.நகரை வலம் வந்தது. ஆளும்கட்சிக்கு இணையாக திமுக நிர்வாகிகளும் தேர்தல் வேலையை முடுக்கிவிட்டிருந்தனர். ஆளும்கட்சியின் அதிருப்தியை மையப்படுத்தியே அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.  இதற்கிடையில் பாஜக, நாம் தமிழர்கட்சி என்று மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 77.50 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 ஓட்டுகளில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 59 வேட்பாளர்கள் இருந்தாலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.


வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி , ''ஆர்.கே.நகரில் தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்'' என்றார். மொத்தம் 256 பெட்டிகள் இருந்தாலும் யார் வெற்றி பெறுவார் என்ற சாதக பாதக நிலவரம் மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");