[ad_1]



சென்னையின் முக்கிய திரையரங்குகளிலும், மல்டிப்ளக்ஸ்களிலும் வாரக்கடைசியில் திரைப்படம் பார்ப்பதற்காக மக்கள் கூடுவது இயல்பு. அவர்களை பெரிதும் அச்சுறுத்திக்கொண்டிருந்த பார்க்கிங் கட்டணக் கொள்ளை சில நாள்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. சமீபத்தில், தமிழக அரசாணைக் குறிப்பு ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்களில் உள்ள பார்க்கிங் கட்டணங்களை மறுநிர்ணயம் செய்து வெளியிட்டது. அதன்படி மாநகராட்சிகளுக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்க்கும் மக்கள் தங்களுக்கு ஒரு சுமை குறைந்ததாகவே கருதினர். காரணம், சிலநேரங்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தை, பார்க்கிங் கட்டணம் ஓவர்டேக் செய்து மத்தியதர சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. 


இந்நிலையில், சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள பிரபல திரையரங்கத்திற்கு சென்றபோது, பார்க்கிங் பகுதியில் கார்களுக்கு 60 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 30 ரூபாய் என்று பழைய பதாகை தொடர்ந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

இரு சக்கர வாகனங்கள் நுழைவுவாயிலில், டோக்கன் தருபவரோடு செக்யூரிட்டி ஒருவரும் நிற்க வைக்கப்பட்டிருந்தார். அரசாணை வருவதற்கு முன்பு கொடுக்கப்பட்டு வந்த அதே டோக்கன் 30 ரூபாய்க்கு இப்போதும் கொடுக்கப்பட்டு வந்தது. டோக்கனில் வாகன எண் எழுதப்படும் இடத்தில், ‘ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய்’ என சீல் வைக்கப்பட்டிருந்தது. ‘இதுதான் சார் ரூல்ஸ். எங்களுக்கு இவ்ளோ தான் சொன்னாங்க.’ என்று தனக்கு விதிக்கப்பட்டிருந்த பணியைச் சிறப்பாக செய்துகொண்டிருந்தார் டோக்கன் தருபவர். திரைப்படம் பார்க்க வந்த ஒவ்வொருவரும் டோக்கன் தருபவரிடம் வாக்குவாதம் செய்துகொண்டு, வேறு வழியில்லாமல் 30 ரூபாயைத் தந்துவிட்டு சென்றனர். 'நான் பார்க்க இருக்கும் திரைப்படத்தின் நீளமே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவானது. அப்படியிருக்கும் போது எப்படி முன்கூட்டியே 30 ரூபாய் வாங்கலாம்?’ என்று கேட்டதற்கு, ’இன்டர்வல் 20 நிமிடம் விடுவோம். மொத்தம் மூன்று மணிநேரத்திற்கான கணக்கு வந்துவிடும். பாதி படத்திலேயே எழுந்து வந்துவிட்டால், டோக்கன் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.’ என்று பதில் வந்தது.



அந்த திரையரங்கின் மேலாண்மைப் பிரிவின் பொறுப்பாளர் சுரேஷ் அவர்களிடம் அரசின் விதியை மீறி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பேசியபோது, ‘தமிழக அரசின் ஆணை எங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, அது ஒரு நாள் கட்டணமா, ஒரு மணி நேரத்திற்கான கட்டணமா, ஒரு காட்சிக்கான கட்டணமா என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாங்கள் அரசாணையை மீறாமல் தான் வசூலித்து வருகிறோம்’ என அசத்தலாக பதில் தந்தார்.

சென்னையில் உள்ள திரையரங்குகளில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வருவதற்கு முன்பு, ஒரு டிக்கெட்டின் அதிகபட்ச விலை 120 ரூபாய். குறைந்த பட்ச விலை 10 ரூபாய். ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம், 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்ட டிக்கெட்களுக்கு 28% வரியும், 100 ரூபாய்க்கு குறைவாக விற்கப்பட்ட டிக்கெட்களுக்கு 18% வரியும் விதிக்கப்பட்டது. அதன்படி, ஒரு டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக 153 ரூபாய் ஆகவும், குறைந்தபட்சமாக 12 ரூபாய் ஆகவும் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இந்த விலைப்பட்டியலும் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. திரைப்படத்துறைக்கு தமிழக அரசு கேளிக்கை வரியை 10 விழுக்காடாக அறிவித்தது. அதன் விளைவாக திரையரங்குகளில் டிக்கெட் விலை 25% வரை விலையேற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, 120 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த டிக்கெட்டுகள், இன்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திரையரங்குகளுக்கு மக்கள் அதிகம் வருவதற்காக, கடந்த அக்டோபர் மாதம், தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி, பார்க்கிங் விலை, ஆன்லைன் புக்கிங் விலை முதலானவை குறைக்கபட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதற்கேற்ப, தமிழக அரசாணை பார்க்கிங் கட்டண நிர்ணயத்தில் தலையிட்டும், மக்களுக்கு பயன்படாமல் இருக்கிறது.



’இப்போல்லாம் படம் பார்க்கவே முடியுறதில்ல. டிக்கெட் விலை ரொம்ப அதிகமாயிருக்கு. நல்ல படமா இருந்தா டிக்கெட் வாங்கச் செலவு பண்றதுல திருப்தி இருக்கும். படம் நல்லாயில்லனா, அதுவும் கிடையாது. பந்தயம் வெக்குற மாதிரி தான் இதுவும் இருக்கு‘ என்று பேசத் தொடங்கினார் சுமார் ரக திரைப்படம் பார்க்க வந்திருந்த ரசிகர் ஒருவர். ‘டிக்கெட் விலை 150 ரூபாய். அதுக்கு புக்கிங் சார்ஜ்னு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தனித்தனியா 30 ரூபாய் கட்டணும். அது இல்லாம, பார்க்கிங்குக்கு தனியா 30 ரூபாய். இப்படி 210 ரூபாய் செலவு செஞ்சு படம் பார்க்க வந்தா, நாங்க எடுத்துட்டு வர்ற உணவுப் பொருட்கள் எதையுமே உள்ள விட மாட்டாங்க. ஆர்டர் பண்ணினா சீட்டுக்கே வந்து தர்ற வசதி எல்லாம் இருக்கும்னு சொல்லி, தண்ணி பாட்டில் 30 ரூபாய்க்கு மேல விக்குறாங்க. வெளியே 20 ரூபாய்க்கு விக்குற பப்ஸ், தியேட்டருக்கு உள்ள 70 ரூபாயா இருக்கும். பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் கதையெல்லாம் வெளிய சொல்ல முடியாது. இவ்ளோ செலவு பண்ணி படம் பார்க்குறதுக்கு, பேசாம நெட்லயே டவுன்லோட் பண்ணிப் பார்த்துக்கலாம். கொஞ்சம் வெயிட் பண்ணா, சூப்பர் ப்ரின்ட் கூட கெடைக்கும்’ என்றார்.

இதைப் பற்றி தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் பேசினோம். ‘தமிழக அரசு பிறப்பித்த ஆணையில் எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆணை வருவதற்கு முன்பும், ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் என்ற அடிப்படையில் தான் மொத்தமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அரசிடம் இதைப்பற்றி பேச இருக்கிறோம்’ என்று முடித்துக் கொண்டார்.


ஏற்கெனவே, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, கேளிக்கை வரி, டிக்கெட் விலை உயர்வு என சாமானியனுக்கான பொழுதுபோக்கு பெரிதும் குறைக்கப்பட்டு வந்த நிலையில், பார்க்கிங் கட்டணத்தைக் குறைத்து வந்த அரசாணை சற்று ஆறுதல் அளித்தது. அதிலும் நூதனமாக முன்பு இருந்த கட்டணத்தையே பெறுவது சாமானியன் தனக்கு இழைக்கப்படும் மோசடியாகவே கருதுகிறான். இணையத்தில் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான காரணிகளை திரையுலகமே அமைதியாக உருவாக்கி வருகிறது. தமிழக அரசு அரசாணையில் தெளிவான வரையறையுடன் வெளியிடுவதே ஆறுதல் அளிக்கும். 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");