[ad_1]





Vellore:  “நான் பொறந்தது ஆந்திராவுலதானுங்க. தெலுங்கு ரொம்ப நல்லாவே பேசுவேன். அப்பா இல்லாததால அம்மாக்கிட்டதான் வளந்தேன். நானு, அக்கா, தங்கச்சி, அண்ணான்னு நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே எங்களுக்குத் தெரிஞ்ச வேல சோளியப் பாத்துக்கின்னு கெடந்தோம். எங்க குடுசைக்கு பக்கத்தால வேல பாத்துக்கின்னு இருந்த ஒருத்தரு என் அம்மாக்கிட்ட வந்து உங்க பொண்ணுக்கு ரெண்டு வேள நல்லா சோறு போடுறேன். என்கூட அனுப்பி வையுங்கன்னு சொன்னதும் அம்மா என்னை அவருக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்திருச்சு”  என்று வள்ளியம்மா என்னிடம் சொன்னதும் அதிர்ந்து போனேன்.




ஆனால், இரண்டு வேளை உணவு என்பதே அவர் குடும்பத்துக்குப் பெரும் கனவாய் இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவென்று அறியாத அந்த வயதில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, தனக்கு எந்த வயதில் திருமணம் ஆனது என்பதை இப்போதும் வள்ளியம்மாவால் தெளிவாக சொல்லமுடியவில்லை. “என்னம்மா உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சுன்னுக்கூட தெரியலயா” என்று நான் கேட்டதும், “ம்ம்ம்ம் தெரியலீங்களே. நான் வயசுக்கு வந்ததும் கல்யாணம் ஆயிடுச்சு” என்கிறார் அப்பாவித்தனமாக. அந்த அப்பாவித்தனம்தான் வள்ளியம்மாவை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்திருக்கிறது. அதுதான் அவரை கொத்தடிமை வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. அதுதான் அவரை பாலியல் வன்புணர்வு சம்பவத்துக்குள் தள்ளியிருக்கிறது. அதுதான் அந்த அப்பாவித்தனம்தான் வள்ளியம்மாவை தன் கணவரிடமிருந்து பிரித்திருக்கிறது. 

“என்ன கல்யாணம் கட்டிக்கிட்டு என் வீட்டுக்காரரு வேலூருக்குப் பக்கத்துல இருக்குற ஏதோ ஒரு ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. மொழி தெரியாத ஊரு திக்குத் தெரியாம சுத்திட்டு இருந்தேன். ஆரம்பத்துல எப்படி பொழைக்கப் போறோமோன்னு நெனைச்சு ரொம்ப பயந்தேன். ஆனாலும், வீட்டுக்காரரு மேல இருந்த நம்பிக்கை கொஞ்சம் தைரியம் கொடுத்துச்சு. அவரு யார்கிட்டேயோ கடன் வாங்கியிருந்தாரு போல. அத அடைக்கிறதுக்காக ஒரு இடத்துல வேலைக்குப் போனாரு. புருஷனோட கஷ்டத்துல பங்கெடுத்துக்கிறவதானே பொண்டாட்டி. அதான், அவருகூட நானும் வேலைக்குப் போனேன். ஆனா, அங்க இருந்தவங்க எங்களை வேற ஒரு எடத்துக்கு அனுப்பி வெச்சாங்க. குவாரியில கல்லு ஒடைக்குற வேலை. தெனமும் ராவும் பகலும் கல்லு ஒடைக்கணும். வாரம் ஐநூறு ரூவா சம்பளம் கொடுப்பாங்க. குவாரிக்குப் பக்கத்துலயே குடிசை போட்டுத் தங்கியிருந்தோம். அப்போதான் வரிசைக்கா மூணு புள்ளைங்க பொறந்துச்சுங்க. நாளு தெரியாது, கெழமை தெரியாது, மணி எத்தனைன்னுகூட தெரியாது. எப்பவுமே கல்லு ஒடச்சுப் போட்டுக்கிட்டே இருப்போம். சொந்தக்காரங்க யாரும் செத்தாக்கூட அனுப்ப மாட்டாங்க. இப்டியே வருசக்கணக்குல போய்க்கிட்டு இருந்தப்போதான் ஒரு நாள் மொதலாளி என்கிட்ட வந்து” வந்து என்று இழுப்பதற்குள்ளாக பேச்சைத் தொடர முடியாமல் அழ ஆரம்பித்தவர் சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் பேசுகிறார். 

''நல்ல சாப்பாடு கெடையாது, நினைச்ச நேரம் தூங்க முடியாது, வாங்குற சம்பளத்துல பாதிய கடனுக்கான வட்டின்னு சொல்லி அவங்களே எடுத்துப்பாங்க. இதெல்லாத்துக்கும் மேல சாயந்தரம் ஆச்சுன்னாலே மொதலாளி பொம்பளைங்ககிட்ட வந்து கொஞ்சிக் கொஞ்சி பேசுவாரு. என்கிட்டயே அடிக்கடி வந்து 'உம் புருசன் குடிகாரன். நீ என்கூட வா நான் ஒண்ண நல்லாப் பாத்துக்கறேன்னு' சொல்லுவாரு. மேல கை வப்பாரு. எல்லாத்தையும் பொறுத்துக்குறதுக்கு நாங்க என்ன பொம்மையா சொல்லுங்க. அதான் நாலு மாசத்துக்கு முன்னாடி என் பிள்ளைங்களைக்கூட்டிட்டு தப்பிச்சு வந்துட்டேன். அந்த நேரத்துல எனக்கு அரசாங்கமும் உதவி பண்ணுச்சு. 

இப்போ நான் ஆந்திராவுல இருக்குற என் அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். இங்க நான், அம்மா, தங்கச்சி மூணு பேரும் சந்தோஷமா வாழுறோம். அம்மா என் பிள்ளைங்களை பாத்துக்குது. நானும் தங்கச்சியும் கூலி வேலைக்குப் போறோம். ஒரு நாளைக்கு 200 ரூவா கொடுக்குறாங்க. காலைல 7 மணிக்குப் போயிட்டு சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுறோம். ரெண்டு வேள நிம்மதியா சாப்புடுறோம். நிம்மதியாத்தான் இருக்கோம். ஆனாலும், எம் புருசன்தான் எங்க போனாருன்னே தெரியல. குவாரியில வேல பாத்துக்கிட்டு இருக்கும்போது என்கிட்ட சண்ட போட்டுட்டுப் போனாரு. இப்போ குவாரியிலயும் இல்லயாம். நானும் மூணு மாசமா தேடிப்பாத்துட்டேன். எங்கயுமே கெடைக்கல. பிள்ளைங்க மூணும் தெனந்தெனம் அவரைத் தேடிக்கிட்டு இருக்குதுங்க. எந்த சாமிதான் அவர எங்ககிட்ட அழைச்சிட்டு வருமோ தெரியல” வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக்கொண்டே மனதிலிருக்கும் பாரத்தை அந்த சாமியின்மீது போட்டுவிட்டு அமைதியாகிறார் வள்ளியம்மா. 


ஆனால், நான் மட்டும் வள்ளியம்மா சொன்ன அந்தச் சாமி எந்தத்திசையிலிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");