[ad_1]

குஜராத் தேர்தலில், தீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், `ராகுல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறாரா இல்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



கடந்த 9-ம் தேதி, குஜராத் சட்டமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் நடந்துமுடிந்தது. வரும் 14-ம் தேதி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. காங்கிரஸ் தரப்பில் ராகுலும், பா.ஜ.க தரப்பில் மோடியும் நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் மற்றவர்கள்மீது விமர்சனம்செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `குஜராத் தேர்தல் இரண்டு விஷயங்களைச் செய்திருக்கிறது. ஒன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவைத்துள்ளது. இரண்டாவது, ராகுல் காந்தியை கோயிலுக்குச் செல்லவைத்திருக்கிறது. ராகுல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறாரா இல்லையா என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும். பா.ஜ.க., குஜராத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றிபெறுவது உறுதி' என்று கருத்து தெரிவித்துள்ளார்.