[ad_1]



காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை பெண் காவலர் ஒருவர் திருப்பி அறைந்த சம்பவம் இணையத்தில் தீ போல பரவியது. இச்சம்பவம் குறித்து பெண் போலீஸ் இன்று விளக்கமளித்துள்ளார்.




இமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்து ஆலோசிக்க இமாசல் தலைநகர் ஷிம்லாவில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

கூட்டம் நடைபெற்ற இடத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை உள்ளேவிடாமல் போலீஸ் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸைக் கன்னத்தில் அறைந்தார். சற்றும் யோசிக்காத அந்தப் பெண் போலீஸ் எம்.எல்.ஏ-வை திருப்பி கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் நேற்று வைரலானது. பெண் போலீஸின் துணிச்சலை பலர் பாராட்டினர். ஆனால் எம்.எல்.ஏவை அடித்தது தவறு என்று சிலர் விமர்சித்தனர். இந்தச் சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட ராகுல் காந்தி ‘போலீஸை அடித்தது தவறு’ என்று எம்.எல்.ஏ ஆஷா குமாரிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.


#WATCH Shimla: Congress MLA Asha Kumari assaults woman constable, gets slapped back. She was being allegedly denied entry by Police in Rahul Gandhi's review meeting (amateur video) pic.twitter.com/puvMRnHKss
— ANI (@ANI) December 29, 2017



இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த பெண் போலீஸ், ”காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். அந்தச் சமயத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்த எம்.எல்.ஏ ஆஷா குமாரி உள்ளேவிடுமாறு சத்தம் போட்டார். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. சற்று பொறுத்திருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் நான் யார் என்று தெரியுமா? என்று கூறிக்கொண்டே என்னைத் தாக்கினார். மூன்று தடவை என்னைக் கன்னத்தில் அறைந்தார். என்னைத் தற்காத்துக் கொள்ளவே நான் திருப்பி அறைந்தேன். அதற்கு பிறகுதான் அவர்கள் எம்.எல்.ஏ என்பது எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.