[ad_1]





Chennai: 

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளால் கலவரப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆளும்கட்சி. அ.தி.மு.க-வுக்கு விரோதமாகத் தேர்தல் வேலை பார்த்தவர்களைக் கட்சியைவிட்டுக் கட்டம் கட்டும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. 'கட்சி விதிகளின்படி எங்களை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை' என்கிறார் தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி. 


சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளின் அணி தாவலைத் தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், என்.ஜி.பார்த்திபன், எம்.ரெங்கசாமி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் கட்சிப் பதவியையும் வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, அ.தி.மு.க. செய்தி தொடர்புக் குழு உறுப்பினர்கள் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேரையும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு குறித்து எந்தவித அதிர்ச்சியையும் தினகரன் தரப்பினர் காட்டவில்லை. 

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம். "எனக்கு அனைத்துப் பதவிகளையும் கொடுத்தது அம்மாதான். கழகச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், மூன்று முறை வாரியத் தலைவர், மகளிர் அணி இணைச் செயலாளர் என ஏராளமான பதவிகளை வாரிக் கொடுத்தார். அதைவிடப் பெருமையான விஷயம். அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியானபோது, அதில் இருந்த ஒரே பெண் செய்தித் தொடர்பாளர் நான் மட்டும்தான். அத்தனையும் அம்மா எனக்குக் கொடுத்த அங்கீகாரங்கள். கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி மத்திய அரசின் தயவுடன் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்தனர். இணைப்பு விழா முடிந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, 'கட்சிக்கு யார் பொதுச் செயலாளர்?' எனக் கேட்டபோது, 'அம்மாதான் நிரந்தரப் பொதுச் செயலாளர்' எனப் பதில் கொடுத்தார். அடுத்து, 'உங்களுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?' எனக் கேட்டபோது, 'அம்மாவால் நியமிக்கப்பட்ட யாரையுமே நாங்கள் பதவியைவிட்டு நீக்க மாட்டோம்' எனக் கூறினார் பன்னீர்செல்வம். 


இன்றைக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 'எங்கே மற்றவர்களும் இந்த அணியைவிட்டுப் போய்விடுவார்களோ' எனப் பயந்து கொண்டு, எங்களை எல்லாம் நீக்கியுள்ளனர். அ.தி.மு.க-வின் உள்கட்சி விதிகளின்படி ஒருவரைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இன்றைக்கும் கழகத்தின் பொதுச் செயலாளராக சின்னம்மாதான் இருக்கிறார். அவர்தான் பொதுச் செயலாளர் என மார்ச் மாதம் 7 லட்சம் அபிடவிட்டுகளைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையம்தான் இரட்டை இலைக் கொடுத்திருக்கிறதே தவிர, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் கிடையாது. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் புரிய வைத்துவிட்டார்கள். மக்கள் தீர்ப்பைவிட மகத்தானது வேறு எதுவும் இல்லை" என்றார் இயல்பாக. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");