[ad_1]
தேனி நகரத்தின் மையமாகிப்போனது புதிய பேருந்து நிலையம். நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு லட்சம் பேராவது புதிய பேருந்து நிலையம் வந்துசெல்வார்கள். அருகிலேயே இருக்கும் அரசு அலுவலகங்களும் இதற்குக் காரணம். மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முதல் முதன்மைக் கல்வி அலுவலர் வரை புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியே இருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பேருந்து நிலையத்தில், மொத்தமாக ஆறு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்குகின்றன. ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கான தூரம், 500 மீட்டர் இடைவெளிதான். ஒருவேளை, நெடுஞ்சாலைக்கு அருகே இருப்பதாக உணர்கிறார்களோ என்னவோ.
வாக்கிங் செல்ல முடியவில்லை:
கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் தலைமை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அரசு அலுவலர்கள், மதுரையில் குடியிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், தினமும் காலையில் புதிய பேருந்து நிலையம் வந்திறங்கி, சிறிது தூரம் நடந்துதான் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும். அதேபோல, மாலையில் சிறிது தூரம் நடந்துசென்று பேருந்து நிலையம் வர வேண்டும். இவர்கள் நடந்துசெல்லும் வழியில் மட்டும் நான்கு டாஸ்மாக் கடைகளும் பார்களும் உள்ளன. அப்படியிருக்க, மாலை ஐந்து மணிக்கு மேல் பெண் ஊழியர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதே இல்லை. டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டுச் சாலைக்கு வந்து சண்டை போட்டுக்கொள்ளும் போதை ஆசாமிகள்தான் இதற்குக் காரணம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இரவு 9 மணிக்கு மேல் அப்பகுதியைக் கடக்க பொதுமக்களும்கூட அச்சம் தெரிவிக்கிறார்கள். காரணம், போதை ஆசாமிகள் வழிப்பறியிலும் ஈடுபடுகிறார்களாம்.
அழகாக இருந்த இடம் :
இதுதொடர்பாகச் சமூக ஆர்வலர் முகமது சஃபியிடம் பேசினோம். “ஒருகாலத்தில் இந்தப் பகுதி, மண்... கல் நிறைந்த கரட்டுப் பகுதியாக இருந்தது. இதனால், ஊர் மக்கள் யாருமே இந்தப் பகுதிக்கு வரமாட்டார்கள். அப்படியிருந்த இப்பகுதி மாற்றம் பெறக் காரணம் கலெக்டர் அலுவலகமும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் மற்றும் பல அரசு அலுவலகங்களும்தான். கரட்டுப் பகுதியாக இருந்த இடம் அழகாக மாற்றப்பட்டது. புதிய பேருந்து நிலையமும் வந்ததால் மேலும் அழகானது. மக்கள் அதிகமாக இந்தப் பகுதிகளில் நடமாட ஆரம்பித்தனர். இயற்கையான பகுதி என்பதால், காலை மாலை இப்பகுதியில் வாக்கிங் செல்வார்கள்; உடற்பயிற்சி செய்வார்கள். வேலை முடிந்து வரும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கூட சிறிது நேரம் இப்பகுதியில் காற்று வாங்கிச்செல்வார்கள். மீதம் இருக்கும் கரட்டுப் பகுதியைச் சீர் செய்து ஒரு பூங்கா அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கைவைத்தார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமோ டாஸ்மாக் கடைகள் அமைக்க அனுமதிகொடுத்தது. அதுவும் ஆறு கடைகள். மக்கள் வந்துபோன இடம், போதை ஆசாமிகளின் புகழிடமாக மாறிப்போனது. இயற்கையாக அமர்ந்து மது குடிக்கலாம் என்பதால், மாவட்டத்தின் மிக அதிக கலெக்ஷன்கள் கொண்ட கடைகளாக இவை மாறின. இன்று போதை ஆசாமிகளின் அடிதடி சண்டை, வழிப்பறிச் சம்பவங்கள் எனக் குற்றச்செயல்கள் மிகுந்த இடமாக இது இருக்கிறது. விரைவில் பெரிய குற்றச்சம்பவம்கூட இங்கே நடக்கலாம். கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் அருகே ஆறு டாஸ்மாக் கடைகள் இருப்பது தேனியில் மட்டும்தான் சாத்தியம்” என்றார் ஆதங்கத்தோடு.
லைசன்ஸ் இல்லாத பார்கள் :
“ஏன் இவ்வளவு கடைகளை ஒரே இடத்தில், அதுவும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சாலையில் வைத்திருக்கிறீர்கள்” எனக் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கொடுக்க மறுத்துவிட்டனர். போதை ஆசாமிகள் சிலரிடம் பேசிய போது, “இங்க கடை இருப்பதுதான் ஈஸியாக இருக்கிறது. அருகே பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் சரக்கு அடித்துவிட்டு உடனே பஸ் ஏறிவிடலாம். ஆறு கடைகள் இருந்தாலும் அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இன்னும் இரண்டு கடை திறந்தால் நன்றாக இருக்கும்” என்றனர்.
இப்படி மது குடித்துவிட்டுப் போதையில் பஸ் ஏற இருந்த ஓர் ஆசாமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் யாரென்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.!
இருக்கும் ஆறு டாஸ்மாக் கடைகளிலும் பார்கள் செயல்படுவது குறித்து விசாரித்தபோது, அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் கிடைத்தன. ஆறு டாஸ்மாக் கடைகளில் ஒன்றில் மட்டுமே பார் நடத்த அனுமதி உண்டு. ஆனால், ஆறு கடைகளிலும் சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளின் தூண்டுதல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ‘பார் இல்லாத வெறும் டாஸ்மாக்.., சாமி இல்லாத கோயில் மாதிரி’ என்பது தேனி மாவட்ட அரசியல்வாதிகளின் ஆஸ்தான டயலாக்! என்னதான் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் பார்கள் டெண்டர் எடுப்பதில் எந்தக் கட்சி பேதமும் பார்ப்பதில்லை. அனைவரும் சமமாகப் பார்களை பங்கிட்டுக்கொள்கிறார்கள். அதிக கலெக்ஷன் வரும் பார்களில் சில ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்குச் செல்லும்... அவ்வளவுதான்.
பெரிய ஆபத்து காத்திருக்கிறது :
காவல் துறையோ, அப்பகுதியில் ஒரு 'பீட்’ உருவாக்கி, பார்களிலிருந்து வெளியே வரும் போதை ஆசாமிகளை அவர்களின் இருசக்கர வாகனத்தோடு பிடித்து அபராதம் விதித்து பணம் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சண்டைகள் நடந்துவரும் அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் பெரிய குற்றச்செயல்கள் நடைபெறலாம் என்பதைக் காவல் துறை உணராத அளவுக்குப் பணம் கண்ணை மறைக்கிறதுபோல. மாவட்ட நிர்வாகம் உடனே அந்தக் கடைகள் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி மக்கள் விருப்பப்படி பூங்கா ஒன்றையும் அமைத்துக்கொடுத்து மீண்டும் அழகான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பார்க் ‘பார்’ ஆக மாறிய பரிதாபம்..! தேனி பேருந்து நிலையம் அருகே 6 டாஸ்மாக் கடைகள்
TAGS :
COMMENTS