[ad_1]
எலி ஜோசியம் பார்க்கலையோ... எலி ஜோசியம்... கிளி ஜோசியம் பார்க்கலையோ... கிளிஜோசியம்... என்று தெருவில் குரல் கொடுத்து வந்தார். நெற்றி நிறைய சந்தனம் பூசிய தெய்வீகம் கமழும் மனிதர். கையசைத்து அழைத்தோம். வந்தவர் வந்த வேகத்தில் கையில் சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து கைப்பெட்டியுடன் உட்கார்ந்துவிட்டார். கம்பிக் கதவுகள் பொருத்திய இரண்டு சின்னஞ்சிறிய அறைகள் கொண்ட பச்சை நிற மரப்பெட்டி. ஓர் அறையில் வீட்டு எலி, இன்னொன்றில் பச்சைக்கிளி. `எலியா கிளியா' என்றவரிடம் எலி என்றோம். கையில் இருந்த சீட்டுக்கட்டை கலைத்து வரிசையாகக் கிடத்திவிட்டவர், எலிக்கூண்டை திறந்து, `வா... கணேஷா... வா... வந்து அண்ணனின் பேர் நாமத்துக்கு ஒரு சீட்டு எடு...' என்று குரல் கொடுக்க, ஓடிவந்த கொழுகொழு எலி, சரிவாக அடுக்கப்பட்டிருந்த சீட்டில் ஒன்றை மட்டும் வாயில் கவ்வி எடுத்து ஜோசியர் கையில் கொடுத்து, காத்திருக்க.. கையில் இருந்த கேரட் துண்டு ஒன்றை நீட்ட எலி அதைக் கவ்விக்கொண்டு மீண்டும் கூண்டுக்குள் அடைக்கலமானது.
கையில் இருந்த சீட்டை எடுத்துப் பார்த்தவர், `சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயர் வந்திருக்கார். இறந்தவரை பிழைக்கச் செய்யும் அரிய மூலிகைகள் உடைய சஞ்சீவி மலை வந்திருப்பதால், வந்த நோய், வரும்நோய், எந்த நோயும் உங்களை அண்டாது. ஆயுசு நூறு... எல்லாம் சுபம்' என்று முடித்தவரிடம், அவர் கேட்ட ‘பீஸ்’ 10 ரூபாயைக் கொடுத்துவிட்டு அவரைப்பற்றி விசாரித்தோம்.''என் பேரு விவேகானந்தன். கடந்த 35 வருஷமா நான் ஜோசியம் பார்க்கிறேன். சொந்த ஊரு கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து 100 கிலோ மீட்டர் சுத்தளவுக்குப் போய் ஜோசியம் பார்ப்பேன். நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வருமானம் கிடைக்கும். எலிக்கு உணவாகக் கேரட், முட்டைகோஸ் கொடுப்பேன். இரவு மட்டும் அருகம்புல் தின்னக்கொடுப்பேன். எலிக்கு இப்ப வயசு இரண்டு. ஏழு வயசு வரை வைத்து ஜோசியம் பார்ப்பேன். அப்புறமா குட்டி எலிய வாங்கிப் பயிற்சி கொடுத்து பழக்குவேன்'' என்றவர், இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கூறினார். ''எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை இருந்திச்சு. ஆனா, அது நிறைவேறவில்லை. இருந்தாலும் கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி என்று எங்கு சினிமா சூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க கிளிப்பெட்டியைத் தூக்கிகிட்டு போயிடுவேன். அப்படித்தான் ஒருநாள் ‘மெல்லத் திறந்தது கதவு’’ படசூட்டிங் பொள்ளாச்சியில் நடந்திச்சு. வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற, என்னை அந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் திடீர்னு கூப்பிட்டார். நடிக்கிறயா என்று கேட்டார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. சரிங்க... என்று தலையாட்டினேன்.அந்தப் படத்தின் கதாநாயகி ராதா என்னிடம் கிளிஜோசியம் பார்க்கிற மாதிரி நடிக்கவைத்தார். படம்ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு. அந்தப் படம் ஓடும் தியேட்டர் வாசல்களில் பெட்டியோடு போய் நிற்பேன். படம் பாத்திட்டு வெளியில வரும் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு, ராதா ஜோசியம் பார்த்த கிளி இதுதான் என்று சொல்லி கூப்பிடுவாங்க. ஜோசியமும் பார்ப்பாங்க. அதைத்தொடர்ந்து இரண்டு மலையாளப் படத்தில் இந்த எலி நடிச்சிருக்கு. அதில் ஒரு படத்தில் நடிகை ஊர்வசி எலி ஜோசியம் பார்ப்பதுபோல நடித்திருப்பார். படப்பிடிப்பு இடைவேளையில் நிறைய சினிமா நட்சத்திரங்கள் என்னிடம் ஜோசியம் பார்ப்பாங்க. அடுத்த வாரம் ஊட்டியில எடுக்கப்படும், தெலுங்கு படம் ஒன்றில் எலி ஜோசியம் பார்க்கும் காட்சியில் நடிக்க கூப்பிட்டிருக்காங்க'' என்றவர், ஷீட்டை சுருட்டி அக்குளில் வைத்தவர், பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தார். சினிமாவில் நடிச்ச எலிஜோசியம் கிளிஜோசியம் குரல் தூரத்தில் கேட்டது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`வேடிக்கை பார்க்க வந்தேன்; நடிக்க வச்சிட்டாரு' - 30 வருஷக் கதையைச் சொல்லும் எலி ஜோசியர்
TAGS :
COMMENTS