[ad_1]

2017-ம் ஆண்டு இயற்கை ஏற்படுத்திய பேரழிவுகள் ஏராளம். கலிஃபோர்னியாவில் தொடங்கிய துயரம் கன்னியாகுமரி வரை தொடர்ந்தது இயற்கையின் சோகம். அவை கொடுத்துவிட்டுப்போன கண்ணீரும் காயங்களும் ஆற்றவே முடியாதவை. இவற்றின் மூலம் நான்காவது உலகப்போர் மனிதனுக்கும் இயற்கைக்கும்தான் என்பதை ஒவ்வொரு முறையும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இயற்கை. 2017-ல் நடந்த சில சோக சம்பவங்களை இங்கே நினைவுகூர்வோம்.

இர்மா,  ஹார்வி,  மரியா


ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அட்லான்டிக் கடலில் உருவான சூறாவளிப் புயல்களால், அமெரிக்காவின் டெக்சாஸ், ஃபுளோரிடா, கரீபியன்  தீவுகள், அயர்லாந்து, ஸ்பெய்ன், பிரான்ஸ் என அட்லான்டிக் கடலோர நாடுகள், தீவுகள் எல்லாம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்தன. ஹார்வி, இர்மா, மரியா என உருவான மும்முனை சூறாவளித் தாக்குதலில் சிக்கிய எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகின. இடைவெளி கொடுக்காமல் சூறாவளி அடித்து வெளுத்ததில் முக்கிய நகரங்கள் நீரில் மிதந்தன. தகவல் தொடர்பு சாதனங்கள் பிடுங்கி எறியப்பட்டன. மக்கள் வீடுகளை இழந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மரியா புயலில் 547 பேர் இறந்து போனார்கள். இர்மா புயலில் 134 பேர் இறந்தனர். ஹார்வி புயலில் 63 பேர் இறந்தனர். 28 பேரைக் காணவில்லை. மூன்று சூறாவளிப் புயல்களும் அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத கறுப்புப் பக்கங்களைப் பதிவு செய்தன. வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் எனப் பாரபட்சமில்லாத இயற்கையின் தாக்குதலில் மிரண்டு போன நாடுகள் பல போராட்டங்களுக்குப் பிறகு பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றன. புயலினால் சேதமான பொருள்களின் மொத்த மதிப்பு 369 பில்லியின் அமெரிக்க டாலர்கள். 



 

மெக்சிகோ நிலநடுக்கம் 

2017 செப்டம்பர் 19 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. தலைநகர் மெக்சிகோ சிட்டிக்குத் தெற்கே உள்ள மோர்லாஸ் மாகாணத்தில் மட்டும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக அப்போது தகவல்கள் வெளியாயின. மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற தகவலால், மக்கள் பயத்தில் உறைந்து போயினர். நிலநடுக்க பாதிப்புகள் குறித்து   மெக்சிகோ மக்கள் முன்னதாகவே அறிந்துவைத்திருந்தனர். ஏனெனில் 1985-ம் ஆண்டு மெக்சிகோவில் மோசமான நிலநடுக்கம் ஒன்று நடந்திருந்தது. அந்தப் பேரழிவில் 40000 மக்கள் கொல்லப்பட்டனர். 30000 பேர் காயமடைந்தனர். பல்வேறு கட்டட இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டது. கடைசியில் 370 பேர் உயிரிழந்தனர். 6000 பேர் படுகாயமடைந்தனர் என அரசு அறிக்கை கொடுத்தது.  இதில் முக்கியமான விஷயம். 1985-ம் ஆண்டு நிலநடுக்கம் நடந்த தேதியும் 2017-ல் நிலநடுக்கம் நிகழ்ந்த தேதியும் ஒரே நாள். அது செப்டம்பர் 19.

ஈரான், ஈராக் நிலநடுக்கம் 

2017-ம் ஆண்டு நவம்பர் 13 அன்று, ஈரான்-ஈராக் எல்லைப்புறத்தில் ஈரானின் எல்லையோரப் பகுதியில் உள்ள கெர்மான்சா மாகாணத்தில் அலாப்ஜா நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கமானது, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதுமாகவும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 452 பேர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர். 70,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  2017-ம் ஆண்டில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்க நிகழ்வு இதுவேயாகும். சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், துபாய், குவைத்  எனப் பல நாடுகளையும் அதிரவைத்தது. 2003-ம் ஆண்டு ஈரானில் இதேபோல நிலநடுக்கம் ஏற்பட்டு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிலிப்பைன்ஸ்

டிசம்பர் 24 அன்று  கடுமையான புயல் ஒன்று பிலிப்பைன்ஸ் நகரில் மையம் கொண்டது. இப்புயலுக்கு ‘டெம்பின்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயல் அந்த நாட்டையே புரட்டி எடுத்துவிட்டது. இந்தப் புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மிண்டானோ நகரின் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயலினால் டெல் நார்ட்டே மாகாணத்திலும் மிண்டானோவா மாகாணத்திலும் சுமார் 200 பேர் பலியாகி இருக்கலாம் என்றும், சுமார் 160 பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி டெம்பின் பலி எண்ணிக்கை 257. பேரிடர் மீட்புப்  பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.



 
 சோமாலியா 

தென் சூடான், ஏமன் , சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு 2017 என்பது உண்மையில் துயர ஆண்டாகவே இருந்தது. நான்கு நாடுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறட்சியிலும் பட்டினியிலும் இருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறது. மழை, வெள்ளம், புயல்,  நிலநடுக்கம், நிலச்சரிவு போன்றவற்றால் அன்றி, வறுமையின் வழியாக இங்கே மக்களை வதைத்தது இயற்கை. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மனிதாபிமான உதவி அவசரத் தேவையாக அங்கு தேவைப்படுகிறது. 3.60,000 லட்சம் சோமாலியா நாட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் பசியாலும் வறட்சியாலும்  2011-ம் ஆண்டு 2.50,000 பேர் உயிரிழந்ததைப் போல இன்னொரு துயரமும் நிகழலாம் என்கின்றன தரவுகள். 



கன்னியாகுமரி சோகம்

நவம்பர் 29 மையம்கொண்ட ஒகி புயல் கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டி போட்டுவிட்டுப் போனது. ஒகி புயலின் கோரத்தாண்டவத்தில் கன்னியாகுமரி கடலோரக் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. பள்ளிக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரியில் என்ன நடந்தது என வெளி மாவட்டங்களுக்குத் தெரியாமல் இருந்தது. கிடைத்த சில புகைப்படங்களும், காணொளிகளும் கன்னியாகுமரியை ஒகி புயல் சிதைத்துவிட்டதைப்  புரிய வைத்தன. சாலைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு என எல்லாவற்றிலுமிருந்து கன்னியாகுமரி தனித்துவிடப்பட்டது. பயிர்கள், வாழைத் தோட்டங்கள் உள்பட விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டன. புயல் கரையைக் கடந்த பிறகான கன்னியாகுமரி, துயரத்தின் வலியை முழுதாய் அனுபவித்தது. ஏனெனில் புயல்குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் மீனவ மக்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். மீனவர்களைத் தேடி இந்தியக் கடற்படை கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கிய மீனவர்கள் மீட்கப்பட்டார்கள். காணாமல் போனவர்களைத் தேடும் படி நடந்துகொண்டே இருந்தது. இரண்டொரு நாள்களில் சில மீனவர்களின் உடல்கள் கடலில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணீரும் பிரார்த்தனைகளும் காணாமல் போன மீனவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கடைசியில் இலங்கை, தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 309 பேர் இறந்துவிட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. 619 பேரைக் காணவில்லை என அறிவித்தார்கள். தேடும் பணி  இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 27- வது நாளாக நடைபெறும் மீட்புப் பணிகளில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 18 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடலுக்குப் போன மீனவர்கள் கரை திரும்புவார்கள் என்கிற காத்திருப்பு இப்போது வரை இருந்துகொண்டே இருக்கிறது. கன்னியாகுமரி மட்டுமல்ல கேரளாவின் கடலோரக் கிராமங்களிலும் இதே நிலை நீடித்தது. மீனவர்கள் வாழ்க்கையில் ஒகி புயல் ஏற்படுத்திய வடுக்கள் மறைய வெகுகாலமாகும். 




 
இறந்தகாலம், எதிர்காலம் என எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு துளி கண்ணீர், நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்துக்கும்   கன்னியாகுமரி மண்ணில் விழுந்துகொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் கடலுக்குப் போன மீனவர்களுக்குக் கடலில் என்ன நடந்தது எனக் கடைசி வரை தெரியாமல் போனதுதான் இந்த ஆண்டின் பெருந்துயரம்! 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");