[ad_1]
’உலக கழிவறை தின’த்தை முன்னிட்டு கோவில்பட்டியில், கழிவறையை பயன்படுத்துதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்புறம் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கழிவறை முன்பு ‘உலக கழிவறைதின’த்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகளவில் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை. இவர்களில் 110 கோடிபேர் வயல்வெளிகள், ஆறு, குளத்துக் கரைகள், கடற்கரைகள் மற்றும் தெருக்களின் ஓரங்களிலும் மலம் கழித்து வருகிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இவ்வாறு திறந்தவெளிகளில் மலம் கழிக்கச் செல்லும் போது சிறுமிகளும், பெண்களும் பாலியல் வன்முறை மற்றும் விஷ பூச்சிகள், பாம்புக்கடிகளுக்கும் ஆளாகி வருகின்றனர். உலகம் முழுவதுமுள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்திய கடந்த 2001, நவம்பர் 19ம் தேதியையே ’உலக கழிப்பறை தினமாக’ ஐக்கிய நாடுகள் அறிவித்தது. உலகளவில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் பற்றியும், சுகாதாரத்தைப் பேணுவது தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில்தான் இக் கழிவறை தினம் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
’’கோப்பைக்குள் ஒரு கப் தண்ணீர் ஊற்றிய பின்பே மலம் கழிக்கத் துவங்க வேண்டும். மலம் கழித்த பின்பு கோப்பைக்குள் உள்ள குழாயில் மலம் மறையும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பின், கைகளை சோப்பு போடு சுத்தமாக கழுவ வேண்டும். இதனால், நோயை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை கோப்பைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். கழிப்பறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ’’ என கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் விளக்கினர்.
தொடர்ந்து, ’கழிவறையின் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்து கழிப்பறை இல்லாத அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும், திறந்தவெளியில் மலம் கழிக்காத சூழ்நிலையை ஏற்படுத்தவும், நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்காத இந்தியாவை உருவாக்கவும், நோய்த்தொற்றுகளிலிருந்து மக்களை பாதுகப்பேன்’ என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ’கழிப்பறையை பயன்படுத்துங்கள்.. களிப்புடன் வாழுங்கள்.., திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம். சுகாதாரத்துடன் வாழ்வோம்’ என்ற வாசகம் தாங்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டன.
' சுகாதாரத்துடன் வாழ்வோம்!' - கோவில்பட்டியில் மக்கள் உறுதிமொழி #WorldToiletDay
TAGS :
COMMENTS