[ad_1]

Chennai: பன்னிரண்டு ஆண்டுகள் பழைமையான 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தையும், ஏழு ஆண்டுகள் பழைமையான ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்கும் பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  புதிய பாடத்திட்டத்தில் என்னென்ன பகுதிகள் இடம்பெற இருக்கின்றன என்பதற்கான புதிய பாடத்திட்ட வரைவை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.




இந்தப் புதிய பாடத்திட்ட வரைவுகள்குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் அனைவரும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிப்பதற்கு, ஒரு வாரகால அளவை மட்டும் ஒதுக்கியுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.

பாடத்திட்ட வரைவுகள்குறித்து, கல்வியாளர்களிடம் பேசினோம். 

கல்வியாளரும் தனியார் பள்ளியின் முதல்வருமான `ஆயிஷா' நடராசன் ``பாடத்திட்ட வரைவுகள், 700-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்டதாக இருக்கின்றன. இதை முழுமையாகப் படிப்பதற்கு ஒரு வாரகாலம் என்பது மிகக் குறைவு. குறைந்தது 15 நாள்கள் முதல் ஒரு மாதகால அளவு ஒதுக்கப்பட வேண்டும். புதிய வரைவுகுறித்து மாவட்ட அளவில் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கருத்தரங்கங்கள் நடத்தி, புதிய பாடத்திட்ட வரைவில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும், விடுபட்ட விஷயங்கள் என்னென்ன என்பதையும் விவாதித்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கவேண்டியது அவசியம். 

`பாடத்திட்ட வரைவுக்கு முன்பே, எல்.கே.ஜி., யு.கே.ஜி போன்ற வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தை வரையறுக்க வேண்டும்' என ஆலோசனை வழங்கியிருந்தோம். ஆனால், புதிய பாடத்திட்ட வரைவில் இந்த வகுப்புகளை கண்டுகொள்ளவே இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஆங்கில எழுத்துகளையும் தமிழ் எழுத்துகளையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதே பாடத்தை முதல் வகுப்பிலும் சொல்லிக்கொடுக்கும் வகையில்தான் புதிய பாடத்திட்ட வரைவு இருக்கிறது. 

ஆரம்பக் கல்வியில் தாய்மொழிக் கல்வியை வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம். தாய்மொழிக் கல்வியை முழுமையாக அமல்படுத்தப்படும் என்பதுகுறித்த விவரம் இல்லை. வரைவுகள், ஆங்கிலத்தில் முழுமையாக வழங்கியிருக்கிறார்கள். இதைத் தமிழிலும் வழங்கியிருக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியின்போதே மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். இசையையும் இசைக்கருவிகளையும் கையாளச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனவும், மூன்றாம் வகுப்பிலிருந்து நாடகத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தோம். இவை எதுவும் புதிய பாடத்திட்ட வரைவில் இடம்பெறவில்லை. எப்போதும்போல கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் மட்டுமே இருக்கின்றன.  

புதிய பாடத்திட்ட வரைவில் மதிப்பீடுதல் குறித்தும், தேர்வுமுறைகள் குறித்தும் விவரங்கள் எதையும் குறிப்பிடவில்லை. நான்காம் வகுப்பிலிருந்து அனைவரையும் தேர்ச்சி பெறவைப்பதா அல்லது மத்திய அரசு சொல்வதுபோல் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் அடுத்த வகுப்புக்கு அனுப்புவதா என்பதுகுறித்தும் தகவல் இல்லை.  புதிய பாடத்திட்ட வரைவின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகப் படித்துப் பார்த்துக் கருத்துச் சொல்வதற்கு பள்ளிக்கல்வித் துறை கால அவகாசத்தை வழங்க வேண்டும்" என்றார் ஆயிஷா நடராசன்.

வருமானவரித் துறை அதிகாரியும் கல்வியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ``பாடத்திட்ட வரைவை படித்துப்பார்த்தபோது சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாநிலப் பாடத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்பதும், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. 

ஐ.ஐ.டி மற்றும் நீட் தேர்வை மனதில் வைத்து தயாரித்திருப்பதையும், படித்து முடித்தவுடன் வேலைக்குப் போவதும் சம்பாதிப்பதும்தான் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்ற வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர். நவீன தொழில்நுட்பத்தை ஆரம்ப வகுப்பிலேயே கொண்டுவந்திருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இ-மெயில் எழுதுவது, கணக்கு வைத்துக்கொள்வது என்பதையெல்லாம் உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல், தொழில்நுட்ப நுணுக்கங்களை அறிந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில் ஏராளமான தொழில்நுட்ப விஷயங்களைச் சேர்த்திருந்தாலும் இவற்றை மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துச்செல்வார்கள் என்ற கவலையும் இருக்கிறது.

மூன்றாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும்,  பத்தாம் வகுப்பு பாடத்தில் இன்ஜினீயரிங் பாடத்தையும் கொண்டுவந்து நிறையவே திணித்திருக்கிறார்கள். திடீரென, இவ்வளவு மாற்றங்களை மாணவர்கள் எவ்வாறு உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்ப் பாடங்களில் ஆத்திசூடி, மூதுரை, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம் ஆகியவற்றைவிட நவீன தொழில்நுட்பம் சிறுவர்களுக்கு எந்த வகையில் நன்மைபயக்கும் எனப் புரியவில்லை.

பல பாடங்களில் அடிப்படை விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன அல்லது புறக்கணித்திருக்கின்றனர். படைப்பாற்றலை மேம்படுத்துவதற்குப் பதிலாக வணிகரீதியாகவும், சுய அடிப்படையிலான விஷயங்களே அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் பாடத்திட்ட வரைவைப் பார்வையிட்டு கருத்தை வழங்க வேண்டும். இதற்கு கூடுதல் அவகாசத்தை வழங்க வேண்டும்" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ``புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு முன்னுரையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றுக்கொடுப்போம். சமமான கற்றல் வாய்ப்புக்கான ஏற்படுத்த முயலுவோம் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திலிருந்து சமத்துவக் கோட்பாட்டைச் சொல்லி, அதை உணரக்கூடிய குடிமக்களாக மாணவர்களை வளர்தெடுப்பதற்கான கல்வியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

புதிய பாடத்திட்ட வரைவு, 700-க்கும் மேற்பட்ட பக்கங்கள்கொண்ட கோப்புகளாக இருக்கின்றன. இதை ஏழு நாள்களுக்குள் படித்து, கருத்து சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் யாராலும் இவ்வளவு பக்கங்களையும் உடனே படித்து, கருத்துச் சொல்லிட முடியாது.  கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என்று கோரிக்கைவைத்தார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ``ஏற்கெனவே உள்ள பாடத்திட்டமும், புதியதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டமும் 2005-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய கலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். நாம் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் வேளையில் வகுப்புச் சூழலையும் மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். நல்ல ஆசிரியர், சாதாரண பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு திறமையான பல மாணவர்களை உருவாக்க முடியும். அதைப்போலவே சிறந்த பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு சாதாரண மாணவர்களையும் உருவாக்க முடியும். ஆகையால், வகுப்பறை கற்பித்தல்தான் மிக முக்கியம்.  

இப்போது மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து தனிப்படிப்பு வகுப்பிலும் கலந்துகொள்கின்றனர். பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஐந்து மணி நேரத்திலேயே கற்றல் நடைபெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். எதற்காக ஸ்பெஷல் க்ளாஸும் டியூஷனும்? இவை இரண்டும் இல்லாத கல்வியாக இருக்க வேண்டும். இன்று பாடச்சுமையைக் கூட்டி வேடிக்கை பார்க்கும் அளவுக்குத்தான் இருக்கிறது. நீட் தேர்வில் 6,000 பேருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. மீதம் உள்ள ஒன்பது லட்சம் பேருக்கான வாய்ப்பையும் திறனையும் மேம்படுத்துவதுகுறித்து திட்டங்கள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கல்வியை வழங்க வேண்டும்.  ஓவியம், இசை, விளையாட்டு, கைவேலைப்பாடு, தோட்டக்கலை என அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் திறமையை வளர்தெடுக்கும் வகையில் கல்விப் பாடத்திட்டம் இருக்க வேண்டும்" என்றார்.


இளைய தலைமுறையின் மீது அக்கறைகொண்ட அனைவரும் பள்ளிப் பாடத்திட்ட வரைவை http://tnscert.org/ என்ற பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் படித்து, கருத்து தெரிவிக்கவேண்டியது அவசியம். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");