[ad_1]
சென்னையின் மொத்த அழகும் இரவுதான். வாகன நெரிசல்களால் கடுப்பேற்றும் சென்னையின் பகல்பொழுது சாலைகள், இரவில் அமைதியைச் சூடிக்கொள்ளும். அதேநேரம், எந்த நேரத்திலும் ஒரு சொகுசு கார் தன் வாழ்க்கையைப் புரட்டிப்போடலாம் என்ற அச்ச உணர்வுடன் பிளாட்ஃபாரங்களின்மீது நாள்களைக் கடத்தும் மனிதர்களும் அரை உறக்கத்தில் இருப்பார்கள். அப்படியான சிலரை வெவ்வேறு இடங்களில் சந்தித்தோம்.
திருவல்லிக்கேணி ஹைரோடு
டீ குடித்துக்கொண்டிருந்த எங்களிடம், சாப்பாடு வாங்கித் தர முடியுமா என்று ஓர் அம்மா கேட்டார். சற்று தூரத்தில் அவரது குடும்பம் அமர்ந்திருந்தது. அந்த இரவில் அருகில் எங்குமே கடை இல்லை. சைக்கிளில் டீ கொண்டுவந்திருந்த அண்ணாவிடம் டீயும் பிஸ்கட்டையும் அவர்களுக்கு வாங்கிக்கொடுத்து, பேசத் தொடங்கினோம்.
“எனக்கு ஊரு திருவண்ணாமலை, போளூர் பக்கத்துல ஒரு கிராமம். ஊருல பொழைக்க வழி இல்லே. சென்னைக்குப் போனால் கட்டடத் தொழில் செஞ்சாவது வயித்தைக் கழுவிக்கலாம்னு ரெண்டு பிள்ளைகளோடு வந்தோம். வந்து ரெண்டு நாளாச்சு. வேலை எதுவும் கிடைக்கலை. ரெண்டு நாளா பட்டினியா இருக்கோம்” என்றார் அந்த அம்மா.
டீயைக் குடித்துவிட்டு, நாளை சென்னை எப்படியாவது வாழ்க்கை தந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நடக்க ஆரம்பித்தார்கள்.
திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேஷன்
போலீஸ்காரர் ஒரு பெண்ணைத் திட்ட, அந்தப் பெண் பதில் சொல்வதை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு அருகில் சென்றோம். அதற்குள் அந்தக் காவலர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். ''என்னக்கா ஆச்சு?'' என்று கேட்டோம். “வெளிச்சத்துல படுத்துக் கெடக்குறதுக்குத் திட்டிட்டு போறாங்கம்மா” என்றார்.
நாம் புரியாமல் விழிக்கவே, “நாங்க டிரெய்னில் வித்தை காட்டறவங்கம்மா. ராத்திரியில் பிளாட்ஃபாரம் தேடிவந்து படுத்துடுவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம். இங்கேதான்னு எந்த நிரந்தர இடமும் இல்லே. வெளிச்சத்துல படுத்தால் பாதுகாப்பா இருக்குமேனு தெருவிளக்குக்குக் கீழே படுக்கறோம். ஆனா. எங்காவது மூலைக்குப்போகச் சொல்லி விரட்டுவாங்க. கையில் பெண் குழந்தையை வெச்சுட்டு எப்படிம்மா இருட்டுல படுக்கறது'' என்கிறார் வேதனையுடன்.
பெசன்ட் நகர்
”ரோடு பெருக்குவோம். குப்பைப் பொறுக்குவோம். அதை காயிலாங்கடையில் போட்டு வர்ற காசுல சாப்பிடறோம். அதிலும் இப்போ பெருசா வருமானம் கிடைக்கறதில்லே. வாங்கறவங்க, ஏதோ வரி போட்டிருக்காங்கன்னு குறைச்சலாதான் கொடுக்கறாங்க. இங்கேதான் எப்போவும் தூங்குவோம். இது என் மவ. என்ன வயசுன்னு நெனக்கிறே. 20 வயசுலேயே ரெண்டு குழந்தைங்க. மனுசனுங்க மிருகமா இருக்கானுங்க. பிரசவத்துக்கு மட்டும்தான் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அதுவும், வழியில் பார்த்த ஒருத்தர் இரக்கப்பட்டு, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க” என்று, தன் மகள் பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை மென்றுவிழுங்கிச் சொல்கிறார்.
பாடி
டெலிபோன் கம்பெனிகளுக்குக் குழி வெட்டும் வேலைக்காக இடம்மாறிப்போகும் சில குடும்பங்கள், பாடி பாலத்துக்குக் கீழே இரவு உணவினை முடித்து, தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். “நாங்க ஆறு குடும்பம். டெலிபோன் கம்பெனிக்குக் குழி வெட்டுற வேலை. எங்களுக்கு கான்ட்ராக்ட்தான். டாய்லெட்டுகூட பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்திக்குவோம். ஆனா, காலையில் குளிக்கதான் எங்கே போறதுன்னு தெரியாது. நாங்க எங்கே தங்கறோமோ அங்கே இருக்கறவங்க நல்லாதான் பழகுவாங்க. ஆனா...'' என்று இழுத்தார்.
''சொல்லுங்க அக்கா'' என்று கேட்க, இடைவெளிவிட்டுத் தொடர்கிறார், “2015 வெள்ளத்துல மட்டும், அந்த ஊருக்காரவங்க அவங்களுக்குதான் நிவாரணம் கொடுக்கணும்னு எங்களுக்கு எதுவும் கொடுக்கவிடலை. அப்போ மனசு ரொம்ப வேதனையா இருந்ததும்மா. இப்படி நாதியில்லாம இருக்கோமேன்னு தோணுச்சு. எங்களை சில பேரு விசாரிச்சு, கொஞ்சம் பொருள் குடுத்துட்டுப் போனாங்க” என்கிறார் ஜெயலட்சுமி அக்கா.
”வெளிச்சத்துல தூங்குனா சேஃப்டி. ஆனா, போலீஸ்காரங்க வெரட்டிர்றாங்களே!” சென்னை பிளாட்பார பெண்களின் வாழ்க்கை #VikatanExclusive #NightLifeChennai
TAGS :
COMMENTS