[ad_1]

’துரோகி வைத்திலிங்கத்தை இனி எந்தத் தேர்தலிலும் வெற்றபெற செய்யாதீர்கள்’ என்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் தினகரன் ஆவேசமாகப் பேசினார்.

 


தினகரன் பேசுகையில், “அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சின்னம்மா. அவரால் செயல்பட முடியாத நிலையில் 2000-ம் ஆண்டு ஒரத்தநாடு பகுதியில் ஒவ்வோர் ஊராகச் சென்று கொடியேற்றும்போது, கொடிமரத்தில் கயிற்றை அவிழ்த்து என் கையில் கொடுத்தவர் வைத்திலிங்கம். அப்படிப்பட்டவர்தான் இன்று இந்தியத் துணைக் கண்டத்திலே தன்னைப் பெரும் தலைவராக நினைத்துக் கொண்டிருக்கிறார். சிலர் நாம் பெரிய தலைவராக ஆகிவிட்டோம் என நினைக்கிறார்கள். யாரால் எம்.எல்.ஏ ஆனார், யாரால் இரண்டு முறை அமைச்சராக ஆனார், யாரால் அம்மாவின் அருகிலேயே இருந்தார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியக் கழகத்துக்குத் துரோகம் செய்துவிட்டு, வளர்த்து ஆளாக்கியவர்களை மறந்துவிட்டு கொச்சைப்படுத்தி பேசி தஞ்சை மாவட்டத்துக்கே ஓர் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.


எவ்வளவு பெரிய சூழ்நிலை வந்தாலும் ஆளாக்கியவர்களை மறக்கக் கூடாது என்பது தமிழர்களின் பண்பாடு. சோழ மண்டலம் பண்பாடு என்ன தெரியுமா? எதிரிகள்கூட அடைக்கலம் தேடி வந்தால், அடைக்கலம் கொடுப்பதுதான் சோழ மண்டலத்தின் பண்பாடு. அப்படிப்பட்ட பூமியில் பிறந்தவர் தன்னையும் தனது சொத்துகளையும் காப்பாற்றுவதற்காக வளர்த்து ஆளாக்கியவர்கள்மீது பழி சொல்லி துரோகத்தின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறார். வைத்திலிங்கம் துரோகத்துக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதை சின்னம்மா தலைமையில் முறியடிப்போம். வைத்திலிங்கத்தைக் கடந்த தேர்தலில் தோற்கடித்ததுபோல இனி எல்லாத் தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும். தியாகி பிறந்த ஊர், முன்னாள் அமைச்சர் இருந்த ஊர் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த ஊர் வைத்திலிங்கம் போன்ற துரோகிகள் பிறந்த ஊராக இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நீங்களெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார் தினகரன்.