[ad_1]



உலகின் ஏழாவது மிகப்பெரிய நாடு இந்தியா. ஆனால், இந்த நாடு முழுவதும் ஒரே டைம்ஸோன் தான். அதாவது, ஜம்முவில் மணி காலை 10 என்றால், கன்யாகுமரியிலும் காலை 10 மணிதான். இது சாத்தியமா? சரியா?


ஏன் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தை கடைபிடித்தால் என்னவென்று நீங்கள் கேட்கலாம். இவ்வளவு பெரிய நாட்டிற்கு ஒரே நேரத்தை கடைபிடிப்பத்தில் பல குளறுபிடிகள் இருக்கின்றன. முதலில் இந்தியாவில் எவ்வளவு பெரிய நேரவித்தியாசம் இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்தியாவின் மேற்கு எல்லையும் கிழக்கு எல்லையும் கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. அதாவது இது லாங்கிடியுட்டில் சுமார் 30 டிகிரி வித்தியாசம் (68 டிகிரி ஈஸ்ட் - 98 டிகிரி ஈஸ்ட்). நேரக்கணக்கீட்டில் 15 டிகிரிக்கு ஒரு மணிநேரம் கூடும். இதன்படி கிழக்கில் இருக்கும் கடைசி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 4 மணிக்கு உதிக்கும் சூரியன் மேற்கில் இருக்கும் குஜராத்தில் 6 மணிக்கு தான் உதிக்கும். 

இதில் அப்படி என்ன இழப்பு வந்துவிடப்போவதாக எண்ணலாம். நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நாம் செய்யும் எல்லா விஷயத்திலும் நேரம் முக்கியம். சராசரியாக காலை 7 மணிக்கு அனைத்து இந்தியர்களும் எழுவதாகவும் இரவு 10 மணிக்கு தூங்குவதாகவும் வைத்துக்கொள்வோம். இதன்படி பார்த்தால் கிழக்கில் இருக்கும் மாநிலங்கள் சூரியஒளியில் இருக்கும் நேரம் மிகக்குறைவு. மாலை 4 மணிக்கே கிழக்கில் இருக்கும் சிலஇடங்களில் இருட்டிவிடுகிறது. இதனால் ஒரு நாளின் பெரும்பகுதி மின்சார ஒளிகளில்தான் கடக்கின்றன இந்த மாநிலங்கள். அதுவே குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் நேர்மறையாக நடக்கும். அதிகமாக சூரியஒளியை பயன்படுத்தும் இந்த மாநிலங்களில் பலமடங்கு அதிக மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 

ஜாலியாக இன்னொரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமென்றால் கொல்கத்தாவில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒளி போதவில்லை என்று மேட்ச் ட்ராவில் முடிந்தது. இதுவே சரியான நேரத்தில் போட்டி தொடங்கியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்க வாய்ப்பு அதிகம். 

இப்போது இருக்கும் ஒரே இந்தியநேரம் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்பதற்கு முன்பு சற்று வரலாற்றை புரட்டிப்பார்ப்போம். 
இந்த நேரமுறைகள் வருவதற்குமுன் சூரியன் ஒளியால் விழும் நிழல்களை வைத்து தான் அப்போது காலை மதியம் மாலை இரவு என்று நேரம் வகுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பூமி ஒரு முழு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஒருநாள். சில நாகரீகங்கள் சூரியகடிகாரங்கள் வைத்தும் சில மணல் கடிகாரங்கள் வைத்தும் நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளன. பின்பு, பிரிட்டிஷ் ஆட்சி உலகத்தைச் சுற்றி வளர ஆரம்பித்தபோதே இந்த ஜி.எம்.டி(GMT) என்று அழைக்கப்படும் க்ரீன்விட்ச் மெரிடியன் டைம் உலகநேரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும்போதுகூட இந்தியாவின் அளவைக் கருத்தில் கொண்டு இருவேறு நேரமண்டலங்களை கடைபிடித்தது அந்த அரசாங்கம். இரண்டுமே அன்றைய இந்தியாவில் பிரபலமாக இருந்த இருநகரங்களை வைத்து கணக்கிடப்பட்டன.

இந்தியாவின் மேற்கு பகுதிகளில் பம்பாய் நேரமும், கிழக்கில் கல்கத்தா நேரமும் பயன்படுத்தப்பட்டது. ரயில்கள் வந்த பிறகு குழப்பம் இருக்கக்கூடாதென பொதுவாக ரயில்வே நேரம் என்று ஒன்றை 1802ல் அறிவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இது பம்பாய் நேரத்துக்கும் கல்கத்தா நேரத்துக்கும் நடுவில் இருப்பதாக அமைக்கப்பட்டது. அதுதான் நமது மெட்ராஸ் நேரம். இவை எப்படி கணக்கிடப்பட்டதென்றால் பம்பாய் நேரத்திற்கு ஜிஎம்டியுடன் இருந்து 4 மணிநேரம் 51 நிமிடங்களும் கல்கத்தா நேரத்திற்கு 5 மணிநேரம் 56 நிமிடங்களும் மெட்ராஸ் நேரத்திற்கு 5 மணிநேரம் 21 நிமிடங்களும் கூட்டினால் போதும். ஆனால் இவையெதுவுமே சரியான வட்டமிடப்பட்ட எண்களாக இல்லாததால் 1906ல் ஜிஎம்டியை விட 5 மணிநேரம் 30 நிமிடம் கூடுதலான இந்தியன்  ஸ்டாண்டர்ட் டைம் என்று அழைக்கப்படும் ஐஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நேரத்திற்கான 82.5 டிகிரி கிழக்கு லாங்கிடியுட் அலஹாபாத் அருகில் கடக்கும். பம்பாய் நேரம் 1955 வரையும், கல்கத்தா நேரம் 1948 வரையும் புழக்கத்தில் இருந்திருக்கிறன. இன்றுவரை ஐஎஸ்டி தான் இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது. 

இதே நேரத்தில் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அலாஸ்கா போன்று தனித்து வேறு இடங்களில் இருக்கும் பகுதிகளை தவிர மற்ற அமெரிக்க மாகாணங்களில் பசிபிக், சென்ட்ரல், ஈஸ்டர்ன், மௌண்டைன் என 4 வகையான நேரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இது போதாது என்று டே லைட் சேவிங் டைம் என்ற ஒரு நடைமுறையும் அங்கு உள்ளது. பெயர் குறிப்பிடுவதை போலவே சூரியஒளியை முடிந்த அளவு பயன்படுத்தவே இந்த நடைமுறை. சரியாக மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அதிகாலை 2 மணிக்கு அனைத்து அமெரிக்க நேரங்களும் ஒரு மணிநேரம் கூட்டப்பட்டு 3 மணியாக மாறும். இது மீண்டும் நவம்பர் மாதம் முதல் ஞாயிறு 2 மணிக்கு குறைக்கப்படும். இந்த நடைமுறை பல்வேறு முறைகளில் அமெரிக்கா மட்டுமின்றி எழுபத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறன. இந்த முறைக்கு அதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும், விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. 



2014ல் அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் வடகிழக்கு மாநிலங்களுக்கு தனிநேரம் வேண்டுமென்று குரல் எழுப்பினார். ஆனால் மத்தியில் அது நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் ஒருதலைப்பட்சமாக ஒரு முடிவெடுத்தார். அது பழைய 'ச்சாய்பகன்' நேரத்தை அதிகாரபூர்வமாக அல்லாமல் அசாம் கடைபிடிக்கும் என்பதே. அஸ்ஸாம் டீ எஸ்டேட்களில் பிரிட்டிஷ் கடைபிடித்த இந்த நேரம் இந்தியநேரத்தை விட ஒருமணிநேரம் அதிகம். 2006ல் பிளானிங் கமிஷனும் இரு நேரமண்டலங்களை கடைபிடிக்கலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் இரண்டு நேரமண்டலங்கள் கூட வேண்டாம்; இப்போது இருக்கும் நேரத்தில் இருந்து அரைமணிநேரம் கூட்டிவைத்தால் கூடபோதும். வருடத்திற்கு 270 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.


இப்படி நேரங்களை மாற்றுவதால் மக்களிடையில் குழப்பம் ஏற்படும் என மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கா போன்ற பெரிய உள்நாட்டு போக்குவரத்து இருக்கும் நாடுகளிலேயே குழப்பங்கள் இன்றி இது நடைமுறையில் இருக்கும்போது இங்கும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. பணமதிப்பிழக்கம், ஜி.எஸ்.டி போன்று விவாத்திற்குள்ளான அதிரடி முடிவுகள் எடுக்கும் அரசு இந்த நேரப்பிரச்சனையிலும் எதாவது முயற்சிக்கலாம். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");