[ad_1]

செங்கல்பட்டு புறவழிச்சலை அருகே உள்ளது நீஞ்சல்மடு. ஆற்றுக்கு செல்லும் நீரை மதகு அமைத்து அங்கிருந்து களத்தூரான் கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் பகுதிக்கு வெள்ள நீர் அனுப்பப்படும். இந்த ஏரியை நம்பி மட்டும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பொன்விளைந்த களத்தூர் ஏரி மட்டுமில்லாது அப்பகுதியில் 32 ஏரிகளுக்கு இந்த நீர் செல்லும்.




“மழை நீரை ஷட்டர் மூலம் சேமிக்கும் போது, செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்துவிடுகிறது. 2015, 2016, 2017 என தொடர்ந்து எங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து வருகிறது. இதனால் நீஞ்சல்மடுவில் தண்ணீரை தேக்கக் கூடாது” என மகாலட்சுமி நகர் மக்கள் இரவு நேரம் என்றும் பாராமல் செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நடடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். கடந்த வருடம் வர்தா புயலின் போது பெய்த மழையில் வந்த வெள்ளநீர் களத்தூரான் கால்வாய்க்கு அனுப்பப்படாமல் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. கடந்த ஆண்டு களத்தூர் ஏரி நிரம்பாததால், அப்பகுதியில் விவசாயம் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ளவர்கள் சாலைமறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.