[ad_1]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில், ஓ.ஏன்.ஜி.சி நிறுவனம் செய்து வரும் திடீர் ஆய்வால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  




ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக இந்தியா முழுவதும் தேர்வுசெய்யப்பட்ட 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. இக்கிராமத்தில், ஹட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த சில மாதமாக அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதத்துக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள மணி நகர் பகுதியில் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, ஆய்வைப் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும்  சாத்தான்குளம் அருகிலுள்ள சங்கரன்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியாரின் இடத்தில் மீண்டும் ஆய்வைத் துவக்கியுள்ளனர்.

  

இந்த ஆய்வுகுறித்து உடன்குடியைச் சேர்ந்த ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலனிடம் பேசினோம், ‘’ 3 வாகனத்தில் வந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர், சுமார் 100 மீட்டர் நீளத்தில் பேட்டரி போன்ற குப்பிகளை இணைத்து, தனியார் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, சரியான பதில் சொல்லவில்லை. பலமுறை தொடர்ந்து கேட்டபோது, ‘இப்பகுதியில் நில அதிர்வு ஏற்படுமா என சோதிக்கிறோம்’ என்றனர். ஆனால், அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாததால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து விசாரித்த பிறகுதான், ஹைட்ரோகார்பன் குறித்து ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திசையன்விளை, இட்டாமொழி, இடைச்சிவிளை ஆகிய ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகை, தரிசு நிலங்கள் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வைச் செய்துவருவதாகச் சொன்னார்கள். 3 மாதத்திற்கு முன்பு நடந்த இதே ஆய்வைப் பற்றி ஆட்சியரிடம் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை தரவில்லை.


இத்திட்டம் துவக்கப்பட்டால், சுமார் பல ஆயிரம் அடி ஆழம் வரை துளையிட்டு ஃபிராங்கிங் முறையில் பூமிக்கு அடியிலுள்ள இயற்கை எரிவாயு எடுக்கப்படும். இதனால், நச்சுத்தன்மையுடன் நிலத்தடி நீர் மாசுபடும். மாசுபடும் தண்ணீரை எந்த வகையிலும் சுத்தம்செய்ய முடியாது. இந்த முறைக்கு பயன்படுத்தப்படும் ரசாயனம் அனைத்துமே, கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த அபாயகரமானது. இத்திட்டத்தை  முதல்கட்ட ஆய்வு நிலையிலேயே எதிர்க்காவிட்டால், சில ஆண்டுகள் கழித்து இத்திட்டத்தை அமல்படுத்த அந்நிறுவனம் முன்வரும். அந்த நேரத்தில் மக்களின் எந்தப் போராட்டமும் எடுபடாது’’ என்றார்.