[ad_1]
அதிர்ஷ்ட தேவதையின் அருள் நிறைந்த பார்வை நம் மீது எப்போது விழும்? இந்தக் கேள்விக்கு, `அதுக்கெல்லாம் யோகம் வேணும்...’, `ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கணும்’, `கொஞ்சம் நெளிவு, சுளிவோட நேக்காப் பொழைக்கத் தெரியணும்...’ என்றெல்லாம் பதில்கள் வரலாம். உண்மை அப்படியல்ல. நேர்மையான வழியில்கூட ஒருவர் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடையலாம். ஒருவரிடம் இல்லாத ஒன்று... ஏன் பலவீனம்கூட அதிர்ஷ்டம் கிடைக்கக் காரணமாகலாம். இந்த யதார்த்தத்தை எளிமையாக உணர்த்தும் கதை இது.
ரமேஷுக்கு வயது முப்பத்தி இரண்டு. அந்த வயதுக்குப் பொருந்தாத பெரிய பொறுப்புகள். அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில் கிடந்தார். அம்மா, இரண்டு தங்கைகள்... மொத்தக் குடும்பமும் ரமேஷின் வருமானத்தில்தான் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. ரமேஷுக்கு நகரத்தின் எல்லையிலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை. சாதாரணத் தொழிலாளியாகத்தான் வேலை பார்த்தான். என்றாலும், கொஞ்சம் கொஞ்சம் கடனை வாங்கியாவது குடும்பத்தை நகர்த்த முடிந்தது. அதற்கும் விதி வேட்டுவைத்தது.
வழக்கம்போல ஒருநாள் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போனபோது கேட் இறுக மூடிக்கிடந்தது. வாசலில் தொழிலாளர்கள் கூடியிருந்தார்கள். விசாரித்ததில், போதுமான வருமானம் இல்லாத்தால் ஃபேக்டரியை திடீரென சொல்லாமல் கொள்ளாமல் இழுத்து மூடிவிட்டதாகச் சொன்னார்கள். சிலர் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில தொழிற்சங்கத் தலைவர்கள், `நியாயம் கிடைக்கும் வரை போராடிப் பார்ப்போம்’ என்றார்கள். நிர்வாகத்துடன் பேசிப் பார்த்ததில் தீர்வு கிடைக்கவில்லை. `வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவிட்டது நிர்வாகம்.
ரமேஷ் கலங்கிப் போனான். ஒரு மாதச் சம்பளம் இல்லையென்றால்கூட அதோகதி. குடும்பமே நடுத்தெருவுக்கு வரவேண்டியதுதான். அவன் அதிகம் படித்திருக்கவில்லை. ஆனாலும், வேலை தேடவேண்டியதுதான். தினமும் அதிகாலையிலேயே எழுவது... பேப்பர் பார்ப்பது... வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்து விண்ணப்பம் அனுப்புவது... நேர்முகத் தேர்வுக்குச் செல்வது என்று ஒவ்வொரு நாளும் கழிந்துகொண்டிருந்தன. ஆனால், ஒரு வேலை... ஒரேயொரு வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை.
ஒருநாள் செய்தித்தாளில் `ஆபிஸ் பாய் தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்தான். `விருப்பமுள்ளவர்கள் நேரில் வரவும்’ என்று குறிப்பிட்டிருந்தது. முகவரியை எழுதிவைத்துக்கொண்டு, பஸ் பிடித்து அந்த அலுவலகத்துக்குப் போனான். நகரின் மத்தியில் இருந்தது அலுவலகம். அவன் நினைத்ததைவிடப் பெரிய கட்டடம். செக்யூரிட்டியிடம் பேசி, உள்ளே நுழைந்தான். ரிசப்ஷனில் விசாரித்து உட்காரச் சொன்னார்கள். ஒரு மணி நேரம் கழித்து அவனுக்கு அழைப்பு வந்தது.
அந்த அலுவலகத்தின் மனிதவளத் துறை மேலாளர் அவனைப் பற்றி விசாரித்தார். அவன் சான்றிதழ்களைச் சரிபார்த்தார். சில கேள்விகள் கேட்டார். ஒரு தாளைக் கொடுத்து, அதிலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொன்னார். பத்து நிமிடங்களில் நேர்முகத் தேர்வு முடிந்துவிட்டது. மேனேஜருக்கு ரமேஷைப் பிடித்துப்போய்விட்டது.
``சரிப்பா. உனக்கு வேலை கொடுக்குறோம். உன் இமெயில் அட்ரஸைச் சொல்லு... என்னிக்கி வேலையில சேரணும், மத்த விவரங்கள் என்னென்ன குடுக்கணும்... எல்லாத்தையும் மெயில்ல அனுப்புறோம்’’ என்றார் மேனேஜர்.
``சார்... என்கிட்ட கம்ப்யூட்டர் இல்லை. அதேபோல இமெயில் அட்ரஸ்னு ஒண்ணும் இல்லை.’’
மேனேஜர் ஆச்சர்யமாகப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். ``தம்பி... தப்பா எடுத்துக்காத. காலம் எவ்வளவோ மாறிடுச்சு. எங்க கம்பெனியும் ஒவ்வொரு நாளும் மாறிக்கிட்டேதான் இருக்கு. இங்கே வேலை பார்க்கறவங்களுக்கு, மெயில் ஐடி, ஆண்ட்ராய்டு போன் எல்லாம் அவசியம். இது இல்லைன்னா இங்கே உனக்கு வேலையில்லை. சாரி...’’ என்றார்.
அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தான். இங்கே வேலை இல்லை. இனி என்ன செய்வது? ஒரு வேலை வாங்காமல் வீட்டுக்குப் போகக் கூடாது என்று அவன் முடிவெடுத்திருந்தான். யாரிடமாவது, ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துத்தான் ஆக வேண்டுமா? வேறு வழியே இல்லையா? பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, இரண்டு நூறு ரூபாய்களும், சில பத்து ரூபாய்களும் இருந்தன. யோசித்தான். ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. மணி காலை 10:30. இன்னும் நேரம் நிறைய இருக்கிறது.
நகரில் இருந்த பெரிய மார்க்கெட்டுக்குப் போனான். பெரிய கூடை ஒன்றை வாங்கினான். கையிலிருந்த ஐநூறு ரூபாய்க்கு கூடை நிறையக் காய்கள் வாங்கிக்கொண்டான். தெருவில் இறங்கி நடந்தான். தெருத் தெருவாகப் போய் விற்றான். அன்று மாலைக்குள் அத்தனைக் காய்களையும் விற்றுத் தீர்த்துவிட்டான். கணக்குப் பார்த்ததில் 500 ரூபாய்க்கு 500 ரூபாய் லாபம் கிடைத்தது.
அடுத்த நாள் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அன்றைக்கு 1,000 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கினான். அன்றைக்கும் அவனுக்கு லாபம் இரு மடங்கு. ஒரு கூடை, இரு கூடைகளானது. சில மாதங்களில் தெருவோரமாகக் கடைவிரித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வியாபாரம் வளர்ந்தது. வேலைக்கு ஆள்களைச் சேர்த்தான். ஒரு கட்டத்தில் கடை, பெரிய கடை ஆனது. வியாபாரம் சூடுபிடித்தது. ஏழே வருடங்களில் ரமேஷ் மிகப் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டான்.
ஒரேயொரு சினிமாப் பாடலில் ஹீரோ பெரிய பணக்காரன் ஆவதுபோலத்தான் ரமேஷ் வாழ்க்கையிலும் நடந்தது... ஆனால், படிப்படியாக. ஒருநாள் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. நகரில் பிரபலமாக இருந்த ஒரு ஏஜென்ட்டைப் போய்ப் பார்த்தான். அவருக்கு இவனை நன்கு தெரிந்திருந்தது. வரவேற்று, அமரச் செய்து, விசாரித்தார். ஒரு விண்ணப்பத்தை எடுத்து பூர்த்தி செய்ய ஆரம்பித்தார்.
ரமேஷ் தன் பெயர், விலாசம், வயது... எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தான்.
``உங்க இமெயில் ஐ.டி சொல்லுங்க...’’ என்றார் ஏஜென்ட்.
``எனக்கு மெயில் ஐ.டி-யே இல்லை.’’
``என்ன சார் சொல்றீங்க? இமெயில் இல்லியா..? இத்தனை வருஷமா அதையெல்லாம் பயன்படுத்தவே இல்லியா? இமெயில், ஆண்ட்ராய்டு போன் இதெல்லாம் ரொம்ப முக்கியம் சார். இதெல்லாம் இல்லாமலேயே இவ்வளவு பெரிய ஆளாகியிருக்கீங்களே... இருந்திருந்தா?’’
ரமேஷ் சிரித்தபடி சொன்னான்... `ஒரு கம்பெனியில ஆபிஸ் பாயா இருந்திருப்பேன்.’’
***
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
உங்கள் பலவீனம் கூட அதிர்ஷ்டமாகலாம் - ஒரு வெற்றிக்கதை! #MotivationStory
TAGS :
COMMENTS