[ad_1]



‘‘வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை...
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை’’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை இரண்டே வரிகளில் உணர்வுபூர்வமாக உணர்த்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.


பேராசிரியரின் புகழுரை!

எழுதாமல் இருப்பவர்களையும், எழுதிக்கொண்டு இருப்பவர்களையும் எப்போது பார்த்தாலும், ‘‘எழுதுக... எழுதுக... இன்னும் எழுதுக... விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக...’’ என்று ஊக்கப்படுத்தியவர் சுரதா. அதனால்தான், ஒரு நிகழ்வின்போது சுரதா பற்றிப் பேராசிரியர் க.அன்பழகன் இப்படிக் குறிப்பிட்டார்.

‘‘நான் உணர்ந்தவகையில், சுரதா ஒரு சுயசிந்தனையாளர். பாரதிதாசனிடம் பழகி அவர் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும், அவர் யாரையும் முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை. அதன்படியே அவருக்கென ஒரு தனிநடையை உருவாக்கி அதன்வழியில் தன் படைப்புகளைப் பரவவிட்டவர். நாத்திகத்தையும், ஆன்மிகத்தையும் கடந்த நிலையில் மனித மாண்புகளைப் போற்றியவர். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது அன்பு, அறிவு ஆகியவற்றைவிட அவர் ஒழுக்கத்தின்மீதுதான் அதிகம் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதைத் தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர். தமிழில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். ஆனாலும், புதுக்கவிதை எனப்படுவது எண்ணங்களின் வெளிப்பாடுதான் என்றவர் சுரதா’’ என்று குறிப்பிட்டார்.

‘‘நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?’’  

ஒருமுறை கவிஞர் சுரதாவிடம், ‘‘நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்’’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரதா, ‘‘இது, நீ ஏன் உயிர் வாழ்கிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது’’ என்றாராம். அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை - பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். அவர், சுயமரியாதை மிக்கவர் என்பதைக் கீழ்க்காணும் கேள்விகள் மூலம் உணர்ந்துகொள்ளலாம். ‘‘உங்களுக்குப் பிடித்த கட்சி’’ என்று அவரிடம் கேட்டதற்கு, ‘‘திராவிடம்’’ என்று பதிலளித்திருக்கிறார். ‘‘பிடித்த கடவுள் எது’’ என்று கேட்டதற்கு, ‘‘அப்படி ஒருவர் இருந்தால்தானே’’ என்று பதிலளித்தாராம். ‘‘தாங்கள் யாரையும் பின்பற்றாததன் காரணம்’’ என்ற கேள்விக்கு, ‘‘நான் நாத்திகன்; பெரியார் வழியில் நடப்பவன். கவிதை என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும்தோறும், பழகும்தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சிப் பெற்றவனாகிறான்’’ என்று சுயமரியாதை சிந்தனையுடன் தெளிவாகப் பதிலளித்திருந்தாராம். 

‘‘மலரினும் மெல்லியது காதலே!’’ 

பாண்டிய மன்னர்களின் மீசையைக்கூட, 

‘‘படுத்திருக்கும் வினாக்குறிபோல மீசைவைத்த 
பாண்டியர்கள் வளர்த்த மொழி’’ 

என்று வர்ணித்தவர் கவிஞர் சுரதா. 

காதலைக்கூட, ‘‘மலரினும் மெல்லியது காதலே’’ என்றவர் சுரதா. தலைவி, தன் தலைவனைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை, தலைவி... தலைவனிடம், ‘‘சுடர் மின்னல்கண்டு தாழை மலர்வதுபோல உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’’ என்கிறார். அதாவது, மேகம் கறுத்துப்போய் மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அந்த மின்னலும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்துவிடுகிறது. அந்த மின்னலின் சுடரைக் கண்டு தாழை மலர்வதாகத் தன் உவமையை உணர்த்தியிருப்பார் கவிஞர் சுரதா. 



சுரதாவின் உவமை சாலச்சிறந்தது!

நம் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் செம்மொழியாம் தமிழ் மொழியில் பெயரிடுதல் வேண்டும் என்பதை, 

‘‘தாய்மொழியை ஒதுக்கிவைத்துப் பிறநாட்டாரின் 
தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொளநினைத்தல்
தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச் 
சம்மதிக்கும் தன்மையது போன்ற தாகும்’’ என்று உணர்த்தியிருப்பார்.

ஆதிமந்தி - ஆட்டனத்தி இருவரது வருகையையும் அழகாய்க் கட்டுவதற்கு, தொடை வகைகளான எதுகையையும், மோனையையும் எடுத்துக் கையாண்டிருப்பார் சுரதா.

‘‘வரலாற்றுப் பேரழகி ஆதி மந்தி
எதுகைவரல் போல் அடுத்துவந்தாள்; அந்தி
என்பானோ, மோனையைப்போல் முன்வந்தான்!’’

அதேபோல் மயிலின் உருவம் பற்றிய ஒரு கவிதையில்,

‘‘உன்விழி நீலம்; உன் தோகை நீளம்;
உன்னுடல் மரகதம்; உச்சிக்கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்...
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்’’ 

என்று அதன் உருவத்தை வர்ணிக்கும் கவிஞர் சுரதா, அது முகிலினைக் கண்டு ஆடுவதை... 

‘‘ஈர முகிலினை ஏன் விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்று நீர் சுடுமென்றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?’’ என்று வர்ணிக்கிறார். 

மேலும், அவருடைய இடுகாடு பற்றிய கவிதையில்,

‘‘இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை - ஆனால்
இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை’’ 

என்று நிஜத்தைப் பிரதிபலித்திருப்பார்.

இப்படித் தன்னுடைய எல்லாக் கவிதைகளிலும் பளிங்குக்கற்களைப் போன்று, மனதில் எளிதில் பதியும்படியான வரிகளைப் பதித்திருப்பார். அதனால்தான் சுரதாவுடைய உவமை ஆளுமை, சாலச்சிறந்தது என்று உலகத்தினரால் பறைசாற்றப்படுகிறது. 



சுரதாவைப் புகழ்ந்த வாலி!

‘‘கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தைத் தாம் ஏற்பதே இல்லை’’  என்று சொல்லும் சுரதா, யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான அவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ்பெற்றார். உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.


‘‘ஈரஉடை போல் நான் அவருடலில் ஒட்டிக்கொள்வேன்’’ என்று காமத்தைப் பற்றிச் சொல்லும் கவிஞர் சுரதா, அதுபோலவே... அவருடைய கவிதைகள் மூலம் இன்னும் நம்முடைய மனங்களில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");