[ad_1]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாள்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனை முடிவில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வியின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.





இந்தநிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்காக நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கியக் கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.