[ad_1]

ஜி.எஸ்.டி (GST) வரி அமலாக்கப்பட்டதிலிருந்து அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். உணவகங்களுக்கு 12 சதவிகிதம் அல்லது 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதால், உணவகங்களின் பக்கம் எட்டிப்பார்க்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டது. அண்மையில் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்பட்ட பட்டியலில் உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி, 12 மற்றும் 18 சதவிகிதத்திலிருந்து மொத்தமாக ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பானது, நவம்பர் 15-ம் தேதியிலிருந்து அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக உணவகங்களில் விலை குறையும் என நினைத்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.




சென்னையில் உள்ள பல உயர்தர உணவகங்களில் விலை குறைக்கப்படவே இல்லை. சில உணவகங்களில் விலை ஏற்றப்பட்ட கொடுமையும் நடந்தது. ஆனால், பில்லில் மட்டும் ஜி.எஸ்.டி 18 சதவிகிதம் என்பதை 5 சதவிகிதம் எனக் குறைத்திருந்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் வழங்கிய பில்லோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது இவர்களின் தில்லாலங்கடி வேலை வெட்டவெளிச்சமானது. ஆம், உணவின் விலையை அதிரடியாக உயர்த்தி, ஜி.எஸ்.டி-யைக் குறைத்து பழைய விலைக்கே சரிகட்டியிருந்தார்கள். சில உணவகங்களில் உணவின் விலை முன்பைவிட அதிகரித்திருந்தது.

உதாரணமாக, சென்னை சங்கீதா உணவகத்தில் ஜி.எஸ்.டி 18 சதவிகிதமாக இருந்தபோது ஒரு மினி லன்ச் பார்சலின் அடிப்படை விலை 105.88 ரூபாய். ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து மொத்த விலை 125 ரூபாய். ஜி.எஸ்.டி 5 சதவிகிதமாகக் குறைத்த பிறகு, மினி லன்ச் பார்சலின் அடிப்படை விலையை 124 ரூபாயாக உயர்த்தி, ஜி.எஸ்.டி 5 சதவிகிதம் சேர்த்து 130 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். ஆக, ஜி.எஸ்.டி-யில் வரி குறைந்தாலும் விலையோ ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. அதே உணவகத்தில் காபியின் விலை 29.68 என இருந்ததை, ஜி.எஸ்.டி குறைப்புக்குப் பிறகு 33 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். ஒரு ரவா மசாலாவின் விலையை 84.75 ரூபாயிலிருந்து 95 ரூபாயாக அதிகரித்துவிட்டது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் இந்த அதிரடி விலையேற்ற விவகாரம் வெளிவந்த பிறகு, தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆக, அரசு வரியைக் குறைத்தாலும் சில உணவகங்கள் ஜி.எஸ்.டி-யைக் குறைத்திருப்பதுபோல தில்லாலங்கடி வேலைகள் செய்து வருகின்றன.  ஆன்லைனில் புக் செய்து வாங்கும் உணவகங்கள், ஜி.எஸ்.டி சதவிகிதம் என்ன என்பதையே காட்டாமல் தில்லுமுல்லு செய்கின்றன. இந்த மோசடி தமிழகத்தில் மட்டும் என்றில்லாமல் இந்தியா முழுவதுமே நடந்துவருகிறது.

இதேபோன்ற விலையேற்றத்தைச் செய்துள்ள மெக்டொனால்டு உணவகம், இதற்கு ஒரு தன்னிலை விளக்கத்தைத் துண்டுபிரசுரமாக வெளியிட்டுள்ளது. அதில், `ஒரு பக்கம் ஜி.எஸ்.டி வரியை அரசு குறைத்தாலும், உள்ளீட்டு வரி வரவையும் நீக்கியுள்ளது. இந்த இழப்பின் காரணமாக, எங்களுக்குச் செயல்பாட்டுச் செலவினங்கள் அதிகரித்துள்ளன. எனவே, விலைக்குறைப்பு செய்யவியலாது' என விளக்கமளித்துள்ளது.



உணவகங்களின் இந்த விலையேற்ற மோசடி குறித்து ஜி.எஸ்.டி வரித்துறை நிபுணர் சத்யநாராயணாவிடம் கேட்டபோது, “அரசுக்கு வரி செலுத்துவதில் முறைப்படுத்தப்படாத சூழல் இருந்ததால் வாட் வரி இருந்தபோதும்கூட விலை குறையாமல் இருந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டதுமே அனைத்துப் பொருள்களின் விலையும் நிச்சயம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக விலை குறைக்கப்படாமல், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ஜி.எஸ்.டி-யைக் காரணம் காட்டியே விலையை உயர்த்தும் போக்கு காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு அதிகரித்தது.


தற்போது ஜி.எஸ்.டி கவுன்சில், இந்தச் சிக்கலைத் தீர்க்கத்தான் வரிக்குறைப்பு நடவடிக்கை எடுத்துவருகிறது. தற்போதும் விலை குறைக்காமல் இருந்தால் அது உணவகங்களின் தவறுதான். என் அனுபவத்தில், ஹாட் சிப்ஸ் உணவகத்தில் விலை குறைத்திருக்கிறார்கள். 20, 30 ரூபாய் விலை குறைந்திருப்பதைக் கண்டேன். அனைத்து உணவகங்களும் இதேபோல விலையைக் குறைத்தாக வேண்டும். பொதுமக்களுக்கு உணவகங்களின் மீது புகார் இருந்தால் அதை நிதி அமைச்சகத்துக்கு ஆதாரங்களையும் இணைத்து புகாராக அளிக்கலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனிலும் புகார் அளிக்கலாம். இதுபோன்ற புகார்கள் குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இனி இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள். ஜி.எஸ்.டி-யின் காரணமாக அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் அனைத்து விலைகளும் குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");