[ad_1]
"வீடும் கட்டிலில் படுத்தபடியான வாழ்க்கையுமே கதினு இருக்கிற என் கஷ்ட நிலையைப் பற்றி விகடன்ல பேட்டி போட்டிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு முன் பின் அறிமுகமில்லாட்டியும், மனிதநேய குணத்தால என் மேல அன்பு வெச்சு எனக்கு போன் பண்ணிப் பேசினவங்க நிறைய பேரு. தமிழ்நாடு, வெளிமாநிலம், நாடு கடந்து பல வெளிநாடுகள்ல இருந்தும்கூட என் மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற பண உதவியை அளித்த நல் உள்ளங்களுக்கு என் கண்ணீராலயும், நன்றிங்கிற வார்த்தையாலும் தவிர வேறு எந்த வகையிலயும் கைம்மாறு செய்ய முடியாத நிலையில இருக்கேன்" உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கண்ணீரால் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லிப் பேசத் தொடங்குகிறார் மாதேஸ்வரி...
விகடன் இணையதளத்தில் வெளியான மாதேஸ்வரியின் கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் அதிகம். கட்டுரை வெளியான தினத்திலிருந்து இன்று வரை இவருக்கு மருத்துவம் செய்வதற்கான உதவிகள் கிடைத்துவருகின்றன. பண வசதியில்லாமல் தனக்கு ஏற்பட்ட 'சரவாங்கி நோயால்' படுக்கையே கதியாக முடங்கிக்கிடந்தவர், தற்போது கிடைத்திருக்கும், கிடைத்துக்கொண்டிருக்கும் பொருளாதார உதவியால் விரைவில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவிருக்கிறார். இதுகுறித்து மாதேஸ்வரியின் கருத்தைப் பதிவு செய்வற்கு முன்பாக, இவரைப் பற்றி இதுவரை படிக்காதவர்களுக்காக, நவம்பர் 8-ஆம் தேதி வெளியான கட்டுரையின் முழுத் தொகுப்பு...
காலை 8.30 மணி. மிகக் குறுகிய நடைபாதையைக்கொண்ட லைன் வீடுகளில், வேலைக்குச் செல்லும் பரபரப்புடன் பலரும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இருவர் மட்டுமே வசிக்கும் அளவுக்குச் சிறியதாக இருக்கும் அவ்வீடுகளில், ஒரு வீடு மட்டும் ஆரவாரமின்றி இருக்கிறது. அதுதான் மாதேஸ்வரியின் வீடு. படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு இருந்தவர், நம் குரலைக் கேட்டதும், “உள்ள வாங்க" என அழைக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வசிப்பவர், மாதேஸ்வரி. 'சரவாங்கி' என்ற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையே வாழ்க்கையாக முடங்கிவிட்டவர். சோகத்தையும் கால் வலியையும் மீறி மாதேஸ்வரி முகத்தில் வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலி வெளிப்படுகிறது.
“பிறந்து வளர்ந்ததெல்லாம் சேலம் இளம்பிள்ளை கிராமத்துலதான். ஏழ்மையான குடும்பம். மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டு, நெசவுத்தொழிலில் பெற்றோருக்கு உதவியா இருந்தேன். 19 வயசுல கல்யாணமாகி, குமாரபாளையம் வந்தேன். விசைத்தறி மற்றும் நூல் ஓட்டக் கத்துகிட்டேன். கடுமையா உழைச்சுட்டிருந்தேன். வறுமைதான் போகாமல் ஒட்டிட்டே இருந்துச்சு'' என தன் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகப் பதிவுசெய்யும் மாதேஸ்வரி, ''சில வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த நோவு வந்துச்சு" என்கிறார்.
தன் காலினைச் சற்றே நகர்த்திவைக்க முற்பட்டு வலி தாளாமல் முகம் மாறினார். சில வலி நிவாரணி மாத்திரைகளை விழுங்கிவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார். "இப்படிதாங்க கால்களைக் கொஞ்சம் நகர்த்தினாலே வலி உசுரை இழுக்குது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கால் வலி அதிகமாகி, அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிட்டிருந்துச்சு. தினச் சாப்பாட்டுக்கே சிரமப்படுற நிலையில், ஆஸ்பத்திரிக்கு எங்கே போக. தானா சரியாயிடும்னு அசால்டா விட்டுட்டேன். ஒருகட்டத்துல வலி அதிகமாயிடுச்சு. வூட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டு, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் மாத்திரை வாங்கி சாப்பிட ஆரம்பிச்சேன். வலிக்கு அப்பப்போ ஓய்வு கிடைக்கும். திரும்ப வலிக்கும்.
கொஞ்ச நாளில் நடக்கவே ரொம்பவே சிரமமாயிடுச்சு. டாக்டர் செக் பண்ணிட்டு, இது, சரவாங்கி நோய்னு சொன்னார். நம்ம நிலைமைக்கு இப்படி ஒரு நோயா னு அழுதேன். தொடர்ந்து பல கவர்ன்மென்ட் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்குப் போயும் எந்த முன்னேற்றமும் இல்லே. சாப்பாட்டுக்கு இணையா தினசரி மூணு வேளையும் மாத்திரைகள் சாப்பிட்டேன். நொண்டி நொண்டி நடப்பேன். அப்பவும் நூல் ஓட்டும் வேலைக்குப் போயிட்டிருந்தேன். பக்கத்துல வீதி கடைக்குப் போயிட்டு வரவே அரை மணி நேரம் ஆகும். வழியில் இருக்கிற சுவரையோ, மரத்தையோ பிடிச்சுக்கிட்டுதான் நடப்பேன். வீட்டு வேலைகளையும் செய்துட்டிருந்தேன்.
என் வீட்டுக்காரரும் நானும் சேர்ந்து சம்பாதிக்கிறதே சில ஆயிரம் ரூபாய்தான். அதில் பெரும்பங்கு மாத்திரைச் செலவுக்கே போயிடுது. கை நிறைய அள்ளி மாத்திரைகளைச் சாப்பிடறதைப் பார்க்கிற யாருக்கும் கண் கலங்கிடும். ஒருகட்டத்தில் நடக்கவே முடியலை. தம்பிங்க உதவியோடு ஸ்கூட்டி வாங்கினோம். ஆனாலும், டியூவ் கட்டமுடியாமல் வித்துட்டோம். இந்த வருஷ தொடக்கத்திலிருந்து வலி இன்னும் தீவிரமாகி, தரையில் காலை வைக்கவே முடியாத நிலை. பத்து மாசங்களா படுக்கையே வாழ்க்கையா இருக்கு. படுக்கையிலும் காலை குறுக்கிதான் வெச்சிருக்கணும். தரையில் நிற்க முயற்சி செஞ்சாலும், சில செகண்ட்டுக்கு மேலே தடுமாறி விழுந்துடுவேன். ஒவ்வொரு நொடியும் உசுரை கையில் பிடிச்சுக்கிட்டு வலியோடு முடங்கிக் கிடக்கறேன்'' - அழுகையால் வார்த்தைகள் தடுமாற அமைதியாகிறார் மாதேஸ்வரி.
“மாதேஸூ... காய் வேணுமா'' என்று வீட்டு வாசலில் நின்றபடி அழைக்கும் காய்கறிக்கார அம்மாவின் குரல் கேட்கிறது. "இரும்மா வந்துட்டேன்!" என்றபடி, வலித் துடிப்புடன் கீழே இறங்க ஆயத்தமாகிறார், மாதேஸ்வரி.
தன் அருகில் இருக்கும் தலையணையைத் தரையில் போட்டு, ஒரு கைப்பிடி குச்சியின் உதவியுடன் தலையணை மீது அமர்கிறார் மாதேஸ்வரி. தரையில் தேய்த்துத் தேய்த்து கதவின் அருகில் சென்று காய்களை வாங்குகிறார். இருபது ரூபாய் கொடுத்துவிட்டு, 'மீதியை நாளைக்கு தரேம்மா' எனக் கடன் சொல்கிறார். 'சரிம்மா' என்று புன்னகைத்தவாறே விடைபெறுகிறார் அந்த அம்மா.
பிறகு, தரையில் தவழ்ந்தவாறே அடுப்படிக்குச் சென்று வேலையை ஆரம்பிக்கிறார். ''என்ன தம்பி பார்க்கறீங்க. புதுசா எதுவும் சமைக்கலை. நேத்து நைட்டு வெச்ச குழம்பைச் சூடு பண்றேன். மாத்திரைச் சாப்பிடணும்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சாப்பாடு சாப்பிட்டுட்டேன். வேலைக்குப்போன வீட்டுக்காரர் இப்போ சாப்பிட வந்துடுவார். அதனால் சூடு பண்றேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாதேஸ்வரியின் கணவர் பாண்டுரங்கன் வீட்டுக்குள் நுழைகிறார். அவருக்கு நம்மை அறிமுகம் செய்துவிட்டு தொடர்கிறார்.
“எங்களுக்குக் கிடைக்குறதைத் தவிர, அக்கம்பக்க வீட்டுக்காரங்க கொடுக்கும் ரேஷன் அரிசியில்தான் சாதம் வடிக்கிறேன். தறி ஓட்டும் வேலைக்குப் போகிற வீட்டுக்காரர் சம்பாத்தியத்தில், வீட்டு வாடகை, என் மருந்துச் செலவு, குடும்பச் செலவுனு எல்லாத்தையும் சமாளிக்கிறோம். வலின்னு சும்மா இருக்க முடியலை. கட்டிலில் உட்கார்ந்துக்கிட்டே டவல் முடிச்சுப்போடும் வேலை செய்யறேன். அதில், அம்பது ரூபாயிலிருந்து எழுபது ரூபாய் வரை கிடைக்கும். அது மளிகைச் செலவுகளுக்கு உதவுது" என்கிறார் மாதேஸ்வரி.
கணவர் பாண்டுரங்கன், “மாதேஸ்வரி, சாப்பிட்டதும் குளிப்பாட்டிவிட்டுடட்டுமா?” என்று கேட்க, தலையசைக்கிறார்.
"தினமும் குளிக்க வீட்டுக்கு வெளியே இருக்கிற பொது பாத்ரூமுக்கு, கட்டிப்பிடிச்சு தூக்கிட்டுப் போவார். என்னை முழுசா அவரால் தூக்க முடியாது. குளிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்குள்ளே வர்றதுக்குள்ள என் கால்கள் தரையில் தேய்ச்சுகிட்டே வருவேன். உயிரே போயிட்டாலும் பரவாயில்லைங்கிற மாதிரியான வலி இருக்கும். குளிக்கிறதுக்கே இவ்வளவு வேதனை. 'யூரின், டாய்லெட் எல்லாம் எப்படி'னு மட்டும் தயவுசெஞ்சுக் கேட்காதீங்க. இப்போ எனக்கு 41 வயசு. ரெண்டு கால் மூட்டுகளும் மாவு மாதிரி ஆகிடுச்சாம். செயற்கை மூட்டுப் பொருத்துறது மட்டும்தான் ஒரே தீர்வாம். அதுக்கு சில லட்சங்கள் செலவாகும். அக்கம்பக்கத்து வீட்டு ரேஷன் அரிசியை வாங்கிச் சாப்பிடுற நிலையில் லட்சங்களுக்கு எங்கே போறது. யாராச்சும் உதவி செஞ்சா பரவாயில்லை. இல்லேன்னா, இந்த வலியோடு எவ்வளவு நாள் வாழமுடியுமோ அதுவரைக்கும்..." என வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்துகிறார் மாதேஸ்வரி.
இந்தக் கட்டுரையைப்போலவே அவரது வாழ்க்கையும் முடிவின்றி அந்தரத்தில் தொங்கி நிற்கிறது!
உடல்வலியை மறக்கச் செய்து, வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறே பேசத் தொடங்குகிறார், மாதேஸ்வரி. "என்னைப் பத்தின கட்டுரை வெளியானதும் நிறைய பேர் என் நம்பரை வாங்கி இப்போ வரைக்கும் போன்ல ஆறுதலாப் பேசுறாங்க. அதோடு நிற்காம, தங்களால் இயன்ற பண உதவியையும் செய்துட்டிருக்காங்க. மனிதநேயத்தோடு எனக்கு உதவின எல்லோருக்கும் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. அன்றாட மருந்து மாத்திரை வாங்கக்கூட முடியாம, வலியில துடிச்சுகிட்டு இருந்த எனக்கு ஆறுதலா பேசின பலரின் வார்த்தைகளையும் நிவாரணியாகவே உணர்றேன். அதனால உதவின எல்லோருக்கும் என் உயிருள்ள வரை நன்றிக்கடன்பட்டிருப்பேன். எழுதப்படிக்கத் தெரியாத எனக்கு, குழந்தைகளும் இல்லை. என் மருத்துவச் செலவுக்கு உதவிட்டு இருக்கிறதும், வழிகாட்டியா அடிக்கடி மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப்போறதும் என் அக்கா பையன் ஜீவானந்தன்தான். அவன் மூலமா பலரும் தொடர்ந்து பண்ணிட்டிருக்கிற பண உதவி எனக்கு வந்து சேர்ந்திட்டிருக்குது.
உதவி செஞ்சவங்கள்ல பலரும் மிடில் கிளாஸ்தான். ஆனாலும், தங்களால் முயன்ற சில நூறு ரூபாயை அனுப்பினதையெல்லாம் பையன் ஜீவானந்தன் சொல்லக் கேட்டு, ரொம்பவே அழுதேன். 'சீக்கிரமே உங்க மருத்துவச் செலவுக்கு ஆகுற பணம் கிடைக்கும். அதைவெச்சு சிகிச்சை எடுத்து இயல்பா நடக்கிறதோடு, உங்க வாழ்வாதாரத் தேவையை சுயமா தொழில்செய்து பூர்த்தி செய்துக்கிற நிலைக்கு வர சீக்கிரமே நீங்க குணமாகணும்'னு சொன்னாங்க. எனக்கும் அதே ஆசைதாங்க இருக்கு. யாரையும் நம்பி இல்லாம, தினமும் சம்பாதிச்சு வர்ற பணத்துல எளிமையான வாழ்க்கை வாழத்தான் நானும் ஆசைப்படுறேன். என்ன பண்ண... இப்படி ஒரு நோவு வந்து என்னைப் படுத்த படுக்கையாக்கிடுச்சு. இப்போ வரைக்கும் 60 ஆயிரம் ரூபாய் வரை உதவி கிடைச்சிருக்குது. இன்னும் சிலர் அனுப்புறதா சொல்லியிருக்காங்க. அதனால அடுத்த வாரம் மருத்துவமனைக்குப் போய் ஆபரேஷன் பண்றதுக்கான முதல்கட்ட பரிசோதனைகளைச் செய்யலாம்ங்கிற யோசனையில இருக்கோம்" என்பவர் சற்றே அமைதியாகி மீண்டும் தொடர்கிறார்.
"முன்பே நான் சொன்ன மாதிரி, ஆபரேஷனுக்குச் சில லட்சங்கள் செலவாகும்னு சொல்லியிருக்காங்க. அதனால சிகிச்சையை ஆரம்பிச்சா மேற்கொண்டு ஏற்படும் பணத்தேவைக்குச் சிக்கல் ஏற்படும்ங்கிறதால நிறைய தயக்கம் இருக்குது. ஒருவேளை ஆபரேஷனுக்குப் போதுமான பணம் கிடைக்காட்டியும், வந்திருக்கும் உதவியில மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வாங்கி வரக்கூடிய சில காலத்துக்கு வாழ்க்கையை அரைகுறையாகவாவது ஓட்டலாம்" எனச் சொல்லும் மாதேஸ்வரின் முகத்தில் சோகத்தை மீறிய சிறிய புன்னகையைத் தற்போதுதான் காண முடிகிறது.
மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில்.... அனைவரும்!
மாதேஸ்வரிக்கு உதவிசெய்ய தொடர்புகொள்ள அழைக்கவேண்டிய நம்பர் : 98945 48727 (உறவினர் ஜீவானந்தன்)
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“உதவி செய்த விகடன் வாசகர்களுக்கு நன்றி!” - நெகிழும் மாதேஸ்வரி #FollowUp
TAGS :
COMMENTS