[ad_1]
Chennai: ’பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், தீவிரவாதிகளுக்கு நிதி செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், கறுப்புப் பண புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று மத்திய அரசு சூளுரைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு நிறைவுற்றுள்ள நிலையில், இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன. அதே சமயம், இன்றைய தினத்தை கறுப்புப் பண ஒழிப்பு தினமாகக் கொண்டாடுவோம் என பா.ஜ.க அறிவித்தது.பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில், இந்தியாவின் நிதிநிலைகுறித்து சென்னை தி.நகரில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ‘கறுப்புப் பணம் பதுக்குபவர்கள் பெரும்பாலும், 500,1000 போன்ற உயர் மதிப்பு நோட்டுகளில்தான் பதுக்குவார்கள். அதனால்தான் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்பது பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதி. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்போம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைகுறித்து காங்கிரஸ் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, ஊழல் நடந்துகொண்டிருந்தது. ஊழலுக்கு கருவியாக இருந்தவர் மன்மோகன் சிங். கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் காங்கிரஸுக்கு எந்த அக்கறையும் இல்லை. மன்மோகன் சிங்கின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது! - நிர்மலா சீதாராமன் #Demonetisation
TAGS :
COMMENTS