[ad_1]
“நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே... அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்” என்று ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் வ.உ.சி என்கிற சிதம்பரனார். அவருடைய நினைவு தினம் இன்று.
மேடைப் பேச்சுகள்மூலம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வ.உ.சி. குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார். ஒருசமயம், காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 1907-ம் ஆண்டு சூரத் நகருக்குச் சென்றார். அங்கு, தென்னிந்திய பிரதிநிதிகள் தங்கியிருந்த இடத்துக்கு நேரே சென்ற மகான் அரவிந்தர், “எங்கே என் மிஸ்டர் பிள்ளை” எனக் கேட்டு வ.உ.சி-யிடம் நலம் விசாரித்தாராம்.
மாலையிட்டு மரியாதை செய்த மக்கள்!
ஒருமுறை 1919-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மகாசபைக்குச் செல்ல வ.உ.சி-க்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் கையில் சுத்தமாகப் பணம் இல்லை. இதையறிந்த ஈ.வெ.ரா., வ.உ.சி-க்கு ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துக் கொடுக்கச் சொல்லி தண்டபாணியாரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறார். வ.உ.சி-யை மனதில் எண்ணிய தண்டபாணியாரோ, பெரியார் கொடுத்த பணத்தில் மூன்றாம் வகுப்புப் பயணச்சீட்டை எடுத்துக்கொடுத்து... மீதிப்பணத்தைத் திரும்பி வருவதற்காக வ.உ.சி-யிடம் கொடுத்துவிட்டார். இதுபற்றிப் பெரியாரிடமும் ஏதோ சொல்லி தண்டபாணியார் சமாளித்துவிட்டார். பூனா நகர் ரயில் நிலையத்தில் வ.உ.சி-யை வரவேற்க மக்கள் கூட்டம் மாலை மரியாதைகளுடன் குழுமியிருந்தது. அந்த ரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்த தலைவர்கள், தமக்குத்தான் மாலை மரியாதை என்று நினைத்துத் தலைகளை வெளியே நீட்டியபடி இறங்கினர். ஆனால், மக்களோ... மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்த வ.உ.சி-யைத் தேடிப் பிடித்து ‘ஜே’ என்று கோஷமிட்டு... மாலையிட்டு மரியாதை செய்து அவரையே திக்குமுக்காடச் செய்துவிட்டனராம்.
“ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளா வாழ்வதா?”
வெள்ளையர்களை விரட்டுவதற்காகச் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார் வ.உ.சி. அந்தக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசாங்கம், அந்தக் கப்பலுக்கு எதிராகப் பல சதிவேலைகளில் ஈடுபட்டது. “நான் ஆரம்பித்த இந்தக் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று முழங்கினார். இதைக் கேட்ட அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவோ, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; அவற்றை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே” என்று கூடவே சீறினார்.
இப்படி, வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது. “ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளா வாழ்வதா... பண்டம் விற்க வந்த வணிகக் கூட்டம் பாரத நாட்டை ஆள்வதென்றால், அதை நாம் பார்த்திருப்பதா. முப்பது கோடி மக்களை, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஐந்து லட்சம் ஆங்கிலேயர்கள் ஆள்வதென்றால், இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும்” என்கிற அனல்மிக்க வார்த்தைகள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்வை வளர்த்தார் வ.உ.சி.
“சதையைத் துண்டாக வெட்டினாலும் முடிவு மாறாது!”
“பேச்சுரிமை உண்டு; ‘தாய் நாடு வாழ்க’ என்று முழக்கமிடுவது குற்றமா... எங்கள் நாட்டு வாணிகம் வளம்பெற கப்பல் ஓட்டுவது குற்றமா... நாங்கள் முப்பது கோடி மக்களும் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனியும், அடக்குமுறைகளால் ஆள்வது ஆகாத காரியம். சுட்டுக்கொல்வது அல்ல... சதையைத் துண்டுதுண்டாக வெட்டியெடுத்து வேதனைப்படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. இதயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாயாது. இது உறுதி” என்று அப்போதைய ஆங்கிலேய அரசின் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் முழங்கினார். இதனால் கடும் சினமடைந்த மாவட்ட ஆட்சியர், “திருநெல்வேலியைவிட்டு உடனே வெளியேற வேண்டும். அரசியல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது” என வ.உ.சி-யை எச்சரித்தார். அதற்கு ஒப்புக்கொள்ளாததால், வ.உ.சி. கைதுசெய்யப்பட்டார்.
ஆங்கிலேய அரசை நிந்தனைப்படுத்திப் பேசியதற்காகவும், சுப்பிரமணிய சிவாவுக்கு உதவியதற்காகவும் காவல் துறையினர் வ.உ.சி. மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். தீர்ப்பில், அவருக்கு நாற்பதாண்டுக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், “பெரிய ராஜத் துரோகி... அவரது எலும்புகூட ராஜ விசுவாசத்துக்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, அவரது கையில் அகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்துக்கு இவர்கள்தான் காரணம்” என்றும் சொல்லப்பட்டது.
காந்தியடிகளுக்கு எழுதிய கடிதம்!
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட அவருக்கு, ஆங்கிலேய அரசு கொடுத்த துயரங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட அவரை, வறுமையும் வேறு குடிகொண்டிருந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் அவர், காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “கடந்த இரண்டாண்டுக் காலமாக தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் தயவே என் குடும்பத்தைக் காத்து வருகிறது. எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில், அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனானால், அது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் இழைத்த தவறாகும்” என்று எழுதியுள்ளார்.
வ.உ.சி-க்கு உதவுவதற்காகத் தென் ஆப்பிரிக்காவில் வசித்த வேதியப்பார் என்பவர், 5,000 ரூபாய் வசூலித்து காந்தியடிகள் மூலம் கொடுத்துயனுப்பியிருக்கிறார். அதை காந்திஜி, அரசியல் காரணங்களால் மறந்துபோய்விட்டார். பின்னர், கடும் அலைச்சல்களுக்கிடையே எட்டு வருடங்கள் கழித்து வட்டியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வ.உ.சி-யிடம் காந்தியடிகள் வேண்டியிருக்கிறார். அதற்கு அவர், “அவர்கள் அனுப்பிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும்... அதற்கு வட்டி எல்லாம் வேண்டாம்” என்றாராம்.
இப்படித் தன் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவின் விடுதலைக்காகக் கடைசிவரை உழைத்துத் தன்னுயிரையே நீத்த வ.உ.சி., “என்னைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே” என்று கூறி வருத்தப்பட்டாராம்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
காந்தியிடம் வட்டி வாங்க மறுத்த வ.உ.சி! - வ.உ.சி. நினைவு தின பகிர்வு | "Cut the flesh up will not change!"
TAGS :
COMMENTS