[ad_1]





Chennai: சென்னையில் கடந்த சிலநாள்களாகப் பெய்து வரும் கனமழை மீட்பு நடவடிக்கைகளில் போலீஸார் முன்னின்று சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். 




தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் தூறலாகத் தொடங்கிய மழை நேற்று 6 மணி நேரத்துக்கும் மேலாக கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. இதில், அதிகம் பாதிக்கப்பட்டது தலைநகர் சென்னைதான். நேற்று மாலை 5 மணி முதல் விடியற்காலை வரை பெய்த கனமழையால், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சென்னை மாநகரின் 112-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆறுகள் போல மழைநீர் செல்வதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்தநிலையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் காவல் துறையினரும் ஈடுபடுமாறு மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அத்துடன், முன்மாதிரியாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அதிரடி விசிட் அடித்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு காவலர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார். சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழே நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றும் பணியை போலீஸார், தீயணைப்புத் துறையினர் இணைந்து மேற்கொண்டனர். அந்தப் பகுதிக்கு நேற்று சென்ற போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் ஹெச்.எம்.ஜெயராம், கே.பெரியய்யா, இணை கமிஷனர் நஜ்முல்ஹோடா, துணை கமிஷனர் ஷியாமளாதேவி மற்றும் ஏராளமான போலீஸார், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 




அதேபோல், அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர்கள் அவ்வை சண்முகம் சாலையில் இறங்கி இன்று பார்வையிட்டனர். மேலும், கீழ்ப்பாக்கம் கொங்குரெட்டிபட்டி சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் விஸ்வநாதன், மீட்புப் பணி, நிவாரணப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுவதுடன், பொதுமக்களுக்கு உதவும்வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 




காவல் ஆணையரே மழைநீரில் இறங்கி மீட்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடுவதால், ஊக்கம் பெற்றுள்ள காவலர்கள் சுறுசுறுப்புடன் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் போலீஸார் தரப்பில் பல இடங்களில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில் மழை நீர் தேங்குவதற்குக் காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் நீர் அடைப்பினை வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரகுமார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணைஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் காவலர்களுடன் இணைந்து சரிசெய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.  
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்