[ad_1]
மருந்துகளின் நாற்றமில்லை; மருத்துவமனைக்கே உரிய இறுக்கமான சூழல் இல்லை; முகப்பில் பகவத் கீதை, பைபிள், திருக்குர் ஆன் வசனங்களும், திருவள்ளுவர், பாரதியார், காமராஜர், அண்ணா, அப்துல்கலாம் ஆகியோரின் பொன்மொழிகளும் நிறைந்திருக்கின்றன. இவற்றுடன், `முடநீக்கியல்துறை தங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கிறது. உடனே, `இது ஏதோ தனியார் மருத்துவமனை... அதில் உள்ள ஒரு துறை’ என்று நினைத்துவிட வேண்டாம். கோவை அரசு மருத்துவமனையில்தான் இந்தக் காட்சிகள்..!
முழு வார்டும் `பளிச்’செனப் படுசுத்தம். ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள், நம்பிக்கை வாசகங்கள், நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளில் திருக்குறள் ஸ்டிக்கர்கள்... என அசத்துகிறது கோவை அரசு பொது மருத்துவமனையின் `முடநீக்கியல் துறை.’ ஆண்கள், பெண்கள் இருவருக்கான வார்டுகளின் முன்புறமும் ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதில், அன்றைய தினம் பணியில் இருக்கும் மருத்துவர்கள், நர்ஸ்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன. நோயாளிகளின் அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருக்கிறது இந்த போர்டு.
`இது அரசு மருத்துவமனைதானா?’ எனச் சந்தேகம் எழும் அளவுக்கு அத்தனை சுகாதாரம்... சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பராமரிப்பு என தனியார் மருத்துவமனைகளுக்கு சவால்விடுகிறது, இந்த முடநீக்கியல் துறை. எந்த மருத்துவமனையாக இருந்தாலும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் உதவிக்கு ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள, மருந்து, மாத்திரைகளை வாங்கிவர, உணவு கொடுக்க... என ஆதரவுக்கு ஒருவர் இருக்க வேண்டும். இவர்களை `அட்டெண்டர்’ என்று குறிப்பிடுவார்கள். யாருமே இல்லாத ஆதரவற்றவர்களும் அரசு மருத்துவமனைகளை நாடி வருவதுண்டு. அவர்களுக்காகவே நாட்டிலேயே முதன்முறையாக, தனியாக அட்டெண்டர்களை நியமித்து, சிகிச்சையளிக்கிறது இந்தத் துறை.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறைத் தலைவராக இருப்பவர் மருத்துவர் வெற்றிவேல் செழியன். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``அரசு மருத்துவமனை மீது பொதுவாகவே ஒரு தவறான பார்வை எல்லோருக்கும் இருக்கிறது. அதை மாற்றத்தான் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். தனியார் மருத்துவமனைகளைவிட சிறந்த முறையில் சிகிச்சையளித்தும் வருகிறோம்.
மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளியை, மூன்றே நாள்களில் நடக்கவைக்கிறோம். `வார்டில் அதிகபட்சம் 90 பெட்கள் இருந்தால் போதுமானது’ என்று எம்.சி.ஐ (இந்திய மருத்துவ கவுன்சில்) சொல்கிறது. ஆனால், நாங்கள் சில நல்ல உள்ளங்களின் உதவியோடு 150 படுக்கைகளை இங்கே வைத்திருக்கிறோம். நோயாளிகளை எந்தச் சூழ்நிலையிலும், தரையில் படுக்கவைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முயற்சி.
நாட்டிலேயே முதன்முறையாக இந்த அரசு மருத்துவமனையில்தான் ஆதரவற்ற மக்களுக்கு, என்.ஜி.ஒ-க்களின் உதவியோடு அட்டண்டர்களை நியமித்திருக்கிறோம். ஒருநாளைக்கு நான்கு பேர் இந்தப் பணியில் இருப்பார்கள். இந்த முறையில், இப்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அட்டெண்டர் உதவி வழங்கப்படுகிறது. எங்களைப் பார்த்து, இப்போது கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு துறைகளில் இந்த `அட்டெண்டர்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், பல்வேறு ஆராய்ச்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். தட்டணுக்கள் மூலம், தோள்பட்டை வலிக்கு சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவுக்கு நவீன சிகிச்சை அளிப்பது போன்ற ஆராய்ச்சிகளில் வெற்றி கண்டிருக்கிறோம்’’ என்கிறார் வெற்றிவேல் செழியன்.
கோவை அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் துறையின் மற்றொரு சிறப்பம்சம், நோயாளிகளின் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்களை வாங்க, நோயாளிகளோ, உடனிருப்பவர்களோ செல்லத் தேவையில்லை. அந்த ரிப்போர்ட்களை நேரடியாக, துறைக்கே கொண்டுவந்து தருகிறார்கள். பெரிய அளவிலான ஸ்கேன்களுக்கு பணம் செலுத்த இயலாத சில நோயாளிகளுக்கு பண உதவி கிடைக்கவும் உதவுகிறார்கள்.
ஆதரவற்றவர்களைப் பார்த்துக்கொள்ளும் அட்டெண்டர் ஒருவரிடம் பேசினோம். ``ஆதரவற்ற நோயாளிகளுக்காக நாங்களே தனியாக உணவு சமைப்போம். அவர்களுக்கு உணவளிப்பது, குளிக்கவைப்பது, உடை மாற்றுவது, கழிவுகளை அகற்றுவது, ஷேவின் செய்துவிடுவது, உடை இல்லாதவர்களுக்கு உடை வாங்கிக் கொடுப்பது... போன்ற பணிகளைச் செய்து கொடுப்போம்.
அவர்களின் செலவுக்கு பணம் இல்லை என்றால், நாங்களே அதற்கும் உதவுகிறோம். இப்போது, திருப்பூர் அரசு பொது மருத்துவமனையிலும், இந்த அட்டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த முறையை அறிமுகப்படுத்துவோம்’’ என்கிறார் அவர்.
அரசு மருத்துவமனை... ஏழை, எளிய மக்களின் நோய் தீர்க்கும் ஒரே புகலிடம். காலம் காலமாக காரை பெயர்ந்த சுவர்கள், துர்நாற்றம் வீசும் கழிவறைகள், எச்சிலும் பாக்குக் கறைகளும் விரவிக்கிடக்கும் தரைகள், அசுத்தம்... போன்றவையே அரசு பொது மருத்துவமனைக்கான அடையாளங்களாக இருந்துவந்திருக்கின்றன. அந்த அடையாளங்களை நீக்கும் முயற்சியில் பல அரசு பொது மருத்துவமனைகளும், மருத்துவர்களும், சில தன்னார்வலர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் கோவை அரசு மருத்துவமனையின் முடநீக்கியல் துறையின் இந்த மாற்றம்! மாற்றத்தை மனமார வரவேற்போம்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆதரவற்றவர்களுக்கு தனி உதவியாளர்... முன்மாதிரி அரசு மருத்துவமனை! #CelebrateGovtHospital
TAGS :
COMMENTS