[ad_1]





Chennai: கார்ட்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலியைப் பூர்வீகமாக கொண்டவர். இவரின் முன்னோர்கள் மும்பைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்துவிட்டதால், பாலாவின் இளமைப் பருவம் மும்பையில்தான் கழிந்தது. பாலா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில்தான். தமிழ் பத்திரிகையில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக சென்னை வந்த பாலாவுக்கு, பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சியின் நட்பு கிடைத்தது. அவர்தான் பாலாவின் ஓவியத் திறமையைப் பார்த்து கார்ட்டூன் வரையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அப்படித்தான்  குமுதம் வார இதழில் பாலா கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரியத் தொடங்கினார். அப்போது அவர் வரைந்த கார்ட்டூன்கள் தனி முத்திரை பெற்றன. அதனால் பாலாவின் கார்ட்டூன்களுக்கு ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ் தனிப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது. அந்த சமயத்தில் ஈழத்தில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தில் தி.மு.க.வும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் அப்போது ஆட்சியில் இருந்தன.


அதையொட்டி கார்ட்டூனிஸ்ட் பாலா, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியையும், அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாக விமர்சித்து பல கார்ட்டூன்களை வரைந்தார். அதோடு, ஈழம் தொடர்பான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பை கொடுக்கும் நேரடி களசெயல்பாட்டாளராகவும் பாலா இருந்தார். அதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது மேடையில் இருக்கும் தலைவர்களை அப்படியே பார்த்து கேலிச்சித்திரமாக வரைவதையும் தனது பழக்கமாக வைத்திருந்தார். 



பத்திரிகையாளர் என்பதைத் தாண்டி தமிழ் தேசிய அரசியல் ஆதரவாளராக பாலா தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அதுதொடர்பான கருத்துகளையும் கார்ட்டூன்களையும் தொடர்ந்து வெளியிட்டுவந்தார், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகள் மீது கடுமையான அரசியல் விமர்சனங்களையும் தனது கார்ட்டூன்கள் மற்றும் கருத்துகள் மூலமாகப் பதிவு செய்துவந்தார். அவருடைய கருத்துகளுக்கு ஆதரவும் விமர்சனமும் சரிசமமாகக் குவிந்தன. இதுதவிர்த்து தமிழகம் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள் அனைத்திலும் தமிழகம், தமிழக மக்கள் நலன் சார்ந்து தன் அரசியல் நிலைப்பாடுகளை தீவிரமாக தனது கார்ட்டூன்கள் மூலம் பாலா வெளிப்படுத்திவந்தார். 

ஈழத்தின் துயரச் சம்பவங்கள் அனைத்தையும் கார்ட்டூன்களாக வரைந்து அதை தனிப் புத்தகமாக வெளியிட்டார். 
இந்த புத்தகம் ஈழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியவாதிகள் உள்ளிட்ட பலரிடம் முக்கியத்துவம் பெற்ற படைப்பாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நடந்தவற்றை பதிவுசெய்தார். பல ஆண்டுகள் பணிபுரிந்தபின் சமீபத்தில் குமுதம் நிறுவனத்தில் இருந்து விலகினார். அந்த நேரத்தில் பாலாவின் தந்தை மரணமடைந்ததை அடுத்து அவர் பார்த்த ரயில்வே வேலை வாரிசு அடிப்படையில் பாலாவுக்கு கிடைத்தது. ஆனால், முழு நேர பத்திரிகையாளராக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வேலையையும் ராஜினாமா செய்தார்.


அதன்பிறகு linesmedia.in என்ற இணைய ஊடகத்தைத் தொடங்கினார். அதில் தன் கருத்துகள், கார்ட்டூன்கள், அரசியல் விமர்சனங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டார். இந்நிலையில் நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக பாலா வரைந்த கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியது. அதன்பொருட்டு நெல்லை ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் பாலா கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊடகத்தினரின் கருத்துரிமையை கட்டுப்படுத்தும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக இந்தக் கைது நடவடிக்கை அமைந்துள்ளது. வீடுபுகுந்து தக்க முன்னறிவிப்போ, விளக்கமோ இல்லாமல் கைதுசெய்வது, அச்சத்தை விதைக்கும் அரசின் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த கைது நடவடிக்கைக்கு ஊடகத்தினர் தங்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர்! 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்