[ad_1]





’’ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் முறைகேடாக தண்ணீர் வழங்கியுள்ளனர்’’ என்று தமிழக வனத்துறையினர் பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள்மூலம்  25,867 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில்,  தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர், அணையின் உட்பகுதியிலிருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் மூலம்  தூத்துக்குடியிலுள்ள  21 தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு  9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தால், கடந்த 10 வருடமாக தாமிரபரணி பாசனத்தில் நெல் சாகுபடி முடங்கியதுடன், பல கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகளிலும் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை உருவானது. இதனால், 20 எம்.ஜி.டி. திட்டத்தில், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்குத் தடை விதிக்கக் கோரி, தி.மு.க., மாநில இளைஞரணியின் துணைச்செயலாளர் ஜோயல், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு, பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஜூன் 31-ம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.  விசாரணையின்போது, தமிழக வனத்துறை சார்பில் தீர்ப்பாயத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. ’’ஸ்ரீவைகுண்டம் அணை இருக்கும் இடம், வனத்துறைக்குச் சொந்தமானது. எனவே, அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கமுடியும். ஆனால், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர், தனியார் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கியது தவறு’’ என குறிப்பிட்டுள்ளனர்.




தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சட்டவிதிமுறைகளுக்குப் புறம்பாக, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால்துறை அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அரசாணையை மறைத்து, முறைகேடாகத் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் அளித்துள்ள பிரமாணப்பத்திரம் மூலமாக நிரூபணமாகியுள்ளது.  இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர், அணை இருக்கும் இடத்தை வனத்துறையிடமிருந்து வசப்படுத்திடும் வகையில் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக வனத்துறையின் பெயரிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையின் ஆவணங்களைத் திருத்தம் செய்திடும் பணிகளை மறைமுகமாக மேற்கொண்டுள்ளனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  இவ்வழக்கில், வரும் டிசம்பர் 15-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்