[ad_1]
தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் சென்று சொற்பொழிவாற்றி ஆன்மிகப்பணி செய்துவந்த வாரியார், ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய் பாபா. இதற்காக அவருக்கு அழைப்பும் விடுத்தார். எழுத்துப்பணி, சமூக, ஆன்மிகப்பணி, சொற்பொழிவு என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வாரியார் ஸ்வாமிகளுக்குச் சத்திய சாயியை பார்க்கவே நேரமில்லாது இருந்தது. ஒருவழியாகத் தனது வயது முதிர்ந்த காலத்தில் சத்திய சாயியைச் சந்திக்க சிலரோடு பெங்களூரு ஒயிட் பீல்டு ஹவுஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் வாரியார். அங்கு அவர் சிறப்பாகக் கவனிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்.
ஐந்து நாள்கள் ஆகியும் வாரியாரைச் சந்திக்க சத்திய சாய்பாபா வரவே இல்லை. அங்கு வாரியாருக்கு என்று எந்த வேலையும் இல்லை. பூஜை செய்வதும், உணவு உண்பதும், தூங்குவதுமாக நாள்களைக் கழித்தார் வாரியார். இது அவருக்குப் பிடிக்காத செயல். எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் வாரியார் ஸ்வாமிக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விட்டது. உடனே தன்கூட வந்தவர்களிடம் 'நாம் வந்து ஐந்து நாள்கள் ஆகி விட்டன. இங்கே சும்மாவே இருக்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் முருகனின் பணிக்காகவே ஒப்படைத்தவன் நான். எனவே கிளம்பலாம்' என்றார். அவருடன் வந்தவர்கள், 'நாளை காலை வரை பார்ப்போம், இல்லாவிட்டால் சொல்லிவிட்டு கிளம்பலாம்' என்றார்கள். வாரியாரும் ஒப்புக்கொண்டார். மறுநாள் காலை வாரியார் அருகே நடந்து கொண்டிருந்த பஜனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு வந்த ஸ்ரீ சத்திய சாய்பாபா, மெள்ள நடந்து போய் வாரியார் ஸ்வாமியின் அருகே சென்றார்.
கீழே குனிந்து வாரியாரிடம் 'நான் உங்களைச் சந்திக்கவில்லை என்று கோவமா? முருகனின் அருளால் உங்களிடம் எல்லாம் உள்ளது. உங்களிடம் இல்லாதது ஓய்வு ஒன்றுதான். அதைத்தானே நான் தர முடியும்' என்றார். இதைக்கேட்டு வியந்து போனார் வாரியார். உண்மைதான். வாரியார் ஓடிக்கொண்டிருந்த ஓர் அருள்வெள்ளம். அதைச் சற்று நேரம் நிறுத்திவைக்க பேராற்றல் கொண்ட ஓர் அணைதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய் பாபா
TAGS :
COMMENTS